Published : 20 Mar 2020 02:58 PM
Last Updated : 20 Mar 2020 02:58 PM
இந்திய கால்பந்து லெஜண்ட் பி.கே.பானர்ஜி கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமையன்று காலமானார், இவருக்கு வயது 83. இவர் நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டிருந்ததகா அவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இவருக்கு பாவ்லா, பூர்ணா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர், இவர்கள் கல்விப்புலத்தில் பெரிய ஆட்களாகத் திகழ்கின்றனர். இவரது இளைய சகோதரர் பசூன் பானர்ஜி திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யாவார்.
1962 ஆசியப் போட்டிகளில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றதில் பானர்ஜியின் பங்கு அதிகம். இந்தியக் கால்பந்தின் பொன்னான காலக்கட்டம் பானர்ஜி என்ற இந்த ஸ்ட்ரைக்கரின் கால்பந்து பொன்னான காலக்கட்டமாகவும் இருந்தது.
இவருக்கு சிலகாலங்களாக நிமோனியா, மூச்சுக்குழல் பிரச்சினை இருந்தது. மேலும் பார்க்கின்சன் நோயும், லேசான மனநிலைப் பிரச்சினையும், இருதய நோயும் பானர்ஜிக்கு இருந்து வந்தன.
மார்ச் 2ம் தேதி முதல் இவர் உயிர்க்காப்புக் கருவிகளுடன் கொல்கத்தா மருத்துவமனையில் இருந்து வந்தார். இந்நிலையில் இன்று அவர் உயிர் நண்பகல் 12.40 மணிக்கு பிரிந்ததாக குடும்பத்தினரில் ஒருவர் தெரிவித்தார்.
இவர் ஜூன் 23, 1936-ல் ஜல்பைகுரியில் பிறந்தார். நாட்டுக்காக 84 போட்டிகளில் ஆடிய இவர் 64 கோல்களை அடித்துள்ளார். 1960 ரோம் ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்தியக் கால்பந்து அணியின் தலைவராக இவர் இருந்தார், ஒரு போட்டியில் வலுவான பிரான்ஸ் அணிக்கு எதிராக ஒரு கோலை அடித்து சமன் செய்தது இவருக்கு பெரும் புகழைப் பெற்றுத் தந்தது.
முன்னதாக மெல்போர்ன் ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணிக்காக ஆடினார், அதில் காலிறுதியில் 4-2 என்று ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதில் இவரது பங்களிப்பு அசாத்தியமானது என்று கால்பந்து ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
கால்பந்துக்கு இவரது பங்களிப்பை அங்கீகரித்து ஃபீபா என்ற உலகக்கால்பந்து கூட்டமைப்பு இவருக்கு செண்டனியல் ஆர்டர் ஆஃப் மெரிட் கொடுத்து கவுரவித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT