Published : 13 Mar 2020 05:59 PM
Last Updated : 13 Mar 2020 05:59 PM

கேலரியில் போய் விழுந்த ‘சிக்சர்’- பந்தை எடுக்க ஆளில்லை, பீல்டர் போய் எடுக்கும் வரை நின்ற ஆட்டம்: ஆஸி.-நியூஸி சுவாரஸ்யங்கள்

காலி சிட்னி மைதானம்.

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சிட்னியில் இன்று நடைபெற்ற ஆஸி.-நியூஸி. ஒருநாள் போட்டியில் ரசிகர்கள் இல்லாமல் காலியாக இருந்தது மைதானம், நவீன பேட்ஸ்மென்களுக்கு இது ஒரு புதுவித அனுபவமாக அமைந்தது.

எங்கு சென்றாலும் ரசிகர்கள், ஆட்டோகிராப், மைதானத்தில் ரசிகர்களுடன் உரையாடல், ஆட்டோகிராப், பவுண்டரிகள், சிக்சர்கள் என்றால் பெரிய ஆரவாரம் என்று பழகிய நவீன வீரர்களுக்கு ஆளேயில்லாமல் ஒரு பெரிய மவுனத்தில் மட்டையும் பந்தும் மட்டும் சப்தமிடும் ஒரு அனுபவம் இன்று சிட்னியில் ஏற்பட்டது.

வார்னர் அரைசதம் எடுக்கிறார், ஆனால் அவருக்கு அது தெரியவில்லை, மட்டையை உயர்த்தவில்லை. சுத்தமாக தன் அரைசதத்தை அவரே மறந்து விட்டார். ரசிகர்கள் இல்லாததால் யாருக்காக மட்டையை உயர்த்த வேண்டும் என்பது போல் அவர் இருந்ததாகத் தெரியவில்லை, அரைசதம் எடுத்ததையே அவர் மறந்து விட்டார் போலும். பிறகு ஓய்வறையிலிருந்து சக வீரர்களின் கரகோஷம் எழ மட்டையை உயர்த்தினார் வார்னர்.

22 வீரர்களுக்கும் இத்தனையாண்டு காலம் இல்லாத ஒரு புதிய அனுபவம். மேலும் சிக்சர்கள் சென்று பார்வையாளர்கள் பகுதியில் விழுந்த போது பீல்டர்களே ஏறிக்குதித்து நாற்காலிகளுக்கு அடியில் குனிந்து தேடி பந்தை எடுக்க வேண்டியிருந்தது.

லாக்கி பெர்கூசன் ஒருமுறை நாற்காலிகளுக்கு அடியில் குனிந்து பந்தை எடுத்து வந்தார், நியூஸிலாந்து இன்னிங்சின் போது ஆஷ்டன் ஆகர் பந்தை ஸ்டேடியத்தில் தேடிக்கொண்டே இருந்தார், ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தவே பட்டது. எப்படியோ பந்தை அவர் கண்டுபிடிக்க பிறகு ஆட்டம் தொடங்கியது.

ரசிகர்கள் இல்லா கிரிக்கெட், ஒரு புதிய அனுபவத்தை இவர்களுக்கு அளித்திருக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x