Published : 05 Mar 2020 10:23 AM
Last Updated : 05 Mar 2020 10:23 AM
இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்தத் தேர்வுக்குழு தலைவராக சுனில் ஜோஷி பொறுப்பேற்கவுள்ளார். இவருடன் இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஹர்வீந்தர் சிங் இணைவார்.
புதிய தேர்வுக்குழுவின் பணி முதலில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா ஒருநாள் தொடருக்கான அணியைத் தேர்வு செய்வதே.
இந்நிலையில் மதன்லால் தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனைக் குழு அணியின் தேர்வுக்குழுவுக்கு விண்ணப்பித்திருந்த 5 முன்னாள் வீரர்களான எல்.சிவராம கிருஷ்ணன், வெங்கடேஷ் பிரசாத், ராஜேஷ் சவுகான், சுனில் ஜோஷி, ஹர்வீந்தர் சிங் ஆகியோரிடம் வைத்த கேள்விதான் ‘தோனியை என்ன செய்யப்போகிறீர்கள், கோலி என்ற ஆளுமையை எப்படிக் கையாளப்போகிறீர்கள்?’ ஆகியவையாகும்.
இங்கிலாந்தில் நடந்த உலகக்கோப்பைக்குப் பிறகு எந்த ஒரு கிரிக்கெட்டிலும் ஆடாமல் தற்போது பணமழை தனியார் ஐபிஎல் கிரிக்கெட்டுக்காகப் பயிற்சியைத் தொடங்கியுள்ளார் தோனி, இவரது இந்திய எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது, மேலும் 38 வயதாகி விட்டது, இனி இவரை இந்திய அணியில் தேர்வு செய்தால் அது பின்னோக்கிய சிந்தனையாகவே இருக்கும் என்று பலரும் கருத்துக் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் அணித்தேர்வுக்குழுத் தலைவர் பதவிக்கு விண்ணப்பித்திருந்த 5 முன்னாள் வீரர்களிடமும் “தோனியை உலகக்கோப்பை டி20 போட்டிக்கு தோனியைத் தேர்வு செய்வீர்களா?” என்று கேட்கப்பட்டதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதாவது தோனி விவகாரத்தில் ஏற்கெனவே இருந்த எம்.எஸ்.கே. பிரசாத் குழு சரிவர கையாளாமல் சொதப்பியது, இதனையடுத்து இந்தக் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
சிவராமகிருஷ்ணன் சேர்மனாக இல்லாமல் சேர்மன் கீழ் தேர்வாளராக இருக்கத் தயாராக இருக்க மாட்டார் என்று கருதப்படுகிறது, எனவேதான் சுனில் ஜோஷி, ஹர்விந்தர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதே போல் விராட் கோலி அவ்வளவு எளிதாக அணுக முடியாத நபர் என்று பெயர் எடுத்தவர், கும்ப்ளேயை வெளியேற்றுவதில் முனைப்புக் காட்டியதையடுத்து இவரைப்போன்ற ஆளுமையை எப்படி கையாள்வீர்கள் என்ற கேள்வியையும் தேர்வுக்கு வந்தவர்களிடம் மதன்லால் முன் வைத்ததாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கேப்டன் தான் அணியை களத்தில் வழிநடத்துபவர் எனவே அணி பற்றிய விவாதங்களில் அவரை எப்படி தொடர்பு கொள்ளப் போகிறார்கள் என்பது அவசியம் என்று உணர்ந்ததால் கோலியை அணுகும் முறை குறித்தும் இவர்களிடம் கேட்டறியப்பட்டதாகத் தெரிகிறது. இதில் சுனில் ஜோஷி நல்ல முறையில் பதிலளித்திருக்கலாம் அதனால் அவரை தேர்வுக்குழு தலைவராக தேர்வு செய்யலாம் என்ற முடிவு ஏற்பட்டதாகத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT