Last Updated : 22 Aug, 2015 09:42 AM

 

Published : 22 Aug 2015 09:42 AM
Last Updated : 22 Aug 2015 09:42 AM

சின்சினாட்டி ஓபன்: காலிறுதியில் ஃபெடரர், ஜோகோவிச்- நடாலை வீழ்த்தினார் லோபஸ்

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் உள்ளிட்டோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் 3-வது சுற்றில் ரோஜர் ஃபெடரர் 6-1, 6-1 என்ற நேர் செட்களில் தென் ஆப்பிரிக்கா வின் கெவின் ஆண்டர்சனை தோற் கடித்தார். ஃபெடரர் தனது காலிறுதி யில் ஸ்பெயினின் பெலிஸியானோ லோபஸை சந்திக்கிறார். லோபஸ் தனது 3-வது சுற்றில் 5-7, 6-4, 7-6 (3) என்ற செட் கணக்கில் சகநாட்டவரான ரஃபேல் நடாலுக்கு அதிர்ச்சி தோல்வியளித்தார்.

மற்றொரு 3-வது சுற்றில் பிரிட்டனின் ஆன்டி முர்ரே 3 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு 4-6, 7-6 (4), 7-5 என்ற செட் கணக்கில் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவை தோற்கடித்தார்.

ஜோகோவிச் 6-4, 2-6, 6-3 என்ற செட் கணக்கில் பெல்ஜியத்தின் டேவிட் கோபினை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். இவர் தனது காலிறுதியில் ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்காவை சந்திக்கிறார். வாவ்ரிங்கா தனது 3-வது சுற்றில் 6-7 (2), 7-6 (5), 7-6 (5) என்ற செட் கணக்கில் குரேஷியாவின் இவா கார்லோவிச்சை வீழ்த்தினார்.

மகளிர் பிரிவில் உலகின் முதல் நிலை வீராங்கனையான அமெரிக் காவின் செரீனா வில்லியம்ஸ் 6-0, 6-2 என்ற நேர் செட்களில் இத்தாலியின் கரீன் நேப்பை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். அடுத்ததாக செர்பியாவின் அனா இவானோவிச்சை சந்திக்கிறார்.

சானியா, போபண்ணா ஜோடிகள் முன்னேற்றம்

ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-ருமேனியாவின் புளோரின் மெர்ஜியா ஜோடி 1-6, 7-6 (3), 13-11 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் பியர் ஹியூஸ்-நிகோலஸ் மஹத் ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா-ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி 7-6 (4), 6-4 என்ற நேர் செட்களில் ஜெர்மனியின் ஜூலியா ஜார்ஜஸ்-போலந்தின் கிளாடியா ஜோடியை வீழ்த்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x