Published : 15 Mar 2020 04:21 PM
Last Updated : 15 Mar 2020 04:21 PM

எழுச்சித் துவக்கம் கண்டு பெரிய அளவில் செல்வதற்கு முன்பே முடிந்த கிரிக்கெட் வாழ்க்கை: வினோத் காம்ப்ளியின் தொடர் இரட்டைச் சத நாள்- மறக்க முடியுமா?

சச்சின் டெண்டுல்கரின் பால்ய கால பள்ளித் தோழனும் கிரிக்கெட் சகாவுமான மும்பையைச் சேர்ந்த முன்னாள் அபாரத் திறமை கொண்ட இடது கை பேட்ஸ்மேன் வினோத் காம்ப்ளி மார்ச் 15, 1993-ல் தொடர்ச்சியாக 2வது இரட்டைச் சதத்தை டெஸ்ட் போட்டிகளில் எடுத்து அசத்திய நாளாகும் இது.

தொடர்ச்சியாக 2 இரட்டைச் சதங்களை எடுத்து டான் பிராட்மேன், வாலி ஹேமண்ட் என்ற ஜாம்பவான்கள் பட்டியலில் அப்போதே இணைந்தார் வினோத் காம்ப்ளி.

இன்றைய தினம் 1993ம் ஆண்டு டெல்லி பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக காம்ப்ளி 227 ரன்களை எடுத்தார், இதற்கு முந்தைய டெஸ்ட்டில் இங்கிலாந்துக்கு எதிராக தான் வளர்ந்த மும்பை வான்கெடே ஸ்டேடியத்தில் மேட்ச் வின்னிங் 224 ரன்களை எடுத்தார் வினோத் காம்ப்ளி.

இந்த இரண்டு தொடர் இரட்டைச் சதங்களுமே இந்திய அணிக்கு இன்னிங்ஸ் வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தது.

கேப்டன் அசாருதீன் டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்த போது 3ம் நிலையில் இறங்கினார் வினோத் காம்ப்ளி. மனோஜ் பிரபாகர் ஆட்டமிழந்த பிறகு இறங்கிய காம்ப்ளி, நவ்ஜோத் சிங் சித்துவுடன் சதக்கூட்டணி அமைத்தார். இதோடு மட்டுமல்லாமல் சச்சின், அசாருதீன் ஆகியோருடனும் சதக்கூட்டணி அமைத்து 301 பந்துகளில் 227 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

17 டெஸ்ட் போட்டிகளுடன் முடிந்த இவரது கிரிக்கெட் வாழ்வில் அவர் 1084 ரன்களை 54.20 என்ற சராசரியில் எடுத்ததொடு 2 இரட்டைச் சதங்களுடன் 4 சதங்கள் 3 அரைசதங்களை அவர் எடுத்தார். நியூஸிலாந்துக்கு எதிராக 1995ம் ஆண்டு கட்டாக்கில் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆடினார் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

104 ஒருநாள் போட்டிகளில் ஆடிய வினோத் காம்ப்ளி 2477 ரன்களை 32.59 சராசரியில் எடுத்துள்ளார், இதில் 2 சதங்கள், 14 அரைசதங்களை அவர் எடுத்துள்ளார். 1991ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக ஷார்ஜாவில் ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார், கடைசியாக இதே ஷார்ஜாவில் இலங்கை அணிக்கு எதிராக கடைசி ஒருநாள் போட்டியில் ஆடினார். மொத்தம் 129 முதல் தரப் போட்டிகளில் ஆடிய வினோத் காம்ப்ளி 9965 ரன்களை 35 சதங்கள் 44 அரைசதங்களுடன் 59.67 என்ற சராசரியில் எடுத்துள்ளார்.

221 லிஸ்ட் ஏ போட்டிகளில் 6,476 ரன்களை 41. 24 என்ற சராசரியில் 11 சதங்கள் 35 அரைசதங்களுடன் எடுத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x