Published : 11 Mar 2020 10:44 AM
Last Updated : 11 Mar 2020 10:44 AM
பெங்கால் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் சவுராஷ்டிரா அணி 2-வது நாள் ஆட்டத்தில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 384 ரன்கள் குவித்தது. அர்பித் வசவதா சதம் அடித்தார்.
ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் சவுராஷ்டிரா அணி முதல் நாள் ஆட்டத்தில் 80.5 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்தது. ஹர்விக் தேசாய் 38, அவி பரோட் 54, விஷ்வராஜ் ஜடேஜா 54, ஜேக்சன் 14, சேத்தன் சகாரியா 4 ரன்களில் ஆட்டமிழந்தனர். அர்பித் வசவதா 29 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
நேற்று 2-வது நாள் ஆட்டத்தில் அர்பித் வசவதாவுடன் இணைந்த சேதேஷ்வர் புஜாரா பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்து ஆட்டத்தை முன்னெடுத்துச் சென்றார். அபாரமாக விளையாடிய அர்பித் வசவதா 287 பந்துகளில், 11 பவுண்டரிகளுடன் 106 ரன்கள் சேர்த்த நிலையில் ஷபாஷ் அகமது பந்தில் ஸ்டெம்பிங் ஆனார். 6-வது விக்கெட்டுக்கு புஜாராவுடன் இணைந்து அர்பித் வசவதா 142 ரன்கள் சேர்த்தார்.
இந்த ஜோடி தங்களது தற்காப்பு ஆட்டத்தால் சுமார் 5 மணி நேரம் களத்தில் நின்று 380 பந்துகளை எதிர்கொண்டு பெங்கால் அணியின் பந்து வீச்சாளர்களை கடும் சோதனைக்கு உட்படுத்தியது. புஜாரா 237 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் எடுத்த நிலையில் முகேஷ் குமார் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். பிரேரக் மங்கட் ரன் ஏதும் எடுக்காத நிலையில் முகேஷ் குமார் பந்தில் நடையை கட்டினார்.
2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் சவுராஷ்டிரா அணி 160 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 384 ரன்கள் குவித்திருந்தது. சிராக் ஜானி 13, தர்மேந்திர சிங் ஜடேஜா 13 ரன்களுடன் களத்தில் இருந்தனர். பெங்கால் அணி சார்பில் ஆகாஷ் தீப் 3, முகேஷ் குமார் 2, ஷபாஷ்அகமது 2 விக்கெட்கள் கைப்பற்றினர். கைவசம் 2 விக்கெட்கள் இருக்க 3-வது நாள் ஆட்டத்தை இன்று தொடர்ந்து விளையாடுகிறது சவுராஷ்டிரா அணி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT