Published : 09 Mar 2020 02:41 PM
Last Updated : 09 Mar 2020 02:41 PM
தேர்வுக்குழு தலைமை மாறலாம், உறுப்பினர் மாறலாம் ஆனால் தனது எதிர்காலம் பற்றி எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல் தேர்வுக்குழுவை இருளில் வைத்துள்ள தோனி மீதான நிலைப்பாட்டில் பிசிசிஐ-க்கு எந்த ஒரு மாற்றமும் இல்லை என்று பிசிசிஐ வட்டாரங்கள் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
முன்னெப்போதும் இல்லாத முறையில், முன்னுதாரணம் இல்லாத வகையில் உலகக்கோப்பை அரையிறுதிக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலும் ஆடாமல் உள்நாட்டுக் கிரிக்கெட்டிலும் ஆடாமல் தற்போது ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு மட்டும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருப்பது பலரது புருவத்தையும் உயர்த்தியுள்ளது.
முந்தைய தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத், ‘தோனியிடமிருந்து நாங்கள் நகர்ந்து விட்டோம்’ என்றார், ஆனால் ரவிசாஸ்திரியோ ஐபிஎல் கிரிக்கெட்டில் தோனி நன்றாக ஆடினால் அவரை ஏன் உலகக்கோப்பை டி20க்குத் தேர்வு செய்ய முடியாது? தாரளமாக செய்யலாம் என்று கூறினார். இப்படி ஒவ்வொருவரையும் ஒவ்வொரு கருத்தைக் கூறவிட்டு அமைதியாக வேடிக்கை பார்த்து வருகிறார் தோனி.
“தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் அவரை தேர்வு செய்ய பரிசீலிக்கவில்லை எனும்போது அவரது எதிர்காலம் பற்றி எந்த வித விவாதமும் தங்களிடம் இல்லை” என்று பிசிசிஐ நிர்வாகி ஒருவர் பிடிஐ-யிடம் தெரிவித்துள்ளார்.
“ஏன் தோனி மட்டும், ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆடும் இளம் வீரர்கள், மூத்த வீரர்கள் ஐபிஎல் கிரிக்கெட்டில் நன்றாக ஆடினால் அவர்களும் தேர்வுக்கு பரிசீலிக்கப்படுவார்கள். எனவே உலகக்கோப்பை அணித்தேர்வில் சில ஆச்சரியங்களை நீங்கள் எதிர்பார்க்கலாம்” என்றார் அவர்.
இந்திய அணி கே.எல். ராகுலை விக்கெட் கீப்பராகவும் பினிஷர் ரோலுக்கும் ஏற்கெனவே நியமித்து அவரும் பிரமாதமாக ஆடிவரும் நிலையில் இன்னும் எந்த ஒரு நிலைப்பாட்டிலும் இல்லாத தோனியை இனியும் பிடித்துக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என்று அணித்தேர்வுக்குழு கருதுவதாக செய்திகள் அடிபடுகின்றன.
ஆனாலும் மார்ச் 29-ம் தேதி ஐபிஎல் தொடக்க ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான தோனி தலைமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆட்டத்தையும் தோனியையும் ரசிகர்கள் இன்னமும் கூட ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் என்பதை மறுப்பதற்கில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT