Published : 28 Feb 2020 11:31 AM
Last Updated : 28 Feb 2020 11:31 AM
இந்திய அணியினரின் மனநிலை தொடர் வெற்றிகளால் இறுக்கமடைந்துள்ளதாகவும் அந்த இறுக்கத்தை தளர்த்த இந்தத் தோல்வி அவசியம் என்றும் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விநோத விளக்கம் கொடுத்துள்ளார்.
தோல்வியின் தாக்கம், அதன் தேவை பற்றிய உளவியல் கோட்பாட்டை யாரும் கேட்கவில்லையே? தோல்வி ஏன், எப்படி ஏற்பட்டது என்றுதானே ரசிகர்கள் கேட்கிறார்கள். இதற்கு தோல்வி ஏன் அவசியம் என்ற பதில் சரியாகுமா என்பதை ரசிகர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
முதல் டெஸ்ட் கிட்டத்தட்ட 3 நாட்களில் முடிந்தது, 10 விக்கெட்டுகளில் இரு இன்னிங்ஸ்களிலும் 200 ரன்களை எட்டாத ‘பெரிய பெயர்’களைக் கொண்ட நம்பர் 1 அணி ஏன் தோல்வி கண்டது என்பதல்லவா முக்கியம், ஆனால் ரவிசாஸ்திரி ஒரு சுயமுன்னேற்றவாத மனோவியல் கவுன்சிலர் போல் பதிலளிக்கையில், “எப்போதும் வெற்றி பெற்றுக் கொண்டேயிருக்கும் போது முதல் டெஸ்ட் தோல்வி போன்று நம்மை அசைத்துப் பார்க்கும் தோல்வி தேவை. இது நல்லது ஏனெனில் அது மனநிலையை கொஞ்சம் விசாலப்படுத்தும். எப்போதும் வெற்றி பெற்றுக்கொண்டேயிருக்கிறோமா, தோல்வியை ருசிக்கவில்லையா அதனால் மனம் இறுக்கமடைந்துள்ளது.
கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் எப்போதும் உண்டு. நியூசிலாந்து என்ன மாதிரியான உத்திகளை கையாண்டார்கள் என்பது புரிந்துள்ளது, இப்போது தயாராக இருக்கிறோம். அவர்கள் உத்தியை எதிர்கொள்வது எப்படி என்பதை புரிந்து கொண்டு ஆடுவோம். இது நல்ல பாடம், வீரர்கள் சவாலுக்குத் தயாராகவே இருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன்.
ஒருநாள், டெஸ்ட் போட்டிகளை நான் குழப்பிக் கொள்ள மாட்டேன். எங்களைப் பொறுத்தவரை டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் டி20 கிரிக்கெட்தான், ஏனெனில் இந்த ஆண்டு இதுதான் நிறைய உள்ளது.
8 டெஸ்ட் போட்டிகளில் 7-ல் வென்றோம். ஒரேயொரு தோல்விதான், இதனால் பதற்றமடையத் தேவையில்லை.
பிரச்சினைக்குக் காரணம் சிகப்புப் பந்து, சிகப்புப் பந்துக்கும் வெள்ளைப்பந்துக்கும் விளையாடுவதில் நிறைய வித்தியாசம் உள்ளது. இங்கிலாந்து, நியூஸிலாந்தில் சிகப்புப் பந்து கிரிக்கெட் கடினமானது.
சூழ்நிலைக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்வது கடினம், நான் சாக்குப் போக்கு கூறவில்லை, முதல் டெஸ்ட் போட்டியில் அவர்கள் நம்மை காலி செய்தனர் என்பதை மறுப்பதற்கில்லை.
ஜடேஜாவா, அஸ்வினா என்றால் ஸ்பின்னருக்கு ரோல் என்னவென்பதைப் பார்க்க வேண்டும். எத்தனை ஓவர்கள் ஸ்பின்னர் வீசப்போகிறார் என்பதை அறுதியிட வேண்டும். 2வது இன்னிங்சில் ஸ்பின் எடுக்குமா போன்றவற்றைப் பார்த்துத்தான் தேர்வு செய்ய முடியும்.
முதல் இன்னிங்சில் அவர் தேவை அதிகமாக உள்ளதா, அவரது பேட்டிங் முக்கியமானதா, பீல்டிங் முக்கியமானதா அல்லது அவரது ஒட்டுமொத்த உடற்தகுதியையும் பரிசீலிக்க வேண்டுமா போன்றவற்றைப் பொறுத்தே அஸ்வினா, ஜடேஜாவா என்பதை முடிவு செய்ய முடியும்.
நியூஸிலாந்து பிட்சில் ஏன் சஹாவுக்கு பதிலாக ரிஷப் பந்த் என்றால் இந்திய ஸ்பின் பிட்ச்களில், பவுன்ஸ் சமமற்ற நிலையில் இருக்கும் போது சஹா போன்ற அனுபவ விக்கெட் கீப்பர் தேவை.
ஆனால் இங்கு ஸ்பின்னுக்கு பெரிய வேலையில்லை, இங்கு வேகப்பந்து வீச்சு மற்றும் பேட்டிங் முக்கியம். மேலும் பந்த் ஒரு இடது கை வீரர். ஆக்ரோஷமாக ஆடக்கூடியவர், இவைதான் பந்த் பக்கம் எங்களைச் சாய வைத்துள்ளது” என்றார் ரவி சாஸ்திரி.
-பிடிஐ தகவல்களுடன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT