Last Updated : 03 Mar, 2020 04:34 PM

 

Published : 03 Mar 2020 04:34 PM
Last Updated : 03 Mar 2020 04:34 PM

‘நான் வந்துட்டேன்னு சொல்லு’ -ஹர்திக் பாண்டியா அறிவிப்பு : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் வாய்ப்பு?

5 மாதங்களுக்கு முன்பு காயமடைந்த இந்திய அணியின் வளரும் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அறுவை சிகிச்சை, அதன் பிறகான மீட்பு சிகிச்சை ஆகியவற்றை முடித்து மீண்டும் உடற்தகுதி பெற்று இந்திய அணியின் தேர்வுக்குத் தயாராகி யுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரும் ஐபிஎல் தொடரிலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஹர்திக் பாண்டியா ஆடுவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. 26 வயதான ஹர்திக் பாண்டியா டிஒய் பாட்டீல் டி20 கோப்பை கிரிக்கெட்டில் 25 பந்துகளில் 38 ரன்கள் விளாசியதன் மூலம் தன் உடற்தகுதியை நிரூபித்துள்ளார்.

களத்தில் தான் இருப்பதான புகைப்படத்தை தன் சமூகவலைத்தளப் பக்கத்தில் அவர் வெளியிட்டு, “களத்திற்கு மீண்டும் திரும்பியது மகிழ்சியளிக்கிறது, நான் இந்த இடத்தைச் சேர்ந்தவன் தான்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

மும்பை பேட்ஸ்மென்களான ஷ்ரேயஸ் அய்யர், சூரியகுமார் யாதவ் பாண்டியாவின் வரவை பாராட்டியுள்ளனர் , பாண்டியாவின் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் இவரது மீள் வருகைக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மார்ச் 29ம் தேதி ஐபிஎல் 2020-ன் கிராண்ட்கலா தொடக்க ஆட்டத்தில் வான்கெடேயில் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும் தோனியின் சிஎஸ்கேவும் மோதுகின்றன. இதில் பாண்டியாவின் ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் இப்போதே ஆர்வம் தெரிவித்து வருகின்றனர்.

பிரிட்டனில் மருத்துவ சோதனை முடிந்து பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடெமிக்கு வந்த பாண்டியா கடந்த மாதம் பவுலிங் பயிற்சியில் ஈடுபட்டார்.

இதனையடுத்து தேசிய கிரிக்கெட் அகாடமி வட்டாரம் கூறுகையில், விரைவில் பவுலிங்கிலும் அவர் தேர்ச்சி பெற்று தேர்வுக்குத் தயாராவார் என்று தெரிவித்துள்ளது.

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகிறது, இந்தத் தொடரில் இந்திய அணியில் பாண்டியா தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x