

கரோனா வைரஸை ஒழிக்கும் போரில் 21 நாட்கள் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வேலைக்குச் செல்ல முடியமல் ஊதியம் கிடைக்காமல் இருக்கும் ஏழை மக்களுக்குப் பசியாற்ற அரிசி வாங்குவதற்காக சவுரவ் கங்குலி ரூ.50 லட்சத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார்
கரோனாவை ஒழிக்கும் முயற்சியில் மத்திய அரசும், மாநில அரசுகளும் தீவிரமான தடுப்பு நடவடிக்கையிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளன. நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இதை ஏற்று மக்கள் வீட்டுக்குள்ளே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 649 பேராக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவால் அனைத்து மாநிலங்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. அதிலும் சமானிய மக்கள், கூலித்தொழிலாளர்கள், ஏழைகள் நிலை பெரும் கவலைக்குள்ளாகி இருக்கிறது. இவர்களின் பசியாற உணவு வழங்குவது முக்கியமாக இருந்து வருகிறது. இவர்களின் பசியாறும் வகையில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி ரூ.50 லட்சத்தை நிதியாக வழங்கியுள்ளார்.
இதுகுறித்து பெங்கால் கிரிக்கெட் அமைப்பு வெளியி்ட்ட அறிவிப்பில், “கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் வகையில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இந்த 21 நாட்களில் வேலைக்குச் செல்ல முடியாமல், ஊதியம் கிடைக்காமல் ஏழை மக்கள், விளிம்பு நிலை மக்கள் துயரதுக்கு ஆளாவார்கள். அவர்களின் பசியைப் போக்குவதற்காக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். இந்தப் பணம் மூலம் ஏழை மக்களுக்கு அரிசி வழங்கப்படும். லால் பாபா ரைஸ் நிறுவனமும் உதவி செய்துள்ளது.
சவுரவ் கங்குலியின் இந்த உதவி செய்யும் மனப்பான்மையைப் பார்த்து மற்ற மாநிலங்களில் உள்ள மக்களும் தேவைப்படும் மக்களுக்கு உதவி செய்ய முன்வருவார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிந்து ரூ.10 லட்சம்
இதேபோல பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, ஆந்திராவில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.
பி.வி.சிந்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ தெலங்கானா, ஆந்திர மாநிலங்கள் கரோனா வைரஸுக்கு எதிராகப் போராடி வரும் நிலையில் மக்களுக்கு உதவுவதற்காக இரு மாநிலங்களின் முதல்வர் நிவாரண நிதிக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கினேன்” எனத் தெரிவித்துள்ளார்.