Published : 29 Feb 2020 06:18 PM
Last Updated : 29 Feb 2020 06:18 PM

இப்படி ஆடினால் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்: முன்னாள் ஸ்பின் பவுலர் திலிப் தோஷி காரசாரம்

முன்னாள் ஸ்பின்னர் திலிப் தோஷி.

நியூஸிலாந்துக்கு எதிரான 2வது, இறுதி டெஸ்ட் போட்டியில் இன்று கிறைஸ்ட்சர்ச்சில் மீண்டும் ஒரு கிரீன் டாப் பிட்சில் இந்திய அணி ஷா, புஜாரா, விஹாரி அரைசதங்கள் எடுத்தும் 242 ரன்களுக்குச் சுருண்டது.

டி20, ஒருநாள் போட்டிகளில் நியூஸிலாந்தில் நன்றாக ஆடிய கே.எல்.ராகுலை டெஸ்ட் அணியில் சேர்க்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன, அந்தவகையில் முன்னாள் இந்திய இடது கை ஸ்பின் லெஜண்ட் திலிப் தோஷி இந்திய அணியின் ஆட்டத்தின் மீது கடும் விமர்சனங்களை முன் வைத்தார்.

தி இந்து ஸ்போர்ட்ஸ்டார் இதழுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

இந்திய அணித்தேர்வுக்குழுவும் இந்திய அணி திட்ட வகுப்புக் குழுவும் ஏதோ தவறு செய்கின்றனர். இருதரப்பினரும் இணைந்து சிந்திப்பதில்லை என்று நான் கருதுகிறேன். கே.எல்.ராகுல் இப்போது நன்றாக ஆடிவருகிறார், அவரை டெஸ்ட் அணியிலும் வைத்திருக்க வேண்டும்.

அதே போல் ஷிகர் தவண் உடல்தகுதி பெற்றால் அவரையும் அணியில் கொண்டு வரவேண்டும். நான் பிரித்வி ஷாவை அணியில் எடுத்திருக்க மாட்டேன், நிரூபித்த வீரர்களையே அணியில் சேர்ப்பேன். இவர், ஷ்ரேயஸ் அய்யர் போன்றோர் இன்னும் காத்திருக்கலாம், ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் உத்தி மிகவும் முக்கியமானது. ராகுலுக்கு இப்போது அனைத்தும் சரியாக வருகிறது.

அதே போல் இந்தியாவின் சிறந்த விக்கெட் கீப்பரையே நான் தேர்வு செய்வேன், அது சஹாதான். அவர் ஒன்றும் மோசமான பேட்ஸ்மெனும் அல்ல. விக்கெட் கீப்பிங் டெஸ்ட் கிரிக்கெட்டில் முக்கியமானது அதில் போய் இப்படியெல்லாம் குழப்படி செய்யக் கூடாது, தோனிக்குப் பிறகு சஹாதான் சிறந்த விக்கெட் கீப்பர். பந்த் பற்றி நிறைய விமர்சகர்கள் பேசி விட்டனர், அவருக்கு எதிர்காலம் இருக்கிறது. அவரிடத்தில் நான் இருந்தால் நிச்சயம் என் விக்கெட் கீப்பிங்கை மேம்படுத்திய பிறகே டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு வந்திருப்பேன்.

முதல் டெஸ்ட் தோல்வி குறித்து வெட்கப்பட வேண்டியதில்லை, ஏனெனில் நன்றாக ஆடிய அணி வெற்றி பெறுகிறது. கடந்த காலங்களிலும் நாங்கள் இப்படித் தோற்றிருக்கிறோம். ஆனால் அதிலிருந்து ஏதாவது கற்றுக் கொண்டிருக்கிறோமா?

இந்திய வீரர்களின் கால்நகர்த்தல்கள் நம்ப முடியாத அளவுக்கு மோசமாக உள்ளது, முன்னால் வந்தும் ஆடுவதில்லை, பின்னால் சென்றும் ஆடுவதில்லை. டி20 கிரிக்கெட்டில் ஆடுவது போல் பெரும்பாலான இந்திய பேட்ஸ்மென்களின் முன் கால் நேராக பவுலரை நோக்கிய திசையில் இருக்கிறது. டி20 கிரிக்கெட்டில் பந்தை அடிக்க கூடுதல் இடம் செய்து கொள்ளும் வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடினால் என்ன ஆகும்?

இவர்கள் கரியரில் அந்த டி20 நினைவுகள் தொடருமாயின் இந்தியாவின் டெஸ்ட் கிரிக்கெட்டை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். அயல்நாடுகளில் வெல்லவே முடியாது. எனவே மன ரீதியாக அணுகுமுறையை மாற்ற வேண்டும். என்றார் திலிப் தோஷி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x