Published : 24 Mar 2020 08:40 AM
Last Updated : 24 Mar 2020 08:40 AM

டோக்கியோ ஒலிம்பிக் தள்ளிவைக்கப்படுகிறது? - சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தீவிர ஆலோசனை

லாசானே

கரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தி வரும் நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை தள்ளிவைப்பது தங்களது விருப்ப தேர்வுகளில் ஒன்றாக உள்ளது எனவும் அதேவேளையில் போட்டிகளை ரத்து செய்யும் எந்தவித திட்டமும் இல்லை என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரி வித்துள்ளது.

ஜப்பானின் டோக்கியோ நகரில்வரும் ஜூலை 24-ம் தேதி முதல்ஆகஸ்ட் 9 வரை ஒலிம்பிக் போட்டிகள் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது. இதற்கிடையே உலகம் முழுவதும் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் விளையாட்டு வீரர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு டோக்கியோ ஒலிம்பிக்கை தள்ளி வைக்க வேண்டும் என பல்வேறு விளையாட்டு அமைப்புகளும், முன்னணி தடகள வீரர்களும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை எப்போது நடத்த வேண்டும் என்ற முடிவு இன்னும் 4 வாரங்களுக்குள் எடுக்கப்படும் என சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் தாமஸ் பாக் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், விளையாட்டு வீரர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

போட்டிகள் நடத்துவது உள்ளிட்ட எல்லாவற்றையும்விட மனிதஉயிர்கள் முன்னுரிமை பெறுகின்றன. நாங்கள் ஏற்கெனவே சுட்டிகாட்டியபடி வெவ்வேறு கோணத் தில் சிந்தித்து வருகிறோம். அவற்றை நாளுக்கு நாள் மாற்றி அமைத்தும் வருகிறோம்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை எப்போது நடத்த வேண்டும் என்பது தொடர்பான விவாதங்களை அடுத்த நான்கு வாரங்களுக்குள் நாங்கள் முடித் திருப்போம் என்று நம்புகிறோம். போட்டிகளை தள்ளிவைப்பது எங்களது விருப்ப தேர்வுகளில் ஒன்றாக உள்ளது.

போட்டியை ரத்து செய்வது எந்தவொரு பிரச்சி னையையும் தீர்க்காது, யாருக்கும் உதவாது. எனவே போட்டியை ரத்து செய்வது என்பது எங்களது திட்டங்களில் இல்லை” என தெரிவித்துள்ளார்.

இந்திய ஒலிம்பிக் சங்கம் சொல்வது என்ன?

கரோனா வைரஸ் அச்சுறுத்தலை தொடர்ந்து வட அமெரிக்க நாடுகளில் ஒன்றான கனடா, டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கப்போவது இல்லை என அறிவித்துள்ளது. அதேவேளையில் அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகுமாறு தனது நாட்டு வீரர்களிடம் கூறி உள்ளது ஆஸ்திரேலிய ஒலிம்பிக் சங்கம்.

இதனால் சர்வதேச ஒலிம்பிக் சங்கத்துக்கு அழுத்தம் அதிகமாகி உள்ளது. இந்நிலையில் இந்த விஷயத்தில் இந்திய ஒலிம்பிக் சங்கம் என்ன முடிவு எடுக்கப் போகிறது என்ற கேள்வி இந்திய விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் செயலாளர் ராஜீவ் மேத்தா கூறும்போது, “கரோனா வைரஸ் பாதிப்பு நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். தற்போதைய சூழ்நிலையில் 4 முதல் 5 வாரங்கள் பொறுத்திருந்து பார்ப்போம். அதன் பின்னர் சர்வதேச ஒலிம்பிக் சங்கம் மற்றும் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்துடன் கலந்தா லோசித்து முடிவு எடுக்கப்படும். மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது நம் நாட்டில் நிலைமைகள் மோசமாக இல்லை.

தற்போது வரை நெருக்கடியை இந்தியா சிறப்பாகவே கையாண்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் ஒலிம்பிக் போட்டியை தள்ளிவைப்பது தொடர்பாக நாங்கள் சிந்திக்கவில்லை. ஒரு மாதம் வரை காத்திருப்போம். அதன் பின்னர் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் நரிந்தர் பத்ரா மற்றும் நிர்வாகக்குழுவுடன் ஆலோசனை நடத்துவோம்” என்றார்.

இதற்கிடையே கனடா நாட்டை போன்று இந்தியாவும் ஒலிம்பிப் போட்டிகளில் இருந்து விலகுவது குறித்து சிந்திக்கிறதா? என மத்திய விளையாட்டுத்துறை செயலாளார் ராதே ஷியாம் ஜூலானியாவிடம் பிடிஐ சார்பில் கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த அவர், “இந்த கேள்வி கற்பனையானது. இவற்றுக்கெல்லால் அரசு தரப்பில் பதில் அளிக்க முடியாது. நாங்கள் இப்போது யாருடனும் ஆலோசனை நடத்தவில்லை. அமைச்சகம் தொடர்ந்து ஆலோசனைகளை வழங்க முடியாது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x