Published : 08 Mar 2020 04:56 PM
Last Updated : 08 Mar 2020 04:56 PM
மெல்போர்னில் நடந்த மகளிர் டி20 உலகக் கோப்பைப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் வென்று 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது.
மெல்போர்னில் இன்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை 85 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து ஆஸ்திரேலிய அணி கோப்பையை வென்றது.
முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் சேர்த்தது. 185 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் 19.1 ஓவர்களில் 99 ரன்களுக்கு ஆட்டமிழந்து 85 ரன்களில் தோல்வி அடைந்தது.
அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணி 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தைத் தட்டிச்சென்றது. இதற்கு முன் 2010, 2012, 2014, 2018 ஆகிய 4 முறை கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணி 5-வது முறையாக இப்போது வாகை சூடியுள்ளது.
ஆட்டநாயகியாக விக்கெட் கீப்பரும், ஆஸ்திரேலிய ஆடவர் அணியின் வேகப்பந்துவீச்சாளர் மிட்ஷெல் ஸ்டார்க்கின் மனைவியுமான அலிஸா ஹீலே(75ரன்கள்) தேர்வு செய்யப்பட்டார். பெத் மூனே தொடர் நாயகியாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த ஆட்டத்தைக் காண மிகப்பெரிய மெல்போர்ன் மைதானத்தில் 86,174 ரசிகர்கள் வந்திருந்து ரசித்தனர். மகளிர் கிரிக்கெட் போட்டிக்கு வந்திருந்த மிகப்பெரிய கூட்டமும், ஆஸ்திரேலியாவில் மகளிர் கிரிக்கெட்டுக்கு வந்திருந்த மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமும் இதுதான்.
தொடக்க ஆட்டக்கார்கள், ஹீலே, பெத் மூனே இருவரும்தான் ஆட்டத்தின் போக்கையை மாற்றிவிட்டனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு சேர்த்த ஸ்கோர்தான் ஆஸ்திரேலிய அணிக்கு வலுவான அடித்தளமாக அமைந்தது.
இந்திய மகளிர் அணியின் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. லீக் ஆட்டங்களில் சிறப்பாக ஆடிய அதிரடி வீராங்கனை ஷாபாலி வர்மா சொதப்பிவிட்டார். இந்த தொடர் முழுவதிலும் மோசமாக ஆடிய மந்தனா, இறுதிப்போட்டியிலாவது நிலைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த முறையும் ஏமாற்றம் அளித்தார். இருப்பினும் முதல் முறையாக இறுதிப்போட்டி வரை வந்தது ஆறுதலாக இருந்தலாக இருந்தாலும் கோப்பையைத் தவறவிட்டது வருத்தமளிக்கிறது.
அதேபோல ரோட்ரிக்ஸ், கேப்டன் கவுர் போன்ற முன்னணி வீராங்கனைகள் அனைவரும் இறுதிப்போட்டியில் ஜொலிக்கத் தவறிவிட்டனர். ஒரு கட்டத்தில் 88 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்த இந்திய அணி, அடுத்த 10 ரன்ளுக்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து தோல்வி அடைந்தது.
இந்திய அணித் தரப்பில் அதிகபட்சமாக ஷர்மா(33) ரன்கள் சேர்த்தார். அடுத்தபடியாக கிருஷ்ணமூர்த்தி(19), கோஷ்(18) ரன்கள் சேர்த்தனர். மற்ற வீராங்கனைகளான ஷாபாலி வர்மா(2), மந்தனா(11), ரோட்ரிக்ஸ்(0), கேப்டன் கவுர்(4) ஆகியோர் முதல் 6 ஓவர்களில் விக்கெட்டை இழந்து நடையைக் கட்டினர்.
கடைசி வரிசை வீராங்கனைகளான பாண்டே(2), யாதவ்(1), பூனம் யாதவ்(1), ஆகியோர் ஒற்றை இலக்க ரன்னில் பெவிலியன் திரும்பினர். இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தனியா பாட்டியாவின் ஹெல்மெட்டில் பந்துபட்டதையடுத்து, அவர் ரிட்டயர்ஹர்ட் முறையில் வெளியேறினார்.
ஆஸ்திரேலியத் தரப்பில், ஸ்கட் 4 விக்கெட்டுகளையும், ஜோனாஸன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் பெத் மூனே, அல்யஸா ஹீலே ஆகியோர் வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனல் முதல் விக்கெட்டுக்கு இருவரும் 11.5 ஓவர்களில் 115 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
ஆஸ்திரேலிய ஆடவர் அணியின் வேகப்பந்துவீ்ச்சாளர் மிட்ஷெல் ஸ்டார்க்கின் மனைவியும், விக்கெட் கீப்பருமான அல்யஸா ஹீலே அதிரடியாக ஆடி 39 பந்துகளில்75ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 5 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கும்.
4-வது ஓவரிலேயே ஹீலே, மூனே இருவரையும் ஆட்டமிழக்க வைக்கும் வாய்ப்பு கிடைத்தும் அதை இந்திய வீராங்கனைகள் கேட்சை நழுவவிட்டனர். மூனே 41 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
அடுத்து களமிறங்கிய கேப்டன் லானிங்(16) ரன்னில் ஷர்மா பந்துவீச்சில் வெளியேறினார். 3-வது விக்கெட்டுக்கு வந்த கார்டனர் 2, ஹெயின்ஸ் 4 ரன்னில் பெவிலியன் திரும்பினர்.
மூனே 54 பந்துகளில் 78 ரன்கள் சேர்த்து(10பவுண்டரி) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். காரே 5 ரன்களுடன் மூனேவுக்கு துணையாக இருந்தார்.
லீக் சுற்றில் இந்திய அணியிடம் தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி தோல்வி அடைந்தாலும், இந்த போட்டியில் அந்த தோல்விக்குப் பழிதீர்க்கும் வகையில் விளையாடி வருகிறது.
அதுமட்டுமல்லாமல் 4 முறை இறுதிப்போட்டியை எட்டி இருப்பதால், அந்த அனுபவம், கடைசிக்கட்ட நெருக்கடியை சமாளித்து ஆடுவது போன்றவற்றைக் கச்சிதமாகச் செய்தனர்.
இந்தியத் தரப்பில் தீப்தி ஷர்மா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT