Published : 30 Mar 2020 03:56 PM
Last Updated : 30 Mar 2020 03:56 PM

ஸ்பின் பவுலிங்குக்கு எதிராக தான் பார்த்ததில் விவிஎஸ் லஷ்மண் தான் சிறந்த வீரர்: இயன் சாப்பல் புகழாரம் 

கரோனா வைரஸுக்கு எதிராக கிரிக்கெட் உலகம் பொறுப்பான முறையில் நடந்து கொண்டு கிரிக்கெட் போட்டிகளை உடனடியாக ரத்து செய்தது என்று கூறும் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரரும் மிக நுட்பமான கிரிக்கெட் கேப்டனும், நுணுக்கமான கிரிக்கெட் அலசல்வாதியுமான இயன் சாப்பல் ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்தில் எழுதிய பத்தியில் ‘நான் பார்த்ததிலே அவர் ஒருவரைத்தான்’ என்று விவிஎஸ் லஷ்மணை ஸ்பின் பவுலிங்கின் சிறந்த வீரர் என்று வர்ணித்துள்ளார்.

அதற்காக வேகப்பந்து வீச்சில் அவர் சோடைபோகக்கூடியவர் அல்ல என்று கூறிய இயன் சாப்பல் 2000-ம் ஆண்டில் சிட்னியில் விவிஎஸ் தொடக்க வீரராக இறங்கி 167 ரன்களை விளாசிய போது, “சக்தி வாய்ந்த ஹூக் ஷாட், புல் ஷாட், ஆகியவற்றை பிரெட் லீ, கிளென் மெக்ராவுக்கு எதிராக ஆடிக்காட்டியதையும் மிகப்பெரிய இன்னிங்ஸ் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதே போல் ஸ்பின் பவுலிங்கை விவிஎஸ் ஆடிய விதத்துக்கு உதாரணமாக 2001-ல் கொல்கத்தாவில் இந்திய கிரிக்கெட்டைப் புரட்டி போட்ட 281 ரன் இன்னிங்சில் ஷேன் வார்ன் உள்ளிட்டோரை ஆடிய விதம் பற்றி விதந்தோதியுள்ளார்:

“கொல்கத்தாவில் லஷ்மணின் அசாத்தியமான 281 ரன்கள் இன்னிங்ஸ் நான் பார்த்ததிலேயே ஸ்பின் பவுலிங்குக்கு எதிரான டாப் கிளாஸ் இன்னிங்ஸ் ஆகும். அந்தப் பிரமாதமான தொடர் முடிந்த பிறகு அந்த இன்னிங்ஸில் லஷ்மணுக்கு பவுலிங் செய்த அனுபவம் பற்றி ஷேன் வார்னிடம் கேட்டேன் அதற்கு அவர் கூறிய போது, “நான் மோசமாக வீசவில்லை.” என்றார் நானும் ஆம் என்றேன். 3 அடி மேலேறி வந்து லெக் ஸ்பின்னை நினைத்துப் பார்க்க முடியாத ஆன் டிரைவ் ஆடினார் என்றால், அதே லெந்தில் அடுத்த பந்தை பின்னால் சென்று கட் ஆடுகிறார். அது மோசமான பவுலிங், தவறான பவுலிங் அல்ல மாறாக அவரது கிரேட் ஃபுட்வொர்க், என்றார் ஷேன் வார்ன்.

அந்த இன்னிங்சில் 452 பந்துகள் ஆடிய லஷ்மண், ஷேன் வார்னை இவ்வாறு முழுக்க முழுக்க எதிர்கொண்டார். 44 பவுண்டரிகள் அடித்தார். இங்குதான் லஷ்மணின் வெற்றியின் ரகசியம் இருக்கிறது. பந்தை சீரான முறையில் தரையோடு தரையாகவே அவர் ஆடினார். அந்த இன்னிங்ஸுக்குப் பிறகே இந்திய அணி டைட் சூழ்நிலையில் இருந்தாலும் லஷ்மண் அதைப் பின்னுக்குத் தள்ளி அடுத்த பந்துக்குத் தயாராவார், இந்தத் திறமைதான் அவரையும் டக் வால்டர்ஸையும் என்னை ஒப்பிட வைக்கிறது.

ஸ்பின் மட்டுமல்ல லஷ்மன் எந்த ஒரு பந்து வீச்சுக்கு எதிராகவும் மிகச்சிறந்த பேட்ஸ்மென், மெக்ரா, பிரெட் லீயின் வேகத்துக்கு எதிராக சிட்னியில் அவர் அடிதத 167 ரன்களின் போது ஆடிய புல்ஷாட், கட்ஷாட்கள் ட்ரைவ்கள் மறக்க முடியாதவை ஆனாலும் 281 இன்னிங்ஸ் அவரை விளக்கிய உறுதியான ஆட்டமாகும்.” என்று எழுதியுள்ளார் இயன் சாப்பல்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x