Last Updated : 15 Aug, 2015 12:30 PM

 

Published : 15 Aug 2015 12:30 PM
Last Updated : 15 Aug 2015 12:30 PM

மான்ட்ரியால் மாஸ்டர்ஸ்: காலிறுதியில் ஜோகோவிச், முர்ரே, நடால்

மான்ட்ரியால் மாஸ்டர்ஸ் (ரோஜர் கோப்பை) டென்னிஸ் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பிரிட்டனின் ஆன்டி முர்ரே, ஸ்பெயினின் ரஃபேல் நடால், அமெரிக்காவின் ஜான் இஸ்னர் உள்ளிட்டோர் காலிறுதிக்கு முன்னேறினர்.

கனடாவின் மான்ட்ரியால் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற 3-வது சுற்றில் ஜோகோவிச் 6-2, 6-1 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் ஜேக் சாக்கை வீழ்த்தினார். இதன்மூலம் மாஸ்டர்ஸ் போட்டியில் தொடர்ச்சியாக 28-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

மான்ட்ரியால் மாஸ்டர்ஸ் போட்டியில் 3 முறை சாம்பியன் பட்டம் வென்றவரான ஜோகோவிச், தனது காலிறுதியில் லத்வியாவைச் சேர்ந்த தகுதி நிலை வீரரான எர்னஸ்ட் குல்பிஸை சந்திக்கிறார். குல்பிஸ் தனது 3-வது சுற்றில் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் யங் டொனால்டை வீழ்த்தினார்.

போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ஆன்டி முர்ரே 6-3, 6-2 என்ற நேர் செட்களில் லக்ஸம்பர்க்கின் ஜில்ஸ் முல்லரைத் தோற்கடித்தார். காலிறுதியில் பிரான்ஸின் ஜோ வில்பிரைட் சோங்காவை சந்திக்கிறார் முர்ரே. சோங்கா தனது 3-வது சுற்றில் 7-6 (7), 6-3 என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் பெர்னாட் டாமிக்கை தோற்கடித்தார்.

மான்ட்ரியாலில் 3 முறை சாம்பியன் பட்டம் வென்றவரான ரஃபேல் நடால் 6-3, 6-3 என்ற நேர் செட்களில் ரஷ்யாவின் மிக்கேல் யூஸ்னியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். அடுத்ததாக ஜப்பானின் நிஷிகோரியை சந்திக்கிறார் நடால். போட்டித் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள நிஷிகோரி தனது 3-வது சுற்றில் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் பெல்ஜியத்தின் டேவிட் கோஃபினை தோற்கடித்தார்.

மற்றொரு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அமெரிக்காவின் ஜான் இஸ்னர் 7-5, 6-3 என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸை வீழ்த்தினார். அடுத்த சுற்றில் பிரான்ஸின் ஜெர்மி சார்டியை சந்திக்கிறார் இஸ்னர்..

ஜோகோவிச், முர்ரே-50

நேற்றைய ஆட்டத்தில் வெற்றி கண்டதன் மூலம் ஜோகோவிச், ஆன்டி முர்ரே ஆகியோர் 2015 சீசனில் தங்களின் 50-வது வெற்றியைப் பதிவு செய்தனர். ஜோகோவிச் இந்த சீசனில் இதுவரை 53 ஆட்டங்களில் ஆடி 3-ல் மட்டுமே தோற்றிருக்கிறார். இந்த சீசனில் இரு கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள், 4 மாஸ்டர்ஸ் பட்டங்கள், 6 ஏடிபி பட்டங்களை வென்றுள்ளார்.

கிர்ஜியோஸுக்கு ரூ.8 லட்சம் அபராதம்

மான்ட்ரியால் மாஸ்டர்ஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் வாவ்ரிங்காவுக்கு எதிராக 2-வது சுற்றில் விளையாடினார் ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸ். அந்த ஆட்டத்தில் காயம் காரணமாக வாவ்ரிங்கா பாதியிலேயே வெளியேறியபோது, அவருடைய தோழி டோனா வெகிச்சையும், மற்றொரு டென்னிஸ் வீரரான தனாஸியையும் இணைத்து தவறாக பேசினார் கிர்ஜியோஸ். இதனால் கடும் கோபமடைந்த வாவ்ரிங்கா, கிர்ஜியோஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏடிபியை வலியறுத்தியிருந்தார்.

அதைத் தொடர்ந்து கிர்ஜியோஸுக்கு நேற்று முன்தினம் ரூ.6.5 லட்சம் அபராதம் விதித்த ஏடிபி, விளையாட்டு வீரருக்கான நடத்தை விதிமுறையை மீறியதற்காக மேலும் ரூ.1.5 லட்சம் அபராதத்தை விதித்துள்ளது. இந்த விவாகரம் தொடர்பாக விசாரணையையும் தொடங்கியுள்ளது ஏடிபி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x