Published : 18 Mar 2020 04:26 PM
Last Updated : 18 Mar 2020 04:26 PM
கரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டு தாயகம் திரும்பிய தென் ஆப்பிரிக்க வீரர்கள் அனைவரையும் 14 நாட்கள் தனிமைப்படுத்தி, மருத்துவக் கண்காணிப்பில் வைக்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்ட தென் ஆப்பிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடத் திட்டமிட்டிருந்தது. முதல் போட்டி தர்மசலாவில் நடக்க இருந்த நிலையில் அது மழையால் ரத்து செய்யப்பட்டது. 2-வது போட்டி லக்னோவிலும், 3-வது போட்டி கொல்கத்தாவிலும் நடக்க இருந்தது. ஆனால், கரோனா வைரஸ் காரணமாகப் போட்டிகள் அனைத்தும் ரத்தானது.
ரசிகர்கள் கூடும்போதும் கரோனா வைரஸ் பரவும் வாய்ப்பு அதிகம் இருப்பதால் முதலில் ரசிகர்கள் இன்றி போட்டி நடத்தத் திட்டமிடப்பட்டது. ஆனால், அதன்பின் ஒருநாள் தொடரை ரத்து செய்து அடுத்து வரும் மாதங்களில் நடத்திக்கொள்ள இரு நாட்டு வாரியங்களும் முடிவு செய்தன.
இதையடுத்து இந்தியாவில் தங்கியிருந்த தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் அனைவரும் நேற்று கொல்கத்தா சென்று அங்கிருந்து துபாய் வழியாகத் தென் ஆப்பிரிக்கா செல்லத் திட்டமிட்டனர்.
தென் ஆப்பிரிக்க வீரர்கள் தங்களின் சொந்த நாட்டுக்குச் சென்றவுடன் கரோனா பாதிப்பு இருந்த இந்தியாவில் இருந்து வந்ததால், அவர்களை 14 நாட்கள் தனிமையில் வைத்து மருத்துவக் கண்காணிப்பில் வைக்க அந்நாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் தலைமை மருத்துவ அதிகாரி சுவைப் மஞ்சரா நிருபர்களிடம் கூறுகையில், " தென் ஆப்பிரிக்கா வந்து சேர்ந்ததும் அனைத்து வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள்.
இந்தக் காலககட்டத்தில் வீரர்களுக்கு ஏதேனும் கரோனா அறிகுறிகள் தென்பட்டால் அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படும். வீரர்கள் தனிமைப்படுத்தப்படும்போது அவர்களுக்கு முறையான ஆலோசனைகள் வழங்கப்பட்டு, மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT