Published : 02 Apr 2020 02:57 PM
Last Updated : 02 Apr 2020 02:57 PM

அன்றைய தினம் உடல் முழுதும் தசைப்பிடிப்பு.. கடும் முதுகுவலி .. நகரவே முடியவில்லை: பாக்.க்கிற்கு எதிரான சென்னை டெஸ்ட் தோல்வி குறித்து சச்சின் வேதனை 

1999ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த அந்தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிக்கு மிக அருகில் வந்து 12 ரன்களில் தோல்வியடைந்த டெஸ்ட் போட்டி சச்சின் வாழ்க்கையில் ஒரு தீராத கரும்புள்ளியாகவும் அவர் மனதிலிருந்து நீங்கா வேதனையாகவும் அமைந்தது.

அசாருதீன் தலைமையிலான இந்திய அணியாகும் இது.

முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 238 ரன்கள் எடுத்தது, கும்ப்ளே 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார் இந்திய அணி தன் முதல் இன்னிங்சில் சக்லைன் முஷ்டாக் பவுலிங்கில் சுருண்டு 254 ரன்களையே எடுத்தது. முஷ்டாக் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

2வது இன்னிங்சில் ஷாகித் அஃப்ரீடிக்கு ஆட்டம் பிடிக்க அவர் 141 ரன்களை விளாசினார் இதில் 21 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் அடங்கும், பாகிஸ்தான் இன்னும் கூட அதிகமாக ரன்களைக் குவித்திருக்கும் ஆனால் வெங்கடேஷ் பிரசாத் மிக அருமையான ஒரு ஸ்பெல்லில் 10.2 ஓவர்களில் 33 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை சாய்க்க பாகிஸ்தான் 286 ரன்களுக்குச் சுருண்டது.

இந்திய அணிக்கு வெற்றி இலக்கு 271 ரன்கள். லஷம்ண் டக், ரமேஷ் 5, விரைவில் வெளியேற , திராவிட் 10 ரன்களில் வெளியேற சச்சின் இறங்கி அதற்குள் சில ஷாட்களை ஆட ஸ்கோர் 50/3 என்று இந்தியா தடுமாறியது. அசாருதீன், கங்குலி இருவரையும் மலிவாக சக்லைன் வீழ்த்த இந்திய அணி 82/5 என்று ஆனது.

பாகிஸ்தானுக்கும் வெற்றிக்கும் இடையில் சச்சின் மட்டுமே என்று இருந்த போது நயன் மோங்கியா இறங்கி சச்சின் உடன் இணைந்து பிரமாதமாக சக்லைனை ஆடி அரைசதம் கண்டார் இருவரும் சேர்ந்து 126 ரன்கள் சேர்த்து ஸ்கோர் 218 என்று வந்த போது ரசிகர்கள் நிமிர்ந்து நிற்கத் தொடங்கினர், பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம் வயிற்றில் கொஞ்சம் மோட்டார் ஓடத்தொடங்கியது. ஆனால் அப்போது நயன் மோங்கியா ஆடிய ஒரு ஷாட்டை எந்தக் காலத்திலும் மன்னிக்க முடியாது, இன்று வரை சச்சின் அவரை அதற்காக மன்னிக்கவில்லை என்பதும் அனைவரும் அறிந்ததே.

52 ரன்களில் இருந்த அவர் ஏதோ திடீரென நினைவு வந்தது போல், திடீரென யாரோ ‘அறிவுறுத்தியது’ போல் வாசிம் அக்ரம் பந்தை கண்ட மேனிக்கு மட்டையை சுழற்றினார். அப்படிப்பட்ட ஷாட்டை எந்த ஒரு வீரரும் டெஸ்ட் மேட்சில் முக்கியக் கட்டத்தில் நினைத்துக் கூட பார்க்க முடியாது, படுமோசமான ஷாட் என்பதை விட, அந்த ஷாட்டை அவர் அந்தச் சமயத்தில் தேர்ந்தெடுத்தது பலரது சந்தேகத்துக்கும் காரணமானது, சச்சின் எதிர்முனையில் கடும் ஏமாற்றமும் கோபமும் அடைந்ததைப் பார்க்க முடிந்தது. எல்லைக் கோட்டருகில் சலீம் மாலிக், சச்சினைக் காட்டி ‘இவர் போய்விட்டால் இந்தியா அம்போ’ என்ற ரீதியில் சைகை செய்து ரசிகர்களை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தார். சச்சின் ஸ்கோரை சிலபல அதிரடி ஷாட்கள் மூலம் 254 வரை கொண்டு வந்து விட்டார் 136 ரன்களில் இருந்த சச்சின், சக்லைன் முஷ்டாக்கை தூக்கி சிக்சருக்கு அனுப்ப நினைத்த போது பவுண்டரி அருகே வாசிம் அக்ரமிடம் கேட்ச் ஆனார். பாகிஸ்தான் குதியாட்டம் போட்டது. அதன் பிறகு 5 ரன்களில் மீதமுள்ள விக்கெட்டுகளை வீழ்த்த இந்தியா 258 என்று 12 ரன்களில் தோற்றது.

அந்தப் போட்டி குறித்து 2002-ல் சச்சின் டெண்டுல்கர் ஸ்போர்ட்ஸ்டார் இதழுக்கு அளித்த பேட்டியில், “சென்னை எனக்கு அதிர்ஷ்டமான மைதானம், அங்கு சூழ்நிலைமைகள் ரசிகர்களின் ஆதரவு கோஷம் என்னை உண்மையில் பரவசப்படுத்துபவை. ஆம் சென்னையில் ஆடுவதென்றால் எனக்குப் பிடிக்கும். பாகிஸ்தான் போட்டிக்குப் பிறகு தோல்விக்குப் பிறகு நான் கண்ணீர் விட்டு அழுதேன். நான் கடுமையாக ஏமாந்தேன், என் வாழ்க்கையின் மிகப்பெரிய ஏமாற்றம் அது. வெற்றிக்கு மிக அருகில் வந்து தோற்றோம். மக்கள் நினைப்பதை விட இந்தத் தோல்வி என்னை கடுமையாக என்னை நோகடித்தது.

அன்று உணவு இடைவேளையின் போது எனக்கு முதுகு வலி தொடங்கியது. நல்ல வெயில், ஆனால் தொடர்ந்து முதுகு வலியுடன் ஆடினேன். பிறகு உடலின் ஒவ்வொரு பகுதியும் தசைப்பிடிப்பினால் வலி கண்டது. என்னால் நகர முடியவில்லை. மேன் மேலும் நிலமை மோசமானது. அதன் பிறகுதான் ஷாட்களை ஆடத் தொடங்கினேன் நன்றாக கனெக்ட் செய்தேன். ஒரு ஷாட் மிஸ்டைம் ஆனது அது மேட்சையே தாரைவார்த்துக் கொடுத்தது. மிகவும் மோசமான நிலையிலிருந்து மீண்டு வருவோம் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அங்கிருந்து நெருக்கமாக வந்து தோற்றோம், மிகவும் ஏமாற்றம்” இவ்வாறு கூறியுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x