Published : 12 Aug 2015 06:18 PM
Last Updated : 12 Aug 2015 06:18 PM

அஸ்வின், தவண், கோலி அபாரம்: முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா ஆதிக்கம்

இலங்கைக்கு எதிராக கால்லேயில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா தன் முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்துள்ளது.

ஷிகர் தவண் 103 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 53 ரன்களுடனும், கேப்டன் விராட் கோலி 77 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 45 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர்.

இருவரும் இணைந்து 3-வது விக்கெட்டுக்காக 100 ரன்களைச் சேர்த்து அணியை நிலைநிறுத்தினர். ரங்கனா ஹெராத்துக்கு அளிக்க வேண்டிய மரியாதையை அளித்து விளையாடிய தவண், கோலி கூட்டணி, சீரற்ற முறையில் வீசிய ஆஃப் பிரேக் பவுலர் தாரிந்து கவுஷல் பந்துகளை அடித்து ஆடினர். இவர் 8 ஓவர்களில் 41 ரன்களை கசியவிட்டார். ரங்கனா ஹெராத் 7 ஓவர்களில் 1 மெய்டனுடன் 15 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார்.

முன்னதாக அஸ்வின் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்ற இலங்கை தன் முதல் இன்னிங்ஸில் 183 ரன்களுக்குச் சுருண்டது. தொடர்ந்து ஆடிய இந்திய அணியில் லோகேஷ் ராகுல் (7), ரோஹித் சர்மா (9) ஆகியோர் சோபிக்கவில்லை.

இலங்கை வேகப்பந்து வீச்சாளர் தம்மிக பிரசாத் பந்துகளை அவ்வப்போது உள்ளே கொண்டு வந்து சற்றே சிரமப்படுத்தினார். அப்படிப்பட்ட பந்தில்தான் ராகுல் 7 ரன்களில் எல்.பி. ஆகி ஏமாற்றமளித்தார்.

ரோஹித் சர்மா அஞ்சேலோ மேத்யூஸின் ஒரு பந்தை ஆடாமல் கால்காப்பில் வாங்க மிக நீண்ட அப்பீல் எழுந்தது, ஆனால் அது நாட் அவுட். அடுத்த பந்தை அருமையாக ஸ்கொயர் டிரைவ் அடித்து தனது ஒரே பவுண்டரியை அடித்தார்.

பிறகு பிரசாத் பந்து ஒன்று உள்ளே வர லெக் திசையில் ஆட நினைத்தார் ரோஹித் சர்மா ஆனால் பந்து கால்காப்பில் பட மீண்டும் ஒரு நீண்ட முறையீடு ஆனால் இம்முறை நோ-பால் ரோஹித் சர்மாவைக் காப்பாற்றியது. ஆனால் அதன் பிறகு நீண்ட நேரம் ரோஹித் நீடிக்கவில்லை.

அடுத்த ஓவரை கேப்டன் மேத்யூஸ் வீச பந்து உள்ளே வர, தடுத்தாட முயன்ற ரோஹித்தின் மட்டையில் படாமல் கால்காப்பில் பட, அதுவும் பின் கால்காப்பில் பட, பந்து ஆஃப் ஸ்டம்ப் லைனில் சரியாக நிலைக்க எல்.பி என்று நடுவர் லாங் தீர்ப்பளித்தார். ரோஹித் மீண்டும் தனது தேர்வுக்கு நியாயம் சேர்க்கவில்லை.

28/2 என்ற நிலையில் ஷிகர் தவண், விராட் கோலி சேர்ந்தனர். தவண் 29 ரன்களில் இருந்த போது கவுஷல் பந்தில் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்தார். ஆனால் கேப்டன் மேத்யூஸ் அதனைக் கோட்டைவிட்டார். பிறகு நுவான் பிரதீப் பந்தை ஆன் திசையில் தட்டிவிட்டு 92-வது பந்தில் அரைசதம் கண்டார் ஷிகர் தவண்.

மாறாக விராட் கோலி களமிறங்கியவுடன் இலங்கை அணி சற்றே நெருக்கியது. இதனால் 12 பந்துகளில் 1 ரன்னையே அவர் எடுத்திருந்தார். பிறகு மேத்யூஸை ஒரு அற்புதமான ஆஃப் டிரைவ் பவுண்டரி அடித்தார். பிறகு தம்மிக பிரசாத் பந்து ஒன்றை பாயிண்டில் மாட்டடி அடித்து பவுண்டரி விளாசினார்.

19-வது ஓவரில் ஹெராத் வீச முன்னால் வந்து ஆன் திசையில் திருப்பி விட முயன்றார் அது பார்வர்ட் ஷார்ட் லெக்கில் கேட்ச் உயரத்தில் சென்றது, பீல்டர் டைவ் அடித்தார் முடியவில்லை. கோலி அப்போது 17 ரன்களில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு ஸ்வீப், நேர் டிரைவ் உட்பட சில ஷாட்களை ஆடினார். நாளை ஆட்டத்தின் 2-ம் நாள். முதல் நாள் இந்திய ஆதிக்கத்திற்கு 2-ம் நாள் இலங்கை பதிலடி கொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x