Published : 30 Mar 2020 06:22 PM
Last Updated : 30 Mar 2020 06:22 PM
டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராகக் களமிறங்கி அதிரடி ஆட்டத்தைப் பழக்கப்படுத்தி மரபுகளை உடைத்தவர் வீரேந்திர சேவாக் அல்ல, ஷாகித் அப்ரிடிதான் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் புதிதாக வம்பிழுத்துள்ளார்.
யூடியூப் சேனலுக்கு பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரமும், ஷாகித் அப்ரிடியும் பேட்டி அளித்தனர். அப்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் மரபாக, நிதானமாக விளையாட வேண்டும் என்ற விதிமுறைகளை உடைத்தவர் சேவாக் அல்லது அப்ரிடியா என்ற பேச்சு எழுந்தது.
அப்போது அதற்கு பதில் அளித்து வாசிம் அக்ரம் பேசுகையில், “வீரேந்திர சேவாக் இப்போது வந்தவர். ஆனால், 1999 - 2000 ஆம் ஆண்டிலேயே டெஸ்ட் கிரிக்கெட்டின் மரபுகளை உடைத்து விளையாடியவர் எங்கள் நாட்டு வீரர் ஷாகித் அப்ரிடிதான். அதிரடி ஆட்டத்தைக் கற்றுக்கொடுத்தவர் அப்ரிடி.
நான் ஒரு பந்துவீச்சாளராக இருந்தாலும்கூட, அப்ரிடியை ஆட்டமிழக்கச் செய்ய முடியும் எனத் தெரியும். ஆனால், அதேசமயம் மோசமான பந்துகள் வீசினால் என் பந்துகளில் அவர் சிக்ஸரையும், பவுண்டரிகளையும் விளாசுவார் என்பதும் எனக்குத் தெரியும்.
இன்றுள்ள பலரும் டெஸ்ட் போட்டிகளில் அதிரடியான ஆட்டத்தைப் புகுத்தியது சேவாக் என்றும் அதன்பின் வார்னர் என்றும் சொல்கிறார்கள். இருவரால்தான் பந்துவீச்சாளர்களுக்குக் கடினமான காலம் இருந்தது என்றெல்லாம் பேசுகிறார்கள்.
இந்திய அணிக்கு எதிராக சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டியில் அப்ரிடி அடித்த அடியை யாரும் மறக்கமாட்டார்கள். அந்த டெஸ்ட் போட்டியில்தான் அப்ரிடி டெஸ்ட் போட்டியில் முதன்முதலாக அறிமுகமானார். தொடக்க வீரராகவும் களமிறக்கினேன்.
1999 -2000 ஆம் ஆண்டில் நடந்த அந்த டெஸ்ட் போட்டிக்கு பாகிஸ்தான அணியில் பாகிஸ்தான் அணியில் அப்ரிடி இடம் பெற வேண்டும் என்று அப்போது தேர்வுக்குழுத் தலைவராக இருந்த இம்ரான் கானிடம் நான் கேட்டேன். சில தேர்வுக்குழுவினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனால், இம்ரான் கான் மறுப்பு ஏதும் தெரிவிக்காமல், அப்ரிடியை அந்த தொடருக்குத் தேர்வு செய்து அனுப்பி வைத்தார். அப்ரிடியைத் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கினால் நிச்சயம் ஒரு போட்டியில் வெற்றியைப் பெற்றுக் கொடுத்துவிடுவார் என்று தெரிவித்தார்.
அதேபோல் அந்த டெஸ்ட் போட்டியில் அப்ரிடி தொடக்க வீரராகக் களமிறங்கி தனது முதல் டெஸ்ட் சதத்தை நிறைவு செய்தார். 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நாங்கள் 2-1 என வென்றோம்.
சென்னை டெஸ்ட் போட்டியில் அப்ரிடி அடித்த ஷாட்களை இன்னும் மறக்கமாட்டார்கள். களத்தில் நங்கூரமிட்ட அப்ரிடி, கும்ப்ளே, சுனில் ஜோஷி ஆகியோரின் பந்துவீச்சை நொறுக்கி சிக்ஸராக விளாசினார். 141 ரன்களை அப்ரிடி விளாசியதை என்னால் மறக்க முடியாது” எனத் தெரிவித்தார்.
ஷாகித் அப்ரிடி தன்னை எப்போதும் ஒரு டெஸ்ட் வீரராகவே காட்டிக்கொண்டது இல்லை. 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அப்ரிடி 5 சதங்கள் உள்பட 1,716 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். ஆனால், சேவாக் 104 டெஸ்ட் போட்டிகளில் 2 முச்சதங்கள் உள்பட 23 சதங்கள், 8,586 ரன்கள் குவித்துள்ளார். சேவாக்குடன், அப்ரிடியை ஒப்பிட்டு வாசிம் அக்ரம் பேசியது எந்த விதத்தில் நியாயமாக இருக்கும் என்பது தெரியவில்லை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT