Published : 12 Aug 2015 02:02 PM
Last Updated : 12 Aug 2015 02:02 PM
இங்கிலாந்துக்கு எதிரான நடப்பு ஆஷஸ் தொடர் தோல்விக்கு ஆஸ்திரேலிய பயிற்சியாளர் டேரன் லீ மேன் அணியின் சார்பாக மன்னிப்பு கோரினார்.
கிரிக்கெட் ஆஸ்திரேலியா இணையதளத்தில் அவர் எழுதிய பத்தியில் இதுபற்றி கூறியதாவது:
நாங்கள் மோசமாக விளையாடினோம். எங்களைவிடவும் சிறப்பான அணியிடம் தோல்வி அடைந்தோம். ஒரு பயிற்சியாளராக, வீரர்கள், அணித் தேர்வாளர்கள் ஆகியோர் சார்பில் முழுப் பொறுப்பு எடுத்துக் கொள்கிறோம்.
பொறுப்பிலிருந்து ஒருநாளும் வெளியேற மாட்டோம். தோல்விகளுக்கு சாக்குபோக்குகள் கூற விரும்பவில்லை. எங்கள் முயற்சிகளுக்கு நாங்கள் பொறுப்பேற்றுக் கொள்வதோடு, தோற்ற விதத்துக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். குறிப்பாக எங்கள் ஆட்டத்தைப் பார்க்க ஆஸ்திரேலியாவிலிருந்து இங்கிலாந்து பயணம் செய்து அணிக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்காகவும், உள்நாட்டில் எங்கள் ஆட்டத்தை ஆவலுடன் எதிர்பார்த்த ரசிகர்களிடமும் மன்னிப்பு கோருகிறோம்.
இது எவ்வளவு ஏமாற்றமான தோல்வி என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம், நாங்கள் முன்னேற வேண்டிய பகுதிகளை அடையாளம் கண்டு ஒரு சிறந்த அணியாக சிறப்புற ஆவன செய்வோம்.
மேலும், ஆஸ்திரேலிய கிரிகெட் அணியின் பயிற்சியாளராக ஒன்றைக் கூறிக் கொள்ள விரும்புகிறேன், வீரர்களின் மனைவிகள், தோழிகள், மற்றும் பிற குடும்பத்தினரை அணியுடன் வரவேண்டாம் என்ற கொள்கையை நான் ஒருபோதும் ஆதரிக்கப் போவதில்லை. ஏனெனில் இதுபோன்ற நீண்ட தொடர்களில் குடும்பத்தினரின் முக்கியத்துவம் பற்றி நாங்கள் நன்றாக அறிவோம்.
மார்க் டெய்லர் கேப்டன்சி காலத்திலிருந்தே ஆஸ்திரேலிய அணியின் ஒரு பகுதியாகவே வீரர்களின் மனைவி, தோழிகள் மற்றும் குழந்தைகளை பார்க்கும் பண்பாட்டை வளர்த்தெடுத்துள்ளோம், எனவே அதில் எந்தவித மாற்றமும் செய்யப்படமாட்டாது.
மைக்கேல் கிளார்க் தனது அற்புதமான கிரிக்கெட் வாழ்வை சிறப்பான வழியனுப்புதலுக்காகவே செலவிட்டுள்ளார். எனவே அவரது கிரிக்கெட் வாழ்வுக்கு உரிய மரியாதை அளிப்பது நம் கடமை.
இறுதி டெஸ்ட் போட்டியில் கிளார்க் ஆட்டத்தைப் பார்க்க அவரது குடும்பத்தினர் வருகின்றனர். எனவே அவர் தனது கடைசி டெஸ்ட் போட்டியை மகிழ்ச்சியுடன் ஆடுவதை விரும்புகிறோம்.
இவ்வாறு கூறினார் டேரன் லீ மேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT