Published : 16 Mar 2020 09:51 AM
Last Updated : 16 Mar 2020 09:51 AM

ஐஎஸ்எல் இறுதி ஆட்டத்தில் தோல்வி ஏன்?- சென்னையின் எப்சி பயிற்சியாளர் விளக்கம்

மர்கோவா

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் தோல்வி கண்டது ஏன் என்பதற்கு சென்னை யின் எப்சி அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஓவன் கோய்லே விளக்கமளித்துள்ளார்.

மர்கோவாவில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ஐஎஸ்எல் கால்பந்து இறுதிப் போட்டியில் சென்னையின் எப்சி, ஏடிகே அணிகள் மோதின. இதில் ஏடிகே அணி 3-1 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்சி அணியை வீழ்த்தி 3-வது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது.

தோல்வி குறித்து நேற்று செய்தியாளர்களிடம் சென்னையின் எப்சி தலைமைப் பயிற்சியாளர் ஓவன் கோய்லே கூறியதாவது:

நாங்கள் மிகச் சிறந்த அணியாக இறுதிப் போட்டியில் களமிறங்கினோம். ஆனால் எதிரணியின் கோல்கள் ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டன. தொடக்க நேரத்தில் எங்களுக்கு சில எளிதான வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் அவற்றை கோலாக மாற்ற தவறிவிட்டோம்.

எங்கள் அணியை விட ஏடிகே சிறந்த அணி என்று யாரும் சொல்லமுடியாது. அந்த அளவுக்கு சிறந்த அணியாக நாங்கள் களமிறங்கினோம். ஆனால் சென்னையின் எப்சி அணியினர், பினிஷிங்கில் கோட்டை விட்டனர். இறுதி கட்டத்தில் எங்களால் கோலடிக்க முடியாமல் போய்விட்டது. அதே நேரத்தில் எதிரணியினர் எளிதாக கோலடிக்கவும் நாங்கள் விட்டுவிட்டோம்.

ஆட்டத்தின்போது பந்து எங்கள் வசம் 70 சதவீதம் இருந்தது. ஆனால் கோலடிக்கும் வாய்ப்புகளை வீணடித்தோம். அதே நேரத்தில் அவர்கள் வாய்ப்புகளை துல்லியமாகப் பயன்படுத்தி கோலாக மாற்றினர். மீண்டும் பினிஷிங் நேரத்தில் கோட்டை விட்டோம். ஏடிகே அணியினர் கடைசியாக அடித்த 2 கோல்களையும் நாங்கள் தடுத்திருக்க முடியும் என்று உணர்கிறேன்.

சென்னை வீரர்கள் அடிக்கும் பந்துகளை அருமையாக தடுத்தார் ஏடிகே கோல்கீப்பர் அரிந்தம் பட்டாச்சார்யா. இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருதை யாருக்கு கொடுக்க வேண்டும் என்று என்னைக் கேட்டால் அரிந்தம் பட்டாச்சார்யாவுக்கு கொடுக்கவேண்டும் என்றுதான் நான் சொல்வேன். அந்த அளவுக்கு ஒரு சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தினார். வெற்றியின் முழு உரிமையையும் அவருக்கே கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஐஎஸ்எல் தொடரின்போது கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில், சென்னையின் எப்சி பயிற்சியாளராக இருந்த ஜான் கிரகோரி மாற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக ஓவன் கோய்லே புதிதாக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் சென்னையின் எப்சி அணி 14 போட்டிகளில் விளையாடி 2 தோல்விகளை மட்டுமே பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x