Published : 23 Mar 2020 07:44 AM
Last Updated : 23 Mar 2020 07:44 AM

ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்பட்டால் எங்கள் முயற்சிகள் வீணாகிவிடும்: பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு வேதனை

புதுடெல்லி

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்பட்டால் எங்கள் முயற்சிகள் அனைத்தும் வீணாகிவிடும் என்று இந்திய பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டி: கடந்த 4 ஆண்டுகளாகவே டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக தயாராகி வந்தேன். ஆனால் யாருமே எதிர்பாராத நிலையில் கரோனா வைரஸ் பிரச்சினை உலகம் முழுவதும் வியாபித்துள்ளது.

இந்தியாவிலும் இது வேகமாக பரவி வருவது வேதனை அளிக்கிறது. இதுவரை 7 பேர் உயிரிழந்து விட்டனர். உலக அளவில் 13 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த ஒலிம்பிக் போட்டிக்காக கடந்த 4 ஆண்டுகளாக தினந்தோறும் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வந்தேன். கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் போட்டி ரத்து செய்யப்பட்டால் எனது முயற்சிகள் அனைத்தும் வீணாகிவிடும்.

இந்த போட்டி ரத்தாகிவிடக் கூடாது என விரும்புகிறேன். இதற்காக தினந்தோறும் கடவுளைப் பிரார்த்திக்கிறேன். நாட்டுக்காக ஒலிம்பிக் பதக்கத்தை வெல்லவேண்டும் என்று விரும்புகிறேன். கரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனமும் (ஐடபிள்யூஎப்) தனது 5 போட்டிகளை ரத்து செய்துவிட்டது.

தற்போது ஆசிய பளுதூக்குதல் போட்டிக்காகவும் தயாராகி வருகிறேன். இந்த போட்டியாவது நடைபெறுமா அல்லது ரத்தாகுமா என்று தெரியவில்லை. எனக்கு ஒலிம்பிக்தான் இலக்கு.

போட்டிக்காக ஏராளமான வீரர், வீராங்கனைகள் தயாராகி வந்தனர். ஆனால் போட்டி ரத்தாகும் சூழ்நிலை உள்ளது. இயற்கையை நாம் எதிர்கொண்டே ஆகவேண்டும். ஆனாலும் போட்டி நடைபெறும் என்ற எதிர்பார்ப்பில் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.

அடிக்கடி கைகளைக் கழுவிக்கொண்டு பயிற்சியில் ஈடுபடுகிறோம். நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வது எப்படி என்ற விழிப்புணர்வு செய்திகளை மற்றவர்களுக்கும் நாங்கள் சொல்லிக் கொடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x