Published : 30 Mar 2020 05:42 PM
Last Updated : 30 Mar 2020 05:42 PM
எந்தச் சூழலுக்கும் ஏற்ற பேட்ஸ்மேன் லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கரா அல்லது மே.இ.தீவுகள் அணி வீரர் பிரையன் லாராவா என்று ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஜாம்பவான் ஷேன் வார்ன் பதிலளித்துள்ளார்.
கரோனா வைரஸ் பாதித்த ஆஸ்திேரலியாவில் பெரும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காக இன்ஸ்டாகிராமில் ஷேன் வார்ன் நேரடியாக உரையாடினார். அப்போது அவரிடம் ரசிகர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
அவரிடம் எந்த சூழலுக்கும் ஒத்துழைத்து ஆடும் பேட்ஸ்மேன் என்றால் யாரைக் குறிப்பிடுவீர்கள்? பிரையன் லாரா அல்லது சச்சின். இதில் யார் பொருத்தமானவர்கள் என்று கேட்டனர்.
இதற்கு ஷேன் வார்ன் பதில் அளிக்கையில், “எந்த சூழலிலும் விளையாடும் பேட்ஸ்மேனைத் தேர்வு செய்ய வேண்டும். அதிலும் சச்சின், லாரா இருவரில் யாரைத் தேர்வு செய்வீர்கள்? எனக் கேட்டால் நான் சச்சின் டெண்டுல்கரைத்தான் தேர்வு செய்வேன்.
ஆனால், கடைசி நாளில் 400 ரன்கள் இலக்கை எட்ட வேண்டும். இரு வீரர்களில் யாரைத் தேர்வு செய்வீர்கள் என்று கேட்டால் நான் நிச்சயமாக லாராவைத் தேர்வு செய்வேன். இந்த இரு வீரர்களும் இரவும் பகலும் போன்றவர்கள். இவர்களுக்கு அடுத்துதான் மற்ற வீரர்கள் வர முடியும்” எனத் தெரிவித்தார்.
சச்சின் டெண்டுல்கர் இதுவரை 200 டெஸ்ட் போட்டிகளில் 15 ஆயிரத்து 921 ரன்களும், 463 ஒருநாள் போட்டிகளில் 18,426 ரன்களும் சேர்த்துள்ளார். பிரையன் லாரா 131 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 11,953 ரன்களும், 299 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 10,405 ரன்களும் சேர்த்துள்ளார்.
ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ் குறித்துக் கேட்டபோது, அதற்கு வார்னே பதில் அளிக்கையில், “ மிகவும் முக்கியமான கட்டத்தில் ஒரு அணியை வழிநடத்த முடியும் என்றால் அது ஸ்டீவ் வாஹ் மட்டும்தான். ஸ்டீவ் வாஹ் மேட்ச் வின்னர் என்று சொல்வதைவிட, மேட்ச் சேவர் என்று சொல்லலாம். ஆலன் பார்டன் தலைமையில் எனக்குப் பிடித்த ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் ஸ்டீவ் வாஹ்க்கு எப்போதும் இடம் உண்டு” எனத் தெரிவித்தார்.
தன்னுடைய கனவு அணி குறித்து வார்னே கூறுகையில், “நான் எப்போதும் என்னுடன் விளையாடிய வீரர்களை வைத்துதான் அணியைத் தேர்வு செய்கிறேன். அதனால்தான் டேவிட் வார்னர் என்னுடைய அணியில் இல்லை. வார்னர் சிறந்த பேட்ஸ்மேன்தான், தொடக்க ஆட்டக்காரர்தான்” எனத் தெரிவித்தார்.
ஷேன் வார்ன் அணியில் மேத்யூ ஹேடன், ஸ்லாடர் தொடக்க ஆட்டக்காரர்களாகவும், ரிக்கி பாண்டிங், மார்க் வாஹ், பார்டர், ஸ்டீவ் வாஹ் ஆகியோர் நடுவரிசையிலும், அதன்பின் கில்கிறிஸ்ட், மெக்ராத், கில்லஸ்பி, ப்ரூஸ் ரீட் ஆகியோர் வேகப்பந்துவீச்சாளர்களாகவும், டிம் மே சுழற்பந்துவீச்சாளராகவும் இருப்பார் எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT