Published : 28 Aug 2015 02:42 PM
Last Updated : 28 Aug 2015 02:42 PM

3-வது டெஸ்ட்: ராகுல், ரஹானே ஆட்டமிழந்த பிறகு கனமழை; இந்தியா 50/2

கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் இன்று தொடங்கிய 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா 2 விக்கெட்டுகளை இழந்து 50 ரன்கள் எடுத்திருந்த போது கன மழை பெய்ய ஆட்டம் இன்னும் தொடங்கவில்லை.

விராட் கோலி 2 பவுண்டரிகளுடன் 14 ரன்களுடனும், புஜாரா 2 பவுண்டரிகளுடன் 19 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

முன்னதாக, டாஸ் வென்ற மேத்யூஸ், பிட்சில் புற்கள் காணப்பட இந்தியாவை முதலில் பேட் செய்ய அழைத்து அதில் ஓரளவுக்கு வெற்றியும் கண்டார்.

காரணம் ராகுல் விக்கெட்டை முதல் ஓவரிலேயே வீழ்த்தினார் தம்மிக பிரசாத். ராகுல் ஒன்று சதம் அடிக்கிறார் அல்லது 20 ரன்களுக்குள் ஆட்டமிழக்கிறார். அதனால்தான் 2 சதங்களை அவர் அடித்தாலும் 16 மற்றும் அதற்கும் குறைவான ரன்களில் 7 முறை ஆட்டமிழந்துள்ளார்.

ஆட்டம் தொடங்கி தம்மிக பிரசாத் வீசிய 2-வது பந்தை ஆடாமல் விட்டார் ராகுல், பந்து ஸ்டம்ப்களை பதம் பார்த்தது. முன்னங்கால் குறுக்காக வரவில்லை. அல்லது விட்டு விட நினைக்கும் போது பின்னங்கால் முதலில் குறுக்காக ஆஃப் ஸ்டம்ப் நோக்கி நகர வேண்டும், அதுவும் செய்யவில்லை. முற்றிலும் தவறான கணிப்பில் பவுல்டு ஆனார் ராகுல். ஒருவேளை அவர் காலில் வாங்கியிருந்தாலும் எல்.பி. என்று தீர்ப்பளிக்கப்பட்டிருப்பார். ஒரு தொடக்க வீரராக மோசமான உத்தியைக் கடைபிடித்தார் ராகுல்.

ரஹானே இறங்கி தன்னம்பிக்கையுடன் கால்காப்பையும் மட்டையையும் ஒன்றாக சேர்த்து தடுத்தாடினார். 2 அருமையான பவுண்டரிகளையும் அவர் அடித்தார்,

ஆனால் நுவான் பிரதீப் ஒரு பந்தை லெக் அண்ட் மிடிலில் உள்ளே கொண்டு வர முன்னங்காலைக் கொண்டு ஆடாமல் கிரீஸில் நின்ற படியே பந்தின் திசைக்கு மாறாக ஆடியதோடு, அவர் பேலன்சும் தவறினார், ஃபுல் பந்து கால்காப்பில் பட எல்.பி.என்று தீர்ப்பளிக்கப்பட்டார்.

இலங்கை அணியிலும், இந்திய அணியிலும் அறிமுக விக்கெட் கீப்பர்கள். அங்கு குசல் பெரேரா, இங்கு நமன் ஓஜா. ஆனால் குசல் பெரேராவுக்கு நல்ல அறிமுக போட்டியாக இதுவரை அமையவில்லை. கோலி 8 ரன்களில் இருந்த போது இன்ஸ்விங்கர் ஒன்றை வீச கோலி அதனை சரியாக ஆடவில்லை, உடலுடன் மட்டை வராமல் மட்டை தனியாகத் தொங்க பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு விக்கெட் கீப்பருக்கு இடது புறம் சென்றது, எளிதான கேட்ச் வாய்ப்பை அவர் நழுவவிட்டார்.

மேலும் குசல் பெரேரா ஒரு பந்தை சரியாக பிடிக்காமல் பின்னாலிலிருந்த ஹெல்மெட்டுக்கு பந்தை தட்டி விட 5 ரன்கள் கிடைத்தது. மேலும், கோலிக்கு பிரசாத் பந்தில் ஒரு எட்ஜ் எடுக்க அது நல்ல வேளையாக ஸ்லிப் கைகளுக்குச் செல்லவில்லை.

புஜாரா கட்டுக்கோப்புடன் ஆடினாலும் அவரது உத்தி சரியாக இல்லை. இதனை கவாஸ்கர் அவ்வப்போது சுட்டிக்காட்டிய படியே இருந்தார். பந்துகளுக்கு முழுதாக முன்னாலும் வருவதில்லை. பின்னாலும் செல்வதில்லை. மாறாக ஒரு அரைகுறை கால் நகர்த்தலை அவர் தன் வசம் வைத்துள்ளார். இதனால் தடுமாறினார்.

தற்போதைய நிலவரப்படி மைதானம் முழுதும் கவர் செய்யப்பட்டுள்ளது, மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x