Published : 27 Mar 2020 01:34 PM
Last Updated : 27 Mar 2020 01:34 PM
கரோனா வைரஸ் விழிப்புணர்வு தொடர்பாக வீடியோ வெளியிட்டு மக்களிடம் பேசி வந்த மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர், கரோனாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.
உலகை அச்சுறுத்தும் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் பல்வேறு நாடுகளும் இறங்கியுள்ளன. உலக அளவில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர். 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவிலும் ஊடுருவிய கரோனா வைரஸுக்கு இதுவரை 18 பேர் பலியாகியுள்ளனர். 750்க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கையில் முக்கியமாக சமூக விலக்கைக் கடைப்பிடிக்க மத்திய அரசு வலியுறுத்தியது. அதன் ஒரு பகுதியாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியது.
ஊரடங்கு உத்தரவு தொடர்பாக பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பின், நட்சத்திர வீரரும், லிட்டில் மாஸ்டருமான சச்சின் டெண்டுல்கர், தனது ட்விட்டர் பக்கத்தில் கரோனா விழிப்புணர்வு தொடர்பாக வீடியோ வெளியிட்டார். அதில், “ மக்களிடம் இருகரம் கூப்பிக் கேட்கிறேன், தயவுசெய்து வீட்டை விட்டு வெளிேய செல்ல வேண்டாம்” எனக் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் சச்சின் டெண்டுல்கர் ரூ.50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். விளையாட்டு வீரர்களில் சச்சின் டெண்டுல்கர் அளித்த நன்கொடைதான் இதுவரை மிக அதிகமாகும்.
இதுகுறித்து சச்சினுக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறுகையில், “சச்சின் டெண்டுல்கர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி வழங்கியுள்ளார். பிரதமர் நிவாரணத் திட்டத்துக்கு ரூ.25 லட்சமும், மகாராஷ்டிரா மாநில முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சத்தையும் வழங்கியுள்ளார்” எனத் தெரிவித்தனர்.
இர்பான் பதான், யூசுப் பதான் சகோதரர்கள் போலீஸார், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோருக்கு 4 ஆயிரம் முகக் கவசங்களை வழங்கியுள்ளனர். தோனி மூலம் புனேவில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் வழங்கப்பட்டுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மேற்கு வங்கத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி வழங்குவதற்காக ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT