Published : 22 May 2014 01:01 PM
Last Updated : 22 May 2014 01:01 PM
பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து தன்னை நீக்கி, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் மாற்றம் கோரி என்.சீனிவாசன் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் நிராகரித்தனர்.
கிரிக்கெட் சூதாட்ட விவகாரம் தொடர்பான வழக்கில், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக இருந்த சீனிவாசன் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதில், ஐபிஎல்-7 பணிகளை கவனிக்க சுநீல் காவஸ்கரும், இதர கிரிக்கெட் பணிகளை கவனிக்க சிவ்லால் யாதவும் நியமிக்கப்பட்டனர்.
கிரிக்கெட் சூதாட்ட வழக்கு விசாரணை நீதிபதி முத்கல் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு, ஆகஸ்ட் இறுதிக்குள் அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டது. விசாரணை முடியும்வரை, சீனிவாசனுக்கு தடை விதிக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.பட்நாயக், இப்ராஹிம் கலிஃபுல்லா அடங்கிய அமர்வு கடந்த மார்ச் 28, மே 16 ஆகிய தேதிகளில் இந்த உத்தரவுகளை பிறப்பித்திருந்தது.
இந்த உத்தரவில் மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரி சீனிவாசன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு விடுமுறை கால நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.எஸ்.சவுஹான், ஏ.கே.சிக்ரி அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
"பதவி நீக்கம் செய்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு நியாயமற்றது; இது சமூத்தில் பெரும் அவமரியாதையை ஏற்படுத்தி உள்ளது. ஐபிஎல் தொடர்பான வழக்கு என்பதால், ஐபிஎல் பணிகள் தவிர, இதர கிரிக்கெட் வாரிய பணிகளில் ஈடுபட என்னை அனுமதிக்க வேண்டும். இந்த வழக்கின் அடுத்த விசாரணை செப்டம்பரில் வரும். அதற்குள் பதவிக்காலம் முடிந்துவிடும். எனவே, உத்தரவில் மாற்றம் செய்ய வேண்டும்" என்று சீனிவாசன் தரப்பில் வாதிடப்பட்டது.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், "ஏற்கனவே வேறொரு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மாற்றம் செய்வது இந்த நீதிமன்றத்தின் பணியல்ல. உங்களை பதவி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தபோது, எதிர்மனுதாரர் என்ற முறையில் நீதிமன்றத்தில் இருந்துள்ளீர்கள். அப்போதே எதிர்ப்பு தெரிவித்து உத்தரவு பெற்றிருக்கலாம். அது ஒன்றும் ஒருசார்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு அல்ல" என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT