Published : 13 Mar 2020 07:40 PM
Last Updated : 13 Mar 2020 07:40 PM
2018-19 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் விராட் கோலி தலைமை இந்திய அணிக் கைப்பற்றியதோடு இந்தியாவுக்கு மட்டுமல்ல துணைக்கண்ட அணிகளுக்கெல்லாம் ஆஸி. யில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது.
இந்தத் தோல்வி ஆஸ்திரேலிய அணியினர் பலரின், பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கரின் பல நாள் தூக்கத்தை கெடுத்தது என்னவோ உண்மை. அந்தத் தொடரில் விராட் கோலி ஆஸ்திரேலிய அணியைக் கடுமையாக ஸ்லெட்ஜிங் செய்தார்.
இந்நிலையில் அமேசான் டாக்குசீரிஸின் 3வது அத்தியாயத்தில் அந்தத் தொடர் பற்றி டிம் பெய்ன், ஜஸ்டின் லாங்கர் பேசியுள்ளனர், அதில் விராட் கோலி உண்மையில் தைரியமானவர் அல்ல, பதற்றமானவர், தன் பதற்றத்தையும் அதைரியத்தையும் மறைத்துக் கொள்ள தைரியம் போல் செயல்படுகிறார் என்றார் டிம் பெய்ன்.
அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்று தொடரை முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் வெற்றியுடன் தொடங்கியது, அடுத்த டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 43 ரன்கள் முன்னிலை பெற்றது. பிறகு 2வது இன்னிங்ஸில் 243 ரன்கள் சேர்த்தது.
இந்த 2வது இன்னிங்ஸில்தான் ஸ்டீவ் வாஹ் போல் எதிரணியினரை இந்திய கேப்டன் விராட் கோலி மன ரீதியாக ஒருங்கு குலைவை ஏற்படுத்தும் ஆக்ரோஷ ஸ்லெட்ஜிங்கில் இறங்கினார்.
பெய்ன் கூறும் போது, “கோலி பேட் செய்யும் போது அவரிடம் ஏதும் பேசக்கூடாது என்பது திட்டம். நாங்கள் பேட் செய்யும் போது அந்தந்த வீரர்களின் தனிப்பட்ட முடிவுக்கு விட்டுவிட்டோம். நானும் பொறுத்தது போதும் என்று முடிவெடுத்தேன், அணிக்காக நான் எழுந்து நிற்க வேண்டமா? நான் அணியின் கேப்டன், இப்போது என் முறை, நான் எழுந்து நின்று நாங்கள் இங்கு போராட வந்திருக்கிறோம் என்பதை அவருக்கு (கோலிக்கு) உணர்த்த முடிவெடுத்தேன்
கோலி அப்போது ஸ்லெட்ஜ் செய்த போது, “பெய்ன் தவறு செய்தால் 2-0 என்று நாம் ஜெயிப்போம், அதன் பிறகு என்ன பேசுவார்கள்?” என்று கூறினார், நான் அதற்கு “முதலில் பேட் செய்தால் தான் அது முடியும் பெரிய தல” என்றேன்.
கோலியைப் பொறுத்தவரை பதற்றத்தில் இருந்தார், பதற்றத்தை மறைத்துக் கொள்ளவே அவர் தைரியம் போல் காட்டிக் கொண்டார். இன்னும் 6 ஆஸி. விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியாக வேண்டும், ஆஸ்திரேலிய பின் வரிசை வீரர்களை எளிதில் வீழ்த்தி விட முடியுமா என்ன? இந்தச் சமயத்தில் கோலிக்கு நெருக்கடி கொடுத்தால் நிச்சயம் நாம் வெற்றியின் பக்கம்.
நாங்கள் ஆட ஆட அவர் மேலும் ஆக்ரோஷமானவராக மாறினார். இந்திய அணியினர் கவலையடைந்தனர், ஆகவே நாங்கள் கொஞ்சம் திறமையுடன் ஆடினால் வெற்றி உறுதி என்று தெரிந்தது. கோலி என்னை ‘பார்ட் டைம் கேப்டன்’ என்று கேலி செய்தார், ஆனால் பதிலுக்கு அவரைப் புகழ்ந்து பேசினேன். கோலியிடம் சண்டையிடக்கூடாது ஏனெனில் அதுதான் அவருக்குப் பிடிக்கும், லேசாக அவரைத் தட்டி விட்டால் போதும் வெடிக்கத் தயாராக இருப்பார்” என்று பெய்ன் கூறியுள்ளார்.
அந்த டெஸ்ட் போட்டியில் பெய்ன் கடினமாக ஆடி 116 பந்துகளில் 37 ரன்களை எடுத்தார். 247 ரன்கள் இந்தியாவுக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. கோலி 2வது இன்னிங்ஸில் நேதன் லயன் பந்தில் 17 ரன்களில் வெளியேறினார். இந்திய அணி 146 ரன்களில் தோல்வி அடைந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT