Published : 14 Mar 2020 02:14 PM
Last Updated : 14 Mar 2020 02:14 PM
உலக அளவில் அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் சீனாவில் உருவாகிப் பரவியுள்ளதையடுத்து இந்த பாதிப்புக்கு சீனாதான் காரணம். அவர்களின் நாய், பூனை, வவ்வால் சாப்பிடும் உணவு முறைதான் காரணம் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர் கண்டித்துள்ளார்.
உலக அளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸால் சீனாவில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததைச் சேர்ந்து உலக அளவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரமாக அதிகரித்துள்ளது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவரும் கரோனா வைரஸ் முதன் முதலில் சீனாவில் ஹூபே மாநிலம், வூஹான் நகரிலிருந்துதான் பரவியது. மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கரோனா வைரஸைப் பரப்பிய சீனாவைப் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர் காட்டமாக விமர்சித்துள்ளார்.
ஷோயப் அக்தர் தனது யூடியூப்பில் பேசியுள்ளதாவது:
''ஏன் நீங்கள் வவ்வாலைச் சாப்பிடுகிறீர்கள். அதன் ரத்தத்தையும், சிறுநீரையும் குடிக்கிறீர்கள் என எனக்கு ஒன்றுமே புரியவில்லை. இந்த வவ்வால் மூலம்தான் கரோனா போன்ற வைரஸ் உலகம் மூலம் பரவியுள்ளது.
நான் சீன மக்களைப் பற்றித்தான் பேசுகிறேன். சீன மக்களின் உணவு முறைதான் உலகத்தையே சிக்கலில் வைத்துள்ளது. நாய், பூனை, வவ்வால் எல்லாவற்றையும் எப்படித்தான் சாப்பிடுகிறீர்கள் என்று உண்மையிலேயே என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நினைத்தாலே கோபமாக வருகிறது.
கரோனா வைரஸால் உலகமே பெரும் சிக்கலில் இருக்கிறது. சுற்றுலாத் தொழில் பெரும் சரிவைச் சந்தித்து, பொருளாதாரம் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த உலகமே ஸ்தம்பித்திருக்கிறது.
நான் சீன மக்களுக்கு எதிராகப் பேசவில்லை. நான் விலங்குகளுக்கான சட்டத்துக்கு எதிரானவனும் இல்லை. இதுபோன்ற உணவுகளைச் சாப்பிடுவது உங்கள் கலாச்சாரம், பாரம்பரியம் என்பதை நான் புரிந்துகொண்டேன். ஆனால் இது நிச்சயம் உங்களுக்குப் பயனளிக்காது. மனிதநேயத்தைக் கொலை செய்கிறீர்கள்.
சீனர்களை ஒதுக்குங்கள் என்று நான் சொல்லவில்லை, ஆனால், சில சட்டங்கள் இருக்கின்றன. சாப்பிடுவதற்கு உணவுகள் இருக்கின்றன. எல்லாவற்றையும், எதை வேண்டுமானாலும் உங்களால் சாப்பிட முடியாது.
பிஎஸ்எல் கிரிக்கெட்டில் விளையாடாமல் வெளிநாட்டு வீரர்கள் சென்றதுதான் எனக்கு மிகப்பெரிய கோபம். நீண்ட ஆண்டுகளுக்குப் பின் பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டிகள் வந்துள்ளன. பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையே பிஎஸ்எல் டி20 கிரிக்கெட் போட்டிகள் எங்கள் நாட்டில் நடந்து வருகின்றன. ஆனால் இந்த கரோனா வைரஸ் தாக்கத்தால், ரசிகர்கள் இல்லாமல் போட்டி நடக்கும் என்ற அறிவிப்பைக் கேட்டு வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் புறப்பட்டுவிட்டார்கள்.
இந்தியாவுக்குள் கரோனா வைரஸ் பரவாமல் கடவுள் தடுக்கிறார். அங்கே 130 கோடி மக்கள் இருக்கிறார்கள். இந்தியாவில் உள்ள எனது நண்பர்களுடன் பேசி வருகிறேன், அவர்கள் நலமுடன் இருக்கட்டும்.
ஐபிஎல் போட்டிகளும் ஏப்ரல் 15-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக அறிந்தேன். கரோனா வைரஸால் சுற்றுலாத்துறை, ஹோட்டல் துறை, போக்குவரத்து, ஒளிபரப்பு என அனைத்தும் இழப்பைச் சந்தித்துள்ளன''.
இவ்வாறு ஷோயப் அக்தர் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT