Published : 14 Mar 2020 06:43 PM
Last Updated : 14 Mar 2020 06:43 PM
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில், இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் வர்ணனையாளர் குழுவிலிருந்து முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் திடீரென நீக்கப்பட்டது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1996-ம் ஆண்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றவுடன் வர்ணனையாளர் பணிக்குத் திரும்பிய மஞ்சுரேக்கர், தொடர்ந்து பிசிசிஐ அமைப்புடன் இணைந்து பணியாற்றி வந்த நிலையில் திடீரென நீக்கப்பட்டுள்ளார். இதற்கான காரணம் ஏதும் தெரிவி்க்கப்படவி்லலை.
தர்மசலாவில் நடந்த இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரில் பிசிசிஐ வர்ணனையாளர் குழுவில் சுனில் கவாஸ்கர், முரளி கார்த்திக், எல் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் மட்டுமே இடம் பெற்றிருந்தார்கள். ஆனால், பிசிசிஐ வர்ணனையாளர் குழுவில் மஞ்சுரேக்கர் பெயர் இடம் பெறாதது ஏன் எனத் தெரியவில்லை.
ஆனால், கரோனா வைரஸ் பரவல் காரணமாகத் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்துவரும் தொடரில் மஞ்சுரேக்கர் இடம் பெறுவாரா என்பது குறித்தும் எந்த தகவலும் இல்லை.
மேலும், ஐபிஎல் போட்டியிலும் மஞ்சுரேக்கருக்கு வர்ணனையாளர் பொறுப்பு வழங்கப்படாது என்றே ஐபிஎல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், ஐசிசி வர்ணனையாளர் பேனலில் இடம் பெற்றிருக்கும் மஞ்சுரேக்கர் அங்குள்ள பட்டியலில் தொடர்ந்து இருந்து வருகிறார். பிசிசிஐ மற்றும் ஐபிஎல்போட்டிகளில் மட்டுமே மஞ்சுரேக்கர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், " தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பிசிசிஐ வர்ணனையாளர் குழுவில் மஞ்சுரேக்கர் இடம் பெறவில்லை. அடுத்த தொடருக்கு இருப்பாரா எனத் தெரியாது. என்ன காரணத்தால் அவர் நீக்கப்பட்டார் என்பதும் தெரியாது" எனத் தெரிவித்தார்
இந்திய அணியின் முன்னாள் வீரரான மஞ்சுரேக்கர், சமீபகாலங்களாக இந்திய அணியின் செயல்பாட்டையும், வீரர்கள் குறித்து எதிர்மறையான விமர்சனத்தை வைத்துவந்தார் . அதனால் அவர் நீக்கப்பட்டுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக உலகக்கோப்பைப் போட்டியின் போது ரவிந்திர ஜடேஜாவை துக்கடா வீரர் என்று மஞ்சுரேக்கர் செய்த விமர்சனம் பெரும் சர்ச்சையானது. ஆனால், அதற்குப் பதிலடியாக அரைசதம் அடித்து ரவிந்திர ஜடேஜா பதிலடி கொடுத்ததால் அதற்கு மஞ்சுரேக்கர் மன்னிப்பு கோரினார்.
மேலும், நியூஸிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி வீரர்களின் பேட்டிங்கை கடுமையாக விமர்சித்தார். இந்திய அணி வீரர்கள் பேட்டிங்கை தொழில்நுட்ப ரீதியாக தவறுகளை மஞ்சுரேக்கர் வெளியிட்டு விமர்சித்ததும் பிசிசிஐக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதால் நீக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.
பிசிசிஐ வர்ணனையாளராக இருந்து கொண்டு இந்திய அணியின் செயல்பாட்டை வெளிப்படையாக விமர்சித்ததால் நடவடிக்கையை மஞ்சுரேக்கர் எதிர்கொண்டிருக்கலாம் எனத் தெரிகிறது.
உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட இந்திய அணியை நிர்வகிக்கும் குழுவில் வரலாற்று அறிஞர் ராமச்சந்திர குஹா இடம் பெற்றிருந்தார். அவர் தனது பதவிக்காலம் முடியும்போது சில அதிர்ச்சிகரமான வார்த்தைகளைக் கூறிச்சென்றார். அதாவது இந்திய அணிக்குள் ஆபத்தான கலாச்சாரம் உருவாகி வருகிறது. அனைத்தும் கேப்டன் ஆசைப்படி நடக்க வேண்டும் என்ற நிலை இருக்கிறது, எதிர்காலத்தில் வர்ணனனையாளர்கள் கூட கேப்டன் சொல்படிதான் தேர்வு செய்யப்படுவார்கள் என்று விமர்சித்துச் சென்றார். இதை இங்கு நினைவுபடுத்த வேண்டியதுள்ளது.
ஏற்கனவே இதேபோன்று வர்ணனனையாளர் ஹர்ஷா போக்லேவும் திடீரென்று நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT