Published : 17 Mar 2020 01:42 PM
Last Updated : 17 Mar 2020 01:42 PM
2020 அக்டோபரில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கரோனா வைரஸ் பாதிப்பினால் நடைபெறுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
உலகம் முழுதும் கரோனா வைரஸ் பரவலின் தாக்கம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது பற்றிய துல்லியமான மருத்துவ ஆய்வுகள் எதுவும் இதுவரை இல்லை, வெறும் ஹேஷ்யங்களும் கணிப்புகளுமே வெளியிடப்பட்டு வருகின்றன, அதனால் நம் பொதுப்புத்தி நினைப்பது போல் ‘போகப்போகக் குறையும்’ என்பதற்கான ஆணித்தரமான உத்தரவாதங்கள் அறிவியல்பூர்வமாக இன்னும் தெரியவரவில்லை. அதே போல் போகப்போக அதிகரித்தால்? என்ற கேள்விதான் இப்போது அதிகமாகியுள்ளது.
எனவே உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் நடக்குமா என்ற கேள்வி கிரிக்கெட் ஆஸ்திரேலியா முன்பு வைக்கப்பட்ட போது ‘திட்டமிட்டபடி உலகக்கோப்பை டி20 போட்டிகள் நடைபெறும்’ என்ற பதிலைத்தான் அது தெரிவித்துள்ளது.
நாவல் கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் உலகம் முழுதும் விளையாட்டுப்போட்டிகள் பல ரத்து செய்யப்பட்டுள்ளன, ஜப்பானிலும் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவது குறித்து அங்கு கரோனா அச்சம் காரணமாக எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
இந்நிலையில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா கூறும்போது, “அனைத்து விளையாட்டுகளும் இன்னும் சில வாரங்களில் அல்லது சில மாதங்களில் மீண்டும் தொடங்கும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறோம்.
ஆனால் இங்கு யாரும் நிபுணர்கள் அல்ல என்ற நினைவுடனேயே கூறுகிறோம், அக்டோபர், நவம்பரில் அனைத்து நிலைமைகளும் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கிறோம், எனவே இப்போதைக்கு உலகக்கோப்பை டி20 போட்டிகள் நடைபெறும் என்றே நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளது.
அக்டோபர் 18-23-ல் தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற, அக்டோபர் 24ம் தேதி 12 அணிகள் பங்கேற்கும் பிரதான உலகக்கோப்பை டி20 போட்டிகள் நடைபெறுகின்றன.
இறுதிப் போட்டி நவம்பர் 15ம் தேதி மெல்போர்னில் நடைபெறுகிரது.
“நவம்பர் 15ம் தேதி எம்.சி.ஜியில் முழு ஸ்டேடியமும் நிரம்பி வழியும் என்றே எதிர்நோக்குகிறோம்.” என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் ஆஸ்திரேலியா - நியூஸிலாந்து ஒருநாள் தொடர், இந்தியா-தென் ஆப்பிரிக்கா ஒருநாள் தொடர் ஆகியவை ரத்து செய்யப்பட்டன. தற்போது ஐபிஎல் கிரிக்கெட் ஏப்ரல் 15ம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரரும் தற்போதைய நிர்வாகியுமான மார்க் பவுச்சர், “உலக அளவில் லாக் டவுன் இருந்து வருகிறது, ஆனால் செல்போன் மட்டும் பயன்பாட்டில் இருந்து வருகிறது, அதையும் 2 வாரங்களுக்கு லாக் செய்ய வேண்டியதுதானே” என்று கூறியுள்ளார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT