Published : 13 Mar 2020 01:46 PM
Last Updated : 13 Mar 2020 01:46 PM
நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியின்போது ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் கானே ரிச்சர்ட்ஸன் உடல்நலக் குறைவால் பாதியிலேயே வெளியேறியதால் அவருக்கு கரோனா வைரஸ் குறித்த பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது..
நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் சிட்னியில் இன்று தொடங்கியது. கரோனா வைரஸ் அச்சம் காரணமாக, மைதானத்தில் ரசிகர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இரு நாட்டு வீரர்கள், அணியின் உதவியாளர்கள், கேமராமேன்கள், நடுவர்கள் மட்டுமே இருந்தனர்.
இதில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் கேன் ரிச்சர்ட்ஸன் பந்துவீசிக் கொண்டிருந்தபோது, திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அவருக்குத் தீவிரமான தொண்டை வலியும், இருமலும் காய்ச்சலும் காணப்பட்டன.
இதையடுத்து, ரிச்சர்ட்ஸனைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து அவரின் ரத்த மாதிரியை எடுத்து கரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், ஆஸ்திரேலிய அணி வீரர்களுடன் கானே ரிச்சர்ட்ஸன் அடுத்த 14 நாட்களுக்கு இணையக்கூடாது என்று தெரிவித்த மருத்துவர்கள் குழு, அவரைத் தனிமைப்படுத்தி வைக்க உத்தரவிட்டனர்.
தென் ஆப்பிரிக்கப் பயணத்தில் ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றிருந்த வலது கை வேகப்பந்துவீச்சாளர் ரிச்சர்ட்ஸன் கடந்த வாரம் தென் ஆப்பிரிக்காவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது ரிச்சர்ட்ஸனுக்கு மருத்துவப் பரிசோதனை முடிவுகளுக்காக மருத்துவர்கள் காத்திருக்கிறார்கள்.
இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் அறிக்கையில் கூறுகையில், "வேகப்பந்துவீச்சாளர் கானே ரிச்சர்ட்ஸனுக்கு விளையாடும்போது, தீவிரமான தொண்டை வலியும், அழற்சியும் இருந்தது, காய்ச்சலுக்கான அறிகுறியும் இருந்ததால், அவரின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கானே ரிச்சர்ட்ஸன் ஆஸ்திரேலிய அணி வீரர்களுடன் இணையாமல் தனித்து இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 14 நாட்கள் சர்வதேச பயணத்துக்குப் பின் அணிக்கு ரிச்சர்ட்ஸன் திரும்பியுள்ளார்.
ரிச்சர்ட்ஸின் மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வந்தபின் அவர் மீண்டும் அணிக்குள் சேர்க்கப்படுவார். முடிவுகள் வரும்வரை காத்திருப்போம்" எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, ரிச்சர்ட்ஸனுக்குப் பதிலாக வேகப்பந்துவீச்சாளர் ஷான் அபாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT