Published : 20 Mar 2020 07:54 AM
Last Updated : 20 Mar 2020 07:54 AM
கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் டி 20 தொடர், உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள் நிறுத்தப்பட்டால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் கடும் நிதி நெருக்கடியை சந்திப்பார்கள் என அந்த அணியின் ஒருநாள் கிரிக்கெட் போட்டி கேப்டன் ஆரோன் பின்ச் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில்விளையாடுவதற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்படும் தடையில்லாசான்றிதழ் மறு ஆய்வு செய்யப்படும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஏற்கெனவே தெரிவித்துள்ளது. இதற்கிடையேஅந்நாட்டு அரசு பல்வேறு பயணக்கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. இதனால் அடுத்த மாதம் 15-ம் தேதி வரை தள்ளி வைக்கப்பட்டுள்ள ஐபிஎல் டி 20 தொடரில் ஆஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்பது பாதிக்கப்படக்கூடும் என கருதப்படுகிறது.
கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இம்மாதம் 29-ம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டிருந்த ஐபிஎல் டி 20 தொடரை ஏப்ரல் 15-ம் தேதி வரை பிசிசிஐ தள்ளிவைத்துள்ளது. பணம் கொழிக்கும் ஐபிஎல் தொடரில் ஆஸ்திரேலிய வீரர்கள் 17 பேர் பல்வேறு அணிகளுக்காக ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் தவிர முன்னாள் வீரர்களான ரிக்கி பாண்டிங், ஆன்ட்ரூமெக்டொனால்டு, சைமன்காடிச்,ஆடம் கிரிஃபித் ஆகியோர்ஐபிஎல் அணிகளின் பயிற்சியாளர்களாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் ஒருநாள் கிரிக்கெட் போட்டி கேப்டன் ஆரோன் பின்ச்வானொலி நிகழ்ச்சி ஒன்றில் கூறும்போது, “கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் டி 20 தொடர், உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள் நிறுத்தப்பட்டால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் கடும் நிதி நெருக்கடியை சந்திப்பார்கள். வருவாய் பகிர்வு போன்ற அமைப்பு இருக்கும் போது இது நிகழவே செய்யும். ஆனால் நாங்கள் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம் சூழ்நிலையை புரிந்து கொள்கிறோம்.
வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையை நாங்கள் இதற்கு முன்னர் பார்த்தது இல்லை. சிலமணி நேரங்களில் வெளிநாட்டு பயணங்களுக்கான ஆலோசனைகள் மாறிவிட்டது. எதையும் திட்டமிடுவது கடினமாக உள்ளது. இது இரண்டு அல்லது 3 வாரங்களில் மாறக்கூடும்.
ஆனால் இந்த கட்டுப்பாடுகள் உங்களைச் சுற்றியுள்ளஅனைவருமே பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யும். மேலும் வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க உங்களால் முடிந்த செயலை செய்வது போன்றும் இருக்கும். ஏதாவது ஒரு கட்டத்தில் இயல்பு நிலைக்கு திரும்புவோம். ஆனால் அது எப்போது என்று கூறுவது கடினம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT