Published : 09 May 2014 10:00 AM
Last Updated : 09 May 2014 10:00 AM
12-வது ஃபெடரேஷன் கோப்பைக்கான தேசிய ஜூனியர் தடகளப் போட்டிகள் சென்னை ஜவஹர்லால் நேரு மைதானத்தில் இன்று தொடங்குகின்றன. தமிழ்நாடு தடகள சங்கம் நடத்தும் இந்தப் போட்டியை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (எஸ்டிஏடி) உறுப்பினர்-செயலர் ஜெயக்கொடி தொடங்கி வைக்கிறார்.
இது தொடர்பாக இந்திய தடகள சம்மேளன செயலர் சி.கே.வல்சன், தமிழ்நாடு தடகள சங்க செயலர் ராஜேந்திரன் ஆகியோர் கூறியது:
நாடு முழுவதிலும் இருந்து சுமார் 800 வீரர், வீராங்கனைகள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் இருந்து 32 வீரர்கள், 29 வீராங்கனைகள் என மொத்தம் 61 பேர் பங்கேற்கிறார்கள். இந்தப் போட்டி ஆசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் மற்றும் உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கான தகுதிச்சுற்று ஆகும்.
1995, 1996-ம் ஆண்டுகளில் பிறந்தவர்கள் இதில் பங்கேற்க தகுதியுடையவர்கள். 1994-ல் பிறந்தவர்கள் இதில் பங்கேற்கலாம். ஆனால் அவர்கள் ஆசிய ஜூனியர் தடகளம் மற்றும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு பரிசீலிக்கப்படமாட்டார்கள். ஏற்கெனவே ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றவர்களும் கட்டாயம் இதில் பங்கேற்க வேண்டும். ஊக்க மருந்து சோதனையும் நடத்தப்படவுள்ளது.
ஒரு போட்டியில் இருந்து அதிகபட்சமாக இரண்டு பேர் ஆசிய மற்றும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க தேர்வு செய்யப்படுவர் என்றனர்.
தமிழக முன்னணி வீரர்கள்
தீபிகா (தடை தாண்டுதல் ஓட்டம்), அகஸ்டின் யேசுதாஸ் (ஸ்பிரின்ட்), அன்புராஜா (நீளம் தாண்டுதல்), முகமது ஜாபர் (மும்முறைத் தாண்டுதல்) ஆகியோர் தமிழகத்தில் இருந்து பங்கேற்கும் முன்னணி வீரர்கள் ஆவர்.
இன்றைய போட்டிகள்
(இறுதிச்சுற்று போட்டி மட்டும்)
ஆடவர் 5000 மீ. ஓட்டம் காலை 6.00
மகளிர் 5000 மீ. ஓட்டம் காலை 6.30
ஆடவர் குண்டு எறிதல்(6 கிலோ) மாலை 5.00
மகளிர் ஈட்டி எறிதல் மாலை 5.00
மகளிர் நீளம் தாண்டுதல் மாலை 5.15
ஆடவர் உயரம் தாண்டுதல் மாலை 6.00
ஆடவர் 1,500 மீ. ஓட்டம் மாலை 6.15
ஆடவர் ஈட்டி எறிதல் மாலை 6.15
மகளிர் 1500 மீ. ஓட்டம் மாலை 6.30
ஆடவர் 100 மீ. ஓட்டம் மாலை 6.45
மகளிர் 100 மீ. ஓட்டம் மாலை 6.55
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT