Published : 16 Mar 2020 04:56 PM
Last Updated : 16 Mar 2020 04:56 PM
உலகிலேயே டி20 போட்டிகளில் இரட்டைச் சதம் அடிக்க முடியும் என்றால் அது இந்திய வீரர் ஒருவரால் மட்டுமே முடியும் என்று ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாக் புதிர் போட்டுள்ளார்.
இதுவரை ஒருநாள் போட்டிகளிலும், டெஸ்ட் போட்டிகளிலும் பல வீரர்கள் இரட்டைச் சதம் அடித்துள்ளார்கள். ஆனால், டி20 போட்டிகளில் எந்த வீரரும் இன்னும் இரட்டைச் சதம் அடிக்கவில்லை.
ஆஸ்திரேலிய அணியின் ஒருநாள் கேப்டன் ஆரோன் பிஞ்ச் அதிகபட்சமாக 2018-ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 76 பந்துகளில் 172 ரன்கள் சேர்த்த போதிலும் இரட்டைச் சதம் அடிக்க முடியவில்லை.
ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணிக்காக விளையாடிய மே.இ.தீவுகள் வீரர் கிறிஸ் கெயில் 66 பந்துகளில் 175 ரன்கள் சேர்த்துள்ளார். ஆனால், இரட்டைச் சதம் அடிக்கவில்லை.
இந்நிலையில், ட்விட்டரில் ஏராளமான ரசிகர்கள் ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் பிராட் ஹாக்கிடம் ஒரு கேள்வி எழுப்பியிருந்தனர். அதில், "டி20 போட்டியில் யார் முதன்முதலில் இரட்டைச் சதம் அடிப்பார் எந்த நாட்டைச் சேர்ந்த வீரராக இருப்பார் என்று கேட்டிருந்தனர்.
இதற்கு பதில் அளித்த பிராட் ஹாக், "உலகிலேயே டி20 போட்டிகளில் இரட்டைச் சதம் அடிக்கும் முதல் வீரர், அதற்கு தகுதியான வீரர் என்னைப் பொறுத்தவரை அது இந்தியவீரர் ரோஹித் சர்மாதான். சிறந்த ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். நல்ல டைமிங்கில் ஷாட்களை அடிக்கும் திறமை உடையவர். மைதானத்தின் அனைத்து திசைகளிலும் சிக்ஸர்களையும் பவுண்டரிகளையும் பறக்கவிடும் திறமை உடையவர்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் சர்மா கடந்த 2007-ம் ஆண்டு செப்டம்பரில் டர்பனில் இங்கிலாந்து அணிக்கு எதிராக டி20 போட்டியில் அறிமுகமானார். இதுவரை இந்தியாவுக்காக 94 போட்டிகளில் விளையாடி 2,331 ரன்கள் சேர்த்துள்ளார். சராசரியாக 32.37 ரன்களும், ஸ்ட்ரைக் ரேட் 137 வைத்துள்ளார். இதில் 4 சதங்கள், 16 அரை சதங்கள் அடங்கும்.
ஒருநாள் போட்டியில் இலங்கைக்கு எதிராக 2014-ம் ஆண்டில் 264 ரன்கள் சேர்த்து ரோஹித் சர்மா சாதனை படைத்துள்ளார். ஒருநாள் போட்டியில் 3 முறை இரட்டைச் சதம் அடித்த ஒரே வீரர் ரோஹித் சர்மா மட்டுமே. 206 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ரோஹித் சர்மா 8,010 ரன்கள் சேர்த்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT