Published : 17 Aug 2015 04:36 PM
Last Updated : 17 Aug 2015 04:36 PM

தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி டி20 தொடரை சமன் செய்தது நியூஸிலாந்து

செஞ்சூரியனில் நேற்று நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூஸிலாந்து 2 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்று சமன் செய்தது.

டாஸ் வென்ற கேன் வில்லியம்ன்சன் முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார், மார்டின் கப்தில் (60 ரன்கள்; 35 பந்துகள், 6 பவுண்டரி, 3 சிக்சர்) அதிரடியில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது. ரபாதா அருமையாக வீசி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா ஏ.பி.டிவில்லியர்ஸ், ஆம்லா ஆகியோர் ஆடியும், 20 ஓவர்களில் 145 ரன்களையே எடுக்க முடிந்தது.

தென் ஆப்பிரிக்கா இதற்கு முன்னர் 170 ரன்களுக்கு மேலான ஸ்கோரை ஒரேயொரு முறைதான் வெற்றிகரமாகத் துரத்தியுள்ளது. எனவே உலகக் கோப்பை டி20-யில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 170 ரன்களுக்கு மேல் குவித்தால் வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதே.

கொஞ்சம் பிளவுண்ட பிட்சில் இரு அணியினரும் நவீன கிரிக்கெட்டின் மோஸ்தருக்கேற்ப சுழற்பந்து வீச்சாளர்களைக் கொண்டு தொடங்கினர்.

ஷார்ட் பிட்ச் பந்துவீச்சை நியூஸிலாந்தின் மெக்லினாகன் பயன்படுத்திய அளவுக்கு தென் ஆப்பிரிக்கா பயன்படுத்தவில்லை. ஃபுல் லெந்த்தில் வீசி நியூஸிலாந்து பேட்ஸ்மென்களை எழும்ப விட்டது தென் ஆப்பிரிக்க பந்துவீச்சு.

குறிப்பாக கப்தில், வில்லியம்சன் ஆகியோர் தூக்கி அடித்தனர். இருவரும் இணைந்து 5.3 ஓவர்களில் 52 ரன்களைச் சேர்த்தனர், அப்போது 17 பந்துகளில் 4 பவுண்டரி ஒரு சிக்சருடன் அபாயகரமாகத் திகழ்ந்த கேப்டன் வில்லியம்சன் அபாட் பந்தை தேர்ட்மேனில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 2 ஓவர்கள் கழித்து கப்திலுக்கு கேட்ச் விடப்பட்டது. லாதம் 3 ரன்களில் லீயியிடம் காலியானார். கப்தில் 30 பந்துகளில் 6 பவுண்டரி 2 சிக்சருடன் அரைசதம் கடந்து பிறகு 60 ரன்களில் பெஹார்டியனிடம் ஆட்டமிழந்தார். ஆனால் ஸ்கோர் அப்போதே 12-வது ஓவரில் 104 ரன்கள் என்று இருந்தது.

17 பந்துகளில் 20 ரன்கள் எடுத்த கிராண்ட் எலியட் பாங்கிஸோ பந்தில் எல்.பி.ஆகி வெளியேறினார். ஆனால், நீஷம், மன்ரோ இணைந்து நன்றாக வெளுத்து வாங்க அடுத்த 4 ஓவர்களில் 33 ரன்கள் வந்தது, குறிப்பாக மன்ரோ 7 பந்துகளில் 18 ரன்களை விளாசித்தள்ளினார். அதிலும் குறிப்பாக அபாட்டின் ஓவரில் இந்த ரன்களை நேர் ஷாட்கள் மூலம் எடுத்தார் மன்ரோ. நீஷம் 19 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 28 ரன்கள் எடுத்தார். ஆனால் மன்ரோ, நீஷம் இருவரையும் ரபாதா அடுத்தடுத்த பந்துகளில் காலி செய்தார். கடைசியில் மில்ன 10 ரன்கள் எடுக்க 20 ஒவர்களில் 177/7 என்று முடிந்தது நியூஸிலாந்து.

இலக்கைத் துரத்திய போது 3-வது ஓவரில் வான் விக் புல் ஆட போதிய இடமின்றி ஆடி ரான்கியிடம் கேட்ச் கொடுத்து 3 ரன்களில் மெக்லினாகன் பந்தில் வெளியேறினார். ஆம்லா 14 ரன்களில் அதிவேக வீச்சாளர் மில்னவிடம் பாயிண்டில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

டிவில்லியர்ஸ் இறங்கி 2 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 9 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து பெரிய ஷாட்டை விரைவில் ஆடப்போய் நேதன் மெக்கல்லமிடம் வீழ்ந்தார்.

ரைலி ரூசோவ் (26), பெஹார்டியன் (36), டேவிட் மில்லர் (29) ஆகியோரும் பொறுமையின்றி ஆட்டமிழக்க 15-வது ஓவரில் 112/5 என்று ஆனது தென் ஆப்பிரிக்கா, அதன் பிறகு 145 ரன்களையே எடுக்க முடிந்தது. நியூஸிலாந்து தரப்பில் நேதன் மெக்கல்லம், மெக்லினாகன், சோதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். தொடர் சமன் ஆனது. ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதுகளை மார்டின் கப்தில் பெற்றார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x