Last Updated : 28 Aug, 2015 09:44 AM

 

Published : 28 Aug 2015 09:44 AM
Last Updated : 28 Aug 2015 09:44 AM

உலக தடகள சாம்பியன்ஷிப் 200 மீ. ஓட்டத்தில் தொடர்ந்து 4-வது முறையாக தங்கம் வென்றார் போல்ட்

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் 200 மீ. ஓட்டத்தில் தொடர்ந்து 4-வது முறையாக தங்கம் வென்று சாதித்துள்ளார் ஜமைக்காவின் உசேன் போல்ட். இந்தப் போட்டியில் அவர் வென்றுள்ள 2-வது தங்கப் பதக்கம் இது. முன்னதாக 2-வது நாளில் நடந்த 100 மீ. ஓட்டத்திலும் அவர் தங்கம் வென்றார்.

15-வது உலக தடகள சாம்பியன் ஷிப் போட்டி சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்று வரு கிறது. இதில் 6-வது நாளான நேற்று நடந்த ஆடவர் 200 மீ. ஓட்டத்தின் இறுதிச்சுற்றில் ஆரம்பம் முதலே அசத்தலாக ஓடிய உசேன் போல்ட் 19.55 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கப் பதக்கம் வென்றார். இதுதவிர இந்த ஆண்டில் 200 மீ. ஓட்டத்தில் அதிவேகமாக இலக்கை எட்டியவர் என்ற பெருமையும் உசேன் போல்ட் வசமானது.

உசேன் போல்ட்டுக்கு கடும் சவால் அளிப்பார் என எதிர்பார்க்கப் பட்ட அமெரிக்காவின் ஜஸ்டின் கேட்லினால் அவரை நெருங்க முடியவில்லை. அவர் 19.74 விநாடிகளில் இலக்கைக் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். தென் ஆப்பிரிக்காவின் அனாசோ ஜோபாட்வானா 19.87 விநாடிகளில் இலக்கை எட்டி வெண்கலம் வென்றார்.

2008-ல் இதே பறவைக்கூடு மைதானத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின்போதுதான் உசேன் போல்ட்டின் பதக்க வேட்டை ஆரம்பமானது. அது முதல் தற்போது வரையில் அவரின் ஆதிக்கத்தை யாராலும் தகர்க்க முடியவில்லை. 2009, 2011, 2013 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் 200 மீ. ஓட்டத்தில் போல்ட் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

2008 முதல் தற்போது வரையில் ஒலிம்பிக், உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் 100 மீ., 200 மீ. ஓட்டங்களில் 12 முறை பங்கேற்றுள்ள போல்ட் 11 முறை தங்கம் வென்றுள்ளார். 2011-ல் தேகுவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியின் 100 மீ. ஓட்டத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் தங்கப் பதக்கத்தை இழந்தார்.

மும்முறைத் தாண்டுதல்

ஆடவர் மும்முறைத் தாண்டுதல் போட்டியில் ஒலிம்பிக் சாம்பியனான நெதர்லாந்தின் கிறிஸ்டியன் டெய்லர் தங்கம் வென்றார். உலக சாம்பியன்ஷிப்பில் அவர் வென்ற 2-வது தங்கம் இது. முன்னதாக 2011-லும் தங்கம் வென்றார்.

நேற்றைய போட்டியில் டெய்லர் தனது கடைசி வாய்ப்பில் 18.21 மீ. தூரம் தாண்டி முதலிடத்தைப் பிடித்தார். இதன்மூலம் சர்வதேச அளவில் அதிக தூரம் தாண்டியவர் கள் வரிசையிலும் 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். பிரிட்டனின் ஜொனாதன் எட்வர்ட் 18.29 தூரம் தாண்டியதே இன்றளவிலும் சாதனையாக உள்ளது. டெய்லருக்கு அடுத்தபடியாக கியூபாவின் பாப்லோ பிச்சார்டோ (17.73 மீ.) வெள்ளியும், 2008 ஒலிம்பிக் சாம்பியனான போர்ச்சு கல்லின் நெல்சன் எவோரா (17.52 மீ.) வெண்கலமும் வென்றனர்.

மகளிர் 400 மீ. ஓட்டம்

மகளிர் 400 மீ. ஓட்டத்தில் அமெரிக்காவின் அலிசன் பெலிக்ஸ் 49.26 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றார். பஹாமாஸின் ஷான் மில்லர் (49.67) வெள்ளியும், ஜமைக்காவின் ஷெரிக்கா ஜாக்சன் (49.99) வெண்கலமும் வென்றனர்.

சங்கிலி குண்டு எறிதல்

மகளிர் சங்கிலி குண்டு எறிதல் போட்டியில் போலந்தின் அனிதா வோடர்ஸிக் 80.85 மீ. தூரம் எறிந்து தங்கம் வென்றார். 2001-ல் இதே பிரிவில் தங்கம் வென்ற அனிதா, 2013-ல் வெள்ளி வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

அனிதாவுக்கு அடுத்தபடியாக சீனாவின் வெங்ஸியூ ஜங் (76.33) வெள்ளியும், பிரான்ஸின் அலெக்சாண்டர் டேவெர்னியர் (74.02) வெண்கலமும் வென்றனர்.

இறுதிச்சுற்றில் விகாஸ் கவுடா

ஆடவர் வட்டு எறிதல் பிரிவில் இந்திய வீரர் விகாஸ் கவுடா இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். நடப்பு ஆசிய சாம்பியனும், ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவரு மான விகாஸ் கவுடா, ஏ பிரிவு தகுதிச்சுற்றில் 63.86 மீ. தூரம் வட்டு எறிந்து 4-வது இடத்தைப் பிடித்தார். ஏ, பி என இரு பிரிவுகளிலிருந்தும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியவர் கள் வரிசையில் விகாஸ் கவுடாவுக்கு 7-வது இடம் கிடைத்துள்ளது. இந்தப் போட்டிக்கான இறுதிச்சுற்று நாளை நடக்கிறது.

கவுடா பங்கேற்றுள்ள 5-வது உலக சாம்பியன்ஷிப் போட்டி இது. 2005 முதல் இதில் பங்கேற்று வரும் கவுடா, 2005, 2007 ஆகிய ஆண்டுகளில் தகுதிச்சுற்றோடு வெளியேறினார். 2011, 2013 ஆகிய ஆண்டுகளில் 7-வது இடத்தைப் பிடித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x