Last Updated : 02 Apr, 2020 11:28 AM

 

Published : 02 Apr 2020 11:28 AM
Last Updated : 02 Apr 2020 11:28 AM

2-ம் உலகப்போருக்குப் பின் முதல் முறை: லண்டனில் நடக்கும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இந்த ஆண்டு ரத்து: கரோனாவின் கைங்கர்யம் நீள்கிறது

கோப்புப்படம்

லண்டன்

2-ம் உலகப்போருக்குப் பின் எவ்வளவு சிக்கல்கள், பிரச்சினைகள் வந்தபோதிலும் ரத்து செய்யப்படாத கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பழமையான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி முதல் முறையாக கரோனா வைரஸால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை அனைத்து இங்கிலாந்து கிளப் அதிகாரபூர்வமாக நேற்று நள்ளிரவு அறிவித்தது. இதன்படி 2020-ம் ஆண்டு விம்பிள்டன் டென்னிஸ் போட்டி நடக்காது. 2021-ம் ஆண்டு ஜூன் 28-ம் தேதி முதல் ஜூலை 11-ம் தேதி வரை நடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், முன்பு திட்டமிட்டபடி, விம்பிள்டன் டென்னிஸ் வரும் ஜூன் 29-ம் தேதி முதல் ஜூலை 12-ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1877-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், 1915-ம் ஆண்டு முதல் 1918-ம் ஆண்டு வரை முதல் உலகப்போரின் போதும், 1940-1945 வரை 2-ம் உலகப்போரின் போதும் மட்டும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி நடத்தப்படவில்லை.

இதுகுறித்து அனைத்து இங்கிலாந்து கிளப் தலைவர் இயான் ஹெவிட் கூறுகையில், “விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை இந்த ஆண்டு ரத்து செய்து கனத்த, மிகப்பெரிய முடிவை எடுத்துள்ளோம். மக்களின், ரசிகர்களின், விளையாட்டு வீரர்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.

கரோனா வைரஸால் உலக அளவில் நடத்தப்படும் பல்வேறு புகழ்பெற்ற விளையாட்டுப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டும், ஒத்திவைக்கப்பட்டும் வருகின்றன. அந்த வகையில் ஏற்கெனவே டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டன. என்சிஏஏ கூடைப்பந்துப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள் மே மாதத்திலிருந்து செப்டம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டன. ஆனால், மற்றொரு கிராண்ட்ஸ்லாமான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி மட்டும் ஆகஸ்ட் 31-ம் தேதி முதல் செப்டம்பர் 13-ம் தேதி வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதுவும் தள்ளிப்போகுமா அல்லது ரத்தாகுமா என்பது போகப்போகத் தெரியும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x