Published : 18 Mar 2020 07:53 AM
Last Updated : 18 Mar 2020 07:53 AM
நாட்டில் கரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளதையடுத்து இந்திய அரசு தீவிர கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது, உலகம் முழுதும் பல விளையாட்டுக்கள் ரத்து செய்யப்பட்டு விட்டன, இந்தியாவின் முக்கிய கிரிக்கெட் தொடரான பணமழை ஐபிஎல் கிரிக்கெட்டும் ரத்து செய்யப்படும் நிலைமை உருவாகியுள்ளது.
அப்படி ரத்தானால் பிசிசிஐக்கு ரூ.3,900 கோடி இழப்பு ஏற்படும். இந்தியாவில் அயல்நாட்டினர் நுழைய ஏப்ரல் 15 வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் 60க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும் நாடு முழுவதும் பொது இடங்களில் கூடத் தடை விதிக்கப்பட்டுள்ளது, மார்ச் 31ம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை, வணிக வளாகங்கள், திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் கடந்த சனியன்று பிசிசிஐ நிர்வாகிகள் ஐபிஎல் அணி உரிமையாளர்கள் சந்தித்துப் பேசுகையில் ஏப்ரல் 15 வரை ஐபிஎல் தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் உரிமையாளர்களும் கூட பணம் பிரச்சினையல்ல பாதுகாப்புத்தான் முக்கியம், ஏப்ரல் 15 வரை நிலைமை சரியாகவில்லை எனில் தொடரை ரத்து செய்யும் கடினமான முடிவைக் கூட எடுக்க நேரிடலாம் என்று நெஸ் வாடியா தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
ரசிகர்கள் இல்லாமல் நடத்தலாம் என்றாலும் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு உள்ளிட்டவைகளுக்கு குறைந்தது 500 பேராவது தேவைப்படும். ஆனால் மத்திய அரசு 10 பேருக்கு மேல் கூடக்கூடாது என்று தெரிவித்துள்ளது.
மகாராஷ்ட்ராவில் பாதிப்பு எண்ணிக்கை இந்தியாவிலேயே அதிகமாக 41 ஆக அதிகரித்துள்ளதால் அங்கு நிச்ச்யம் போட்டிகள் அனுமதிக்கப்படாது அதே போல்தான் கர்நாடகாவிலும்.
எனவே ஐபிஎல் போட்டிகள் இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டால் பிசிசிஐ-க்கு ரூ.3900 கோடி இழப்பு ஏற்படும். போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்யும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் 2 மாதங்களுக்கு முன்பே புரமோஷன் உட்பட அனைத்து வேலைகளையும் முடித்துள்ளது, இந்தத் தொடர் மூலம் சுமார் 3,300 கோடி வருவாய் ஈட்டத் திட்டமிட்டது, இப்போது போட்டி ரத்தானால் இதுவும் சிக்கல்தான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT