Published : 18 Mar 2020 01:39 PM
Last Updated : 18 Mar 2020 01:39 PM

ஹர்பஜன் சிங்- சைமண்ட்ஸ் ‘மன்க்கி கேட்’ விவகாரம் என் வாழ்க்கையின் தாழ்ந்த ஒரு கணம்: நடுவர் மோசடிகளைப் பற்றி ஒரு வார்த்தைக் கூறாத ரிக்கி பாண்டிங் கருத்து

இரண்டு முறை ஐசிசி உலகக்கோப்பையை தன் கேப்டன்சியில் ஆஸ்திரேலியாவுக்காக வென்று கொடுத்த ரிக்கி பாண்டிங் தனது கேப்டன்சியில் மிகவும் தாழ்ந்த ஒரு கணமாக இந்தியா அங்கு 2008ம் ஆண்டு தொடருக்காக கும்ப்ளே தலைமையில் சென்றபோது நடுவர்கள் விளையாடிய சிட்னி டெஸ்ட் போட்டியில் ஹர்பஜன் சிங்கிற்கும், ஆஸி. வீரர் சைமன்ட்ஸுக்கும் ஏற்பட்ட மோதல் தருணத்தை கூறியுள்ளார்.

இது ‘மன்க்கி கேட்’ என்று பிரபலமாக அங்கு அழைக்கப்படுகிறது, அந்த டெஸ்ட் போட்டியில் நடுவர்கள் விளையாடினர், இதனால் இந்திய அணி ஜெயிக்க வேண்டிய அந்தப் போட்டி தோல்வியில் முடிந்தது. அண்ட்ரூ சைமண்ட்சுக்கு மட்டும் 9 அவுட்கள் தரப்படவில்லை. அதோடு கேப்டன் ரிக்கி பாண்டிங்கே அவுட் எல்லாம் கொடுக்க ஆரம்பித்தார் கங்குலிக்கு அவரே அவுட் கொடுத்தார். நடுவர்கள் ஆஸ்திரேலியாவுக்காக கேட்ச்களை மட்டும்தான் பிடிக்கவில்லை மற்றபடி அப்படி ‘ஒத்துழைப்பு நல்கினர்’ குறிப்பாக தாமதமாக கையை உயர்த்தும் ஸ்டீவ் பக்னர் இதில் மறக்க முடியாதவர்.

இந்த டெஸ்ட் போட்டியின் போது ஹர்பஜன் சிங், ஆண்ட்ரூ சைமன்ட்ஸை ‘மன்க்கி’ என்று திட்டியதாக நிறவெறி வசை என்ற சர்ச்சையை ஆஸ்திரேலியா உருவாக்கியது, ஆனால் அதைவிடவும் மோசமான ஒரு கெட்ட வார்த்தையைத்தான் ஹர்பஜன் இந்தியில் கூறியிருக்கிறார். இதுபுரியாத ஆஸ்திரேலியர்கள் மன்க்கி என்று கூறியதாக பிடிவாதம் பிடித்தனர், பெரிய சர்ச்சை எழுந்தது, இந்தியா தொடரிலிருந்து விலகுவோம் என்று அச்சுறுத்தியது. ஐசிசி தலையீட்டில் விவகாரம் சுமுகமாம முடிய, விசாரணையில் சச்சின் டெண்டுல்கர் ஹர்பஜன் சிங் கூறியதை விளக்க ஒருவாறு விவகாரம் முடிந்தது, ஆனால் அதுமுதல் இரு அணிகளுக்குமான உறவுகள் கடும் விரிசல் கண்டன. அடுத்த பெர்த் டெஸ்ட்டில் இந்தியா பதிலடியாக வெற்றி பெற்றது, அதற்கு அடுத்த அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் சேவாக் அபாரமாக ஒரு 155 ரன்களை எடுக்க ஆஸி. அணியினர் மகா அறுவையாக ஆடி போட்டியை போராடி ட்ரா செய்தனர். ஆனால் தொடரை வென்றிருக்க வேண்டிய இந்திய அணி நடுவர் மோசடிகளால் தொடரை 1-2 என்று இழந்தது. ஆனால் பெர்த் தோல்வி ஆஸி.க்கு ஒரு பெரிய அடிதான்.

இந்தப் போட்டி குறித்து ரிக்கி பாண்டிங் தற்போது மனம் திறந்த போது, “மன்க்கி கேட் விவகாரம்தான் என் கிரிக்கெட் வாழ்வில் மிகவும் தாழ்ந்த ஒரு தருணம், 2005 ஆஷஸ் தோல்வியை ஜீரணிப்பது கடினம்தான் ஆனால் நான் முழுக்கட்டுப்பாட்டில் இருந்தேன், ஆனால் மன்க்கி கேட் விவகாரத்தில் நான் முழுக் கட்டுப்பாட்டில் இல்லை.

இது தாழ்ந்த ஒரு தருணம், இது நீண்ட நாட்களுக்குப் பேசப்பட்டு வந்தது.

இந்த விவகாரம் முடிந்த விதம் எங்களுக்கு ஏமாற்றத்தையே அளித்தது, நாங்கள் கைவிடப்பட்டதாக உணர்ந்தோம். மிக முக்கியமாக அடுத்த டெஸ்ட் போட்டியில் நாங்கள் விளையாடியதை இது தீர்மானித்தது, பெர்த் டெஸ்ட் போட்டியில் இதனால் தோல்வி அடைந்தோம். பெர்த்தில் தோற்ற பிறகு சில நாட்கள் இன்னும் மோசமாகிக் கொண்டே சென்றது.

அதே போல் 2005-ல் ஆஷஸ் தொடரை நாங்கள்தான் வென்றிருக்க வேண்டும் அனைவரும் 5-0 என்று இங்கிலாந்து தோல்வியடையும் என்றனர் ஆனால் அவர்கள் வென்றனர் இது பெருத்த ஏமாற்றம், இதனை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. 2010-11 தொடரில் இங்கிலாந்து எங்களை முற்றிலும் காலி செய்தது, அதில் வருத்தமில்லை” என்றார் ரிக்கி பாண்டிங்.

-(பிடிஐ தகவல்களுடன்)

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x