Published : 14 Mar 2020 10:59 AM
Last Updated : 14 Mar 2020 10:59 AM
நியூஸிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் லாக்கி பெர்குஷனுக்கு கரோனா வைரஸ் அறிகுறி இருந்ததையடுத்து, அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டு, தனி அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளார் என்று நியூஸி அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டி நேற்று நடந்த நிலையில், அதில் ஆஸ்திரேலிய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியின்போது ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் கானே ரிச்சர்ட்ஸன் தொண்டை அழற்சி, இருமல் என கரோனா அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்டார். இதனால் அவர் போட்டியில் இருந்து பாதியிலேயே விலகினார். இதையடுத்து ரிச்சர்ட்ஸனுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கரோனா பாதிப்பு இல்லை எனத் தெரியவந்தது.
இந்நிலையில் நியூஸிலாந்து அணியின் வலது கை வேகப்பந்துவீச்சாளர் லாக்கி பெர்குஷனுக்கு இன்று காலை முதல் தொண்டையில் அழற்சியும், வலியும் இருமலும் இருந்தன. இதையடுத்து, அவருக்கு உடனடியாக மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டு, ஹோட்டலில் தனி அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
அடுத்த 24 மணிநேரத்துக்கு பெர்குஷனை தனி அறையில் தங்கியிருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். பெர்குஷனின் மருத்துவ ஆய்வு முடிவுகள் கிடைத்தபின், அவர் அணிக்குள் மீண்டும் சேர்க்கப்படுவார் என்று நியூஸிலாந்து அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் அச்சம் காரணமாக சிட்னியில் நேற்று நடந்த முதல் ஒருநாள் ஆட்டத்தில் ரசிகர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT