Published : 29 Aug 2015 07:19 PM
Last Updated : 29 Aug 2015 07:19 PM
கொழும்பு டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டம் இன்றும் கடைசியில் மழையால் பாதிக்கப்பட, ஆட்ட முடிவில் இந்தியா 8 விக்கெட்டுகளை இழந்து 292 ரன்கள் எடுத்துள்ளது.
ஆட்ட முடிவில் செடேஷ்வர் புஜாரா 135 ரன்களுடனும், இசாந்த் சர்மா 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். புஜாரா, அமித் மிஸ்ரா கூட்டணி 8-வது விக்கெட்டுக்காக 27 ஓவர்களில் 104 ரன்களைச் சேர்த்தனர்.
குறிப்பாக பின்னி சொதப்பலாக ஆட்டமிழந்த பிறகு (119/5) நமன் ஓஜா, புஜாரா கூட்டணி 6-வது விக்கெட்டுக்காக 54 முக்கிய ரன்களைச் சேர்த்தனர்.
நமன் ஓஜா தேவையில்லாத ஆக்ரோஷம் காட்டி கவுஷால் பந்தை ஸ்லாக் ஸ்வீப் செய்து லாங் ஆனில் தரங்காவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அதன் பிறகு அஸ்வின் ஓரளவுக்கு நம்பிக்கையுடன் ஆடுவார் என்று பார்த்தால், தம்மிக பிரசாத் மீண்டும் பந்து வீச அழைக்கப்பட 5 ரன்களில் வழக்கம் போல் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே 4-வது ஸ்டம்ப் லைன் பந்தை தொட்டு விக்கெட் கீப்பர் பெரேராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
66-வது ஓவரில் 180/7 என்று 200 ரன்களுக்குள்ளேயே இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் முடிந்து விடும் என்று எதிர்பார்த்த தருணத்தில் அமித் மிஸ்ரா களமிறங்கினார்.
சற்றும் எதிர்பாராத வகையில் எந்த வித அழுத்தமும் இன்றி மிகவும் சுதந்திரமாக ஆடினார், கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட பேட்ஸ்மென்கள் கூட இவ்வளவு ஆதிக்கம் செலுத்தவில்லை என்றே கூற வேண்டும்.
இன்றைய தினத்தின் அயராத உழைப்பாளி பந்துவீச்சாளரான தம்மிக பிரசாத் பந்தை பாயிண்டில் தன்னம்பிக்கையான ஷாட்டில் பவுண்டரியுடன் கணக்கைத் தொடங்கினார். பிரசாத்தை நாள் முழுதும் மற்ற பேட்ஸ்மென்கள் தடவிக் கொண்டிருக்க, தனது 2-வது பவுண்டரியையும் பிரசாத் பந்தில் அடித்தார் மிஸ்ரா, இம்முறை லெக் திசை பந்து மிட்விக்கெட்டில் தரையோடு தரையாக எல்லைக் கோட்டைக் கடந்தது.
இதே பிரசாத் வீசிய 70-வது ஓவரில் மேலும் அதிசயிக்கத் தக்க வகையில் ஷார்ட் பிட்ச் பந்தை கட்டுப்பாட்டுடன் மிட்விக்கெட்டில் புல் ஆடி பவுண்டரி விளாசினார், அதே ஓவரில் ஓவர் பிட்ச் பந்து ஒன்று நேர் பவுண்டரிக்கு பறந்தது. இடையிடையே கவுஷாலை சில அருமையான தடுப்பாட்டத்தையும், சில ஷாட்களையும் ஆடினார். ஆனால் இவையெல்லாம் பவுண்டரி போகாத 2, 3 என்று அடிக்கப்பட்ட ரன்கள்.
மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் நுவான் பிரதீப் வந்தவுடன் ஒரு பளார் கட் ஷாட்டில் பவுண்டரியுடன் அவரை வரவேற்றார் மிஸ்ரா. மீண்டும் பிரசாத் பந்தில் கவர் டிரைவில் ஒரு பவுண்டரி. பிறகு ரங்கனா ஹெராத் பந்தை மேலேறி வந்து அற்புதமான எக்ஸ்ட்ரா கவர் டிரைவ் பவுண்டரிக்கு பந்தை விரட்டி 71-வது பந்தில் 7 பவுண்டரிகளுடன் அரைசதம் கண்டார்.
59 ரன்களில் இவரும் ஆக்ரோஷம் காட்டும் மூடில் இருந்ததால், ஹெராத் பந்தை மீண்டும் மேலேறி வந்தார், ஆனால் ஷாட் சிக்கவில்லை, மட்டையின் உள்விளிம்பில் பட்டு விக்கெட் கீப்பர் பெரேராவிடம் செல்ல அவர் தடுமாறினாலும் பந்தை ஸ்டம்பில் அடித்தார்., மிஸ்ராவின் அபாரமான இன்னிங்ஸ் முடிவுக்கு வந்ததோடு மிஸ்ரா, புஜாரா கூட்டணி ஸ்கோரை 180/7 என்ற நிலையிலிருந்து 284/8 என்று கொண்டு வந்தனர். மிஸ்ரா 87 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் எடுத்தார்.
மிஸ்ராவின் அற்புதமான ஆட்டத்தினால் புஜாராவின் அழுத்தம் குறைய அவரும் சுதந்திரமாக ஆடத் தொடங்கினார். அவர் 277 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் 135 நாட் அவுட். இந்தியா 292/8.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT