Published : 12 Mar 2020 08:16 PM
Last Updated : 12 Mar 2020 08:16 PM
கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வருவதையடுத்து, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அடுத்து நடக்கும் லக்னோ, கொல்கத்தா ஒருநாள் போட்டிகளில் ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
போட்டி நடைபெறும் கொல்கத்தா, லக்னோ விளையாட்டு அரங்குகளில் ரசிகர்களுக்கு டிக்கெட் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. மழை காரணமாக தர்மசலாவில் இன்று நடைபெற இருந்த இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் ஆட்டம் டாஸ்கூட போடாமல் ரத்து செய்யப்பட்து.
உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய அரசு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்தியாவில் இதுவரை 76 பேர்வரை கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
கரோனா வைரஸிலிருந்து மக்களைக் காக்கும் பொருட்டு அதிகமாகக் கூடும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. அதன்படி, விளையாட்டுப் போட்டிகள் அனைத்துக்கும் ரசிகர்களை அனுமதிக்க வேண்டாம், பங்கேற்கும் வீரர்கள் மட்டும் களத்தில் இருக்கட்டும் . தேவைப்பட்டால் போட்டிகளை ஒத்திவைக்கவோ, ரத்துசெய்யலாம் என்று மத்திய விளையாட்டு அமைச்சகம் தேசிய விளையாட்டு அகாடெமி, பிசிசிஐ ஆகியவற்றுக்கு அறிவுறுத்தியுள்ளது.
ஒருவேளை தவிர்க்க முடியாத சூழலில் போட்டி நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டால் ரசிகர்கள் இல்லாமல் மட்டும் விளையாட்டு நடக்கட்டும் என உத்தரவிட்டுள்ளது.
இதனால் வரும் 15-ம் தேதி லக்னோவில் நடக்கும் இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது ஒருநாள் ஆட்டம், 18-ம் தேதி நடக்கும் 3-வது போட்டி ஆகியவற்றில் ரசிகர்களுக்கு அனுமதி இருக்காது எனத் தெரிகிறது
இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் நிருபர்களிடம் கூறுகையில், " விளையாட்டு அமைச்சகத்தின் அறிவுரைக் கடிதத்தைப் பெற்றோம். அதிகமான ரசிகர்கள் கூடும் விளையாட்டுகளை ஒத்திவைக்கவோ அல்லது ரத்து செய்யவோ அல்லது ரசிகர்கள் அனுமதிக்காமல் நடத்தவோ கேட்டுக்கொண்டுள்ளது. நிச்சயமாக விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் உத்தரவுக்கு கட்டுப்படுவோம்" எனத் தெரிவித்தார்
இதற்கிடையே பெங்கால் கிரிக்கெட் அமைப்பு, கொல்கத்தாவில் நடக்கும் 3-வது போட்டிக்கான டிக்கெட் விற்பனையை திடீரென நிறுத்தியுள்ளது.
இதுகுறித்து பெங்கால் கிரிக்கெட் அமைப்பின் தலைவர் அபிஷேக் டால்மியா கூறுகையில், " முதல்வர் மம்தா பானர்ஜியுடன் கரோனா வைரஸ் தொடர்பாகவும், கிரிக்கெட் போட்டி தொடர்பாகவும் ஆலோசனை நடத்தினேன். அரசின் அறிவுரைப்படி டிக்கெட் விற்பனை அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. அடுத்த உத்தரவு வரும்வரை டிக்கெட் விற்பனை இருக்காது.
ரசிகர்கள் இல்லாமல் போட்டி நடக்குமா என்பது குறித்து என்னால் இப்போது கூற முடியாது. டிக்கெட் விற்பனை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. அடுத்த விவரங்களை விரைவில் தெரிவிக்கிறோம்" எனத் தெரிவித்தார்
ஒருவேளை ரசிகர்களுக்கு அனுமதியில்லாமல் இரு ஒருநாள் போட்டிகளும் நடந்தால், தொலைக்காட்சி உரிமையாளர்கள், கேமிராமேன்கள், வர்ணனையாளர்கள், பத்திரிகையாளர்கள், வீரர்கள், உடன் வரும் ஊழியர்கள் ஆகியோர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT