Published : 27 Mar 2020 12:37 PM
Last Updated : 27 Mar 2020 12:37 PM
இன்றைய தினமான மார்ச் 27-ம் தேதி 1994ம் ஆண்டு அன்று இந்திய அணி நிர்வாகம் அந்த முக்கியமான முடிவை எடுக்கவில்லை எனில் சச்சின் டெண்டுல்கர் என்ற 100 சதங்கள் அடித்த சாதனையாளரை நாம் பெற்றிருக்க முடியுமா என்பது ஐயமே.
ஆம், சச்சின் டெண்டுல்கரை ஒருநாள் போட்டிகளில் தொடக்க வீரராக களமிறக்கிய முதல் போட்டி, 1994ம் ஆண்டு மார்ச் 27-ல் நடந்த நியூஸிலாந்துக்கு எதிரான ஈடன் பார்க் போட்டியாகும் இது, இந்தத் தொடரில் ஏற்கெனவே ஒரு போட்டியில் தோற்ற நிலையில் இந்திய அணி ஈடன் பார்க்கில் வந்திறங்கியது, அசாருதீன் இந்திய அணியின் கேப்டன்.
நவ்ஜோத் சிங் சித்து ஆடாததால் அஜய் ஜடேஜாவுடன் சச்சின் டெண்டுல்கரை இறக்கும் முடிவுக்குக் காரணம் சச்சின் டெண்டுல்கர்தான், அவர்தான் அப்போதைய பயிற்சியாளர் அஞ்சுமன் கெய்க்வாட்டிடம் தன்னை இறக்குமாறு போராடி அந்த வாய்ப்பைப் பெற்றார்.
டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் கென் ருதர்போர்ட் முதலில் பேட் செய்ய தீர்மானித்தார், இவர் ஒரு சிறந்த கேப்டன், பீல்டர்களை செஸ் காயின் நகர்த்துவது போல் துல்லியமாக நகர்த்துபவர். அதிகம் அறியப்படாத மிகப்பெரிய கேப்டன், இவர் ஒரு பள்ளி ஆசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த முறை டாஸ் முடிவில் அவர் தவறிழைத்தார், நல்ல ஈரப்பதம் உள்ள ஸ்விங் பந்து ஆட்டக்களத்தில் கபில்தேவ், ஸ்ரீநாத்துக்கு எதிராக அவர் முதலில் பேட் செய்ய தீர்மானித்திருக்கக் கூடாது.
இந்திய அணியில் கபில்தேவ், ஸ்ரீநாத், சலைல் அங்கோலா ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களும், ராஜேஷ் சவுகான், அனில் கும்ப்ளே, ஆகிய ஸ்பின்னர்களும், லாலிபாப் பவுலர் அஜய் ஜடேஜாவும் இருந்தனர்.
நல்ல உதவிகரமான பிட்சில் கபில், ஸ்ரீநாத்தை ஒன்றும் ஆட முடியவில்லை. கபில்தேவ், அங்கோலா தலா 2 விக்கெட்டுகள் ஸ்ரீநாத் ஒரு விக்கெட்டைக் கைப்பற்ற 34/5 என்று சரிந்தது நியூசி. அதுவும் கபில்தேவ், ஸ்டீபன் பிளெமிங்கை வீழ்த்தியது அற்புதமான ஒரு பந்து 28 பந்துகள் ஆடிய இன்றைய சிஎஸ்கே பயிற்சியாளர் 6 ரன்களையே எடுக்க முடிந்தது, கபில்தேவ் அவரை ஆட்டிப்படைத்து கடைசியில் எட்ஜ் செய்ய வைத்தார்.
34/5 என்ற நிலையிலிருந்து கிறிஸ் ஹாரிஸ் என்ற இடது கை ஆல்ரவுண்டர் 71 பந்துகளில் டெஸ்ட் மேட்ச் ரக 50 ரன்களை எடுக்க ஆடம் பரோர் 23 ரன்களைச் சேர்க்க கடைசியில் பிரிங்கிள் 17 ரன்களை சேர்க்க 49.4 ஒவர்களில் நியூஸிலாந்து 142 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது, கபில்தேவ் 10 ஒவர் 18 ரன் 2 விக்கெட், ஸ்ரீநாத் 7.4 ஓவர் 17 ரன் 2 விக்கெட். கும்ப்ளே 10 ஓவர் 2 மெய்டன் 20 ரன், ராஜேஷ் சவுகான் 43 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள்.
பிட்சின் தன்மை 143 ரன்கள் என்பதி கடினமே என்பதை அறிவுறுத்தியது. ஆனால் சச்சின் டெண்டுல்கர் என்ற மேதை அன்றுதான் ஒருநாள் போட்டிகளில் அவதரித்தார்.
அவரும் அஜய் ஜடேஜாவும் இறங்கினர். சச்சின் டெண்டுல்கர் ஏற்கெனவே 1990-ல் டெர்பி ஷயருக்கு எதிராக ஒரு இன்னிங்சில் காட்டடி அடித்த நினைவு நம்மிடையே அப்போது இருந்தது.
நியூஸிலாந்து அணியில் டேனி மாரிசன், பிரிங்கிள் என்ற டீசண்டான ஸ்விங் பவுலர்கள் இருந்தனர், ஆனால் இந்த அல்ட்ரா-மாடர்ன் ஹிட்டிங் சச்சின் டெண்டுல்கர் 142 ரன்களை ஒரு மணி நேரமா, ஒன்றரை மணி நேரமா என்று கேட்டுக் கேட்டு அடித்தார்.
அது போன்ற அடியை நியூஸிலாந்து ரசிகர்கள் அல்ல இந்திய ரசிகர்களும் கண்டு களித்திருக்க அது வரை வாய்ப்பில்லை. பேக் அண்ட் அக்ராஸ் போய் எந்த லெந்தில் வீசினாலும் பளார் பளார் என்று தூக்கித் தூக்கி அடித்தார், கட், புல், ட்ரைவ், காட்டடி என்று பலவிதமான ஷாட்களை ஆட அவரது கால்நகர்த்தகளுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை, களத்தில் பீல்டர்கள் பறக்கும் பந்தை வெறுமனே வேடிக்கைதான் பார்க்க முடிந்தது. தொடக்க ஒவர்களிலேயே மாரிசனை 5 பவுண்டரிகள் பிரிங்கிளை 2 பௌண்டர்கள் என்ரு 7 பவுண்டரிகள் அதிவிரைவில் வந்தன.
அதாவது 13 ஸ்கோரிங் ஷாட்களில் 50-ஐ எட்டினார் சச்சின் டெண்டுல்கர், இதில் 2 4 4 4 4 3 4 4 4 4 6 4 4 என்று வெளுத்து வாங்கினார், நியூஸிலாந்து ரசிகர்கள் வாயடைத்து அதிர்ச்சியில் உறைந்தனர். வர்ணனையில் ரிச்சர்ட் ஹாட்லி பிரமித்துப் போய் வர்ணனை செய்து கொண்டிருந்தார், இது என்ன மாதிரியான அடி என்பதை இன்னமும் கூட கண்டுபிடிக்க முடியாது. பிறகும் 6,4,4,4,4 என்ற வேகத்தில் புரட்டி எடுத்தார். 49 பந்துகளில் 82 ரன்கள் 15 பவுண்டரிகள் 2 சிக்சர்கள்.
ஜடேஜா 18 ரன்களில் மிட் ஆஃபில் கேட்ச் ஆகி வெளியேறினார். 56 பந்துகளில் 61 ரன்களில் ஜடேஜா சச்சின் ஆட்டத்தை வேடிக்கைதான் பார்க்க முடிந்தது, அடுத்து இறங்கிய வினோத் காம்ப்ளி உடன் 37 பந்துகளில் 56 ரன்கள் கூட்டணி, இதில் சச்சின் மட்டுமே 40 ரன்கள். மொகமது அசாருதீன் அப்போது 62 பந்துகளில் சதம் எடுத்த இந்திய சாதனையை வைத்திருந்தார், அது முறியடிக்கப்படும் என்ற நிலையில் ஹார்ட் என்பவர் பந்தில் சச்சின் அடித்து அடித்து சோர்வு ஏற்பட அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் வெளியேறும் போது ஸ்கோர் 117 ரன்கள் ஓவர் 17தான் ஆகியிருந்தது. மீதமுள்ள 26 ரன்களை எடுக்க 6 ஓவர்களை கூடுதலாக எடுத்துக் கொண்டு 23.2 ஓவர்களில் 143/3 என்று இந்திய அணி வென்றது, தொடரை 2 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 1-1 என்று சமன் செய்தது.
இந்த இன்னிங்ஸ் முடிந்தவுடன் நியூஸிலாந்து கேப்டன் ருதர்போர்ட் சச்சின் பெவிலியன் திரும்பும்போது கரகோஷம் செய்தார், அசாருதீனும் கரகோஷம் செய்தார். ஆட்டநாயகன் சச்சின் டெண்டுல்கர்.
சச்சினின் இந்த இன்னிங்ஸை அவரது மானசீக சீடரான சேவாக் ஒருமுறை நினைவுகூர்ந்த போது இந்த இன்னிங்ஸைப் பார்க்க டிவிக்காக நண்பர்கள் வீட்டுக்கு அலையாய் அலைந்ததை குறிப்பிட்டிருந்தார், சேவாக் வாழ்க்கையில் அதிரடி பேட்டிங் உத்வேகத்தை அளித்ததும் இந்த சச்சின் இன்னிங்ஸ்தான். இந்த இன்னிங்சுக்குப் பிறகே உலக வேகப்பந்து வீச்சாளர்கள் சச்சின் டெண்டுல்கரைக் கண்டு மிரள ஆரம்பித்தனர், அந்த மிரட்சி அவரது 100வது சதம் வரை போகவில்லை என்பதுதான் வரலாறு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT