Published : 01 Mar 2020 12:57 PM
Last Updated : 01 Mar 2020 12:57 PM
பந்துவீச்சாளர்கள் பும்ரா, முகமது ஷமி ஆகியோர் வகுத்துக் கொடுத்த பொன்னாய வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள இந்திய பேட்ஸ்மேன்களுக்குத் தெரியவில்லை. 2வது இன்னிங்ஸில் 90 ரன்களுக்கு 6 விக்கெட்டை இழந்து இந்திய அணி தடுமாறி வருகிறது. இன்று ஒரேநாளில் மட்டும் 16 விக்கெட்டுகள் இரு அணிகளிலும் சேர்ந்து வீழ்த்தப்பட்டுள்ளன.
ஏறக்குறைய இந்திய அணி 2-வது டெஸ்ட் போட்டியிலும் தோல்வியை நோக்கிச் செல்கிறது. களத்தில் ஹனுமா விஹாரி 5 ரன்னிலும் ரிஷப் பந்த் ஒரு ரன்னும் உள்ளனர்.இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 97 ரன்கள் முன்னிலையுடன் உள்ளது.
இந்தியாவில் சொத்தையான, தட்டை ஆடுகளத்தில் பலவீனமான அணிகளை அழைத்துவந்து அடித்துத் துவைத்தார்கள் இந்திய அணியினர். ஆனால், க்ரீன்டாப் போடப்பட்ட நியூஸிலாந்து ஆடுகளத்தில் களத்தில் நிற்க முடியாமல் திணறுகிறார்கள். இதிலும் டிரன்ட் போல்ட் பவுன்ஸருக்கும், ஸ்விங்கிற்கும் களத்தில் நிற்க முடியாமல், பந்தை கணிக்க முடியாமல் நடுங்குகின்றனர் இந்திய பேட்ஸ்மேன்கள்.
உலகத் தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் எனச் சொல்லப்படும் கேப்டன் விராட் கோலி, ஸ்டெம்பை நோக்கி மெதுவாக வரும் பந்தை முன்னே காலைக் கொடுத்து ஆடி எல்பிடபிள்யு வாங்கியதை என்ன வென்றது சொல்வது. இதெல்லாம் அனுபவமான பேட்ஸ்மேன், தரமான பேட்ஸ்மேன் விளையாடும் முறையா என்று கேட்க வைக்கிறது.
நியூஸிலாந்து பந்துவீச்சாளர்கள் ஒவ்வொரு முறை விரிக்கும் வலையிலும் எந்த விதமான சிரமும், எதிர்ப்பும் காட்டாமல் விராட் கோலி விழுந்து விடுகிறார், இந்த முறையும் தப்பவில்லை.
இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 242 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முதல் நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில் நியூஸிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் சேர்த்திருந்தது. இன்று2-வது நாளில் பும்ரா, ஷமி ஆகியோரின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் 235 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது.
முதல் இன்னிஙஸில் அருமையாகப் பந்துவீசிய பும்ரா, முகமது ஷமி ஆகியோர் இந்திய அணிக்கு நல்ல வழியைக்காட்டிச் சென்றார்கள். ஷமி 4 விக்கெட்டுகளையும், பும்ரா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்திய அணிக்கு 7 ரன்கள் முன்னிலை பெற்றுக் கொடுத்தார்கள்
7 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடத் தொடங்கிய இந்திய அணி, டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற பேட்டிங்கால் மீண்டும் தோல்வியை நோக்கிச் செல்கிறது. 2-வது நாள் இறுதியில் இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 97 ரன்கள் முன்னிலை பெற்று விளையாடி வருகிறது.
இன்னும் 3 நாட்கள் முழுமையாக இருக்கிறது. இந்திய அணியின் கைவசம் 4 விக்கெட்டுகள் மட்டுமே இருக்கின்றன. இதில் ரிஷப்பந்த், விஹாரி இருவரில் ஒருவர் ஆட்டமிழந்தாலும் இந்திய அணியின் பேட்டிங் வரிசை குலைந்துவிடும். அடுத்து ஜடேஜா மட்டுமே இருக்கிறார்.
விக்கெட்டை இழக்காமல் ரிஷப் பந்த், விஹாரி நாளைய பொழுதை கடத்தி, நல்ல இலக்கை நிர்ணயித்துவிட்டால், தோல்வியிலிருந்து தப்பிக்கலாம். ஒருவேளை நாளை முதல் ஷெசனுக்குள் இந்திய அணி சுருண்டுவிட்டால், இந்திய அணியின் தோல்வி தவிர்க்க முடியாது.
இந்திய பந்துவீச்சாளர்களுக்குப் படம் காட்டிய டிரன்ட் போல்ட் 9 ஓவர்கள் வீசி 12 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குறிப்பாக மயங்க் அகர்வால்(3) எந்தவிதமான சிரமும் இல்லாமல் ஸ்டெம்புக்கு நேராக காலைத் தூக்கிவைத்து எல்பிடபிள்யு வாங்கி வெளியே சென்றார்.
அதேபோல புஜாவா(24) ரன்னில் டிரன்ட் போல்ட் பந்துவீச்சில் அருமையான இன்ஸ்விங் பந்துவீச்சில் வெளியேறினார். பிரித்வி ஷா 14 ரன்னில் சவுதி பந்துவீச்சை அடிக்கத் தெரியாமல் ஷாட் பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்
இதில் அனுபவ வீரர், உலகத்தர பேட்ஸ்மேன் கோலி, 14 ரன்களில் கிராண்ட்ஹோம் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி பெவிலியின் திரும்பினார். எந்த பந்தை காலில் வாங்குவது என உலகத் தரமான பேட்ஸ்மேனுக்கு தெரியவில்லையா.
கிராண்ட்ஹோம் ஸ்லோபாலை ஸ்டெம்புக்கு நேராக வீசும்போது, அந்த பந்தை காலில் தாங்கி கோலி விளையாடி ஆட்டமிழந்ததை எந்த ஒரு சிறந்த வீரரும் ஏற்கமாட்டார்கள். ஏற்கனவே 21 இன்னிங்ஸ்களாக எந்தவிதமான சதமும் இல்லாமல் இருக்கும் கோலியின் மோசமான இன்னிங்ஸ் இந்த ஆட்டத்திலும் தொடர்ந்தது. விராட் கோலி ஆட்டமிழந்திலேயே இது மோசமான எல்பிடபிள்யு ஆக இருக்கும், பேசப்படும்.
துணைக் கேப்டன் ரஹானே நிச்சயம் அடுத்த டெஸ்ட் தொடரில் பெஞ்சில் அமரவைத்துவிடுவார்கள் என்பது உறுதியாகிறது.கடந்த டெஸ்டிலும் விளையாடவில்லை, இந்த டெஸ்டில் மோசமான ஷாட்டை ஆடி விக்கெட்டை பறிகொடுத்தார். நைட்வாட்மேனாக உமேஷ் யாதவை இறக்கி அவரின் விக்கெட்டையும் தேவையில்லாமல் இந்திய அணி இழந்தது.
2-வது இன்னிங்ஸில் 250 ரன்களை நியூஸிலாந்துக்கு இலக்கு வைத்து இந்திய பந்துவீச்சாளர்கள் எதிர்கொண்டால் நிச்சயம் வெற்றிக்கு அதிகமான வாய்ப்பு இந்த ஆடுகளத்தில் உண்டு. ஆனால், இந்திய பேட்ஸ்மேன்கள் ஆடும் போக்கைப் பார்த்தால் 150 ரன்களை தாண்டுவதே கடினமாக இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT