Last Updated : 27 Feb, 2020 07:28 PM

 

Published : 27 Feb 2020 07:28 PM
Last Updated : 27 Feb 2020 07:28 PM

மறக்கமுடியுமா இந்த நாளை: சச்சினுக்கு போட்டியான ஸ்ட்ராஸ்: திருப்புமுனை ஜாகீர்கான் பந்துவீச்சு, சமனில் முடிந்த உலகக்கோப்பை ஆட்டம்

சதம் அடித்த சச்சின் : கோப்புப்படம்

பெங்களூரு,

" நான் விளையாடியதிலேயே மிகச்சிறந்த இன்னிங்ஸ் இதுதான். வெற்றி, தோல்வி என்பது விஷயமல்ல, இதுபோன்று விளையாட வேண்டும்"

உற்சாகமான இந்த வார்த்தையை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஆன்ட்ரூ ஸ்ட்ராஸ், 2011-ம் ஆண்டு உலகக்கோப்பையில் இந்தியா, இங்கிலாந்து ஆட்டம் சமனில் முடிந்தபின் கூறியது. ஏனென்றால், எத்தகைய பரபரப்பும், இருக்கையின் நுனியில் அமரவைக்கும் விதத்தில் ஆட்டம் இருந்தது என அன்று நடந்த இந்த ஆட்டத்தைப் பார்த்த ரசிகர்களுக்கு புரிந்திருக்கும் 2011-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதிதான் இந்த ஆட்டம் நடந்தது.

ஆட்டத்தின் கடைசியில் ஒவ்வொரு பந்தும் ரசிகர்களை இருக்கை நுனியில் அமரவைத்தது. பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளம், இந்திய வீரர்களுக்குச் சவால் விடுக்கும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் ஆட்டம், ஜாகீர்கான், முனாப் படேல் ஆகியோரின் பந்துவீச்சு என வல்லவனுககு வல்லவன் என்ற வகையில்தான் இருந்தது.

2011-ம் ஆண்டில் நடந்த உலகக்கோப்பைப் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து இடையே சமனில் முடிந்த லீக் ஆட்டத்தைப் பற்றித்தான் சிலாகித்து சொல்லப் போகிறோம்..

இந்த ஆட்டம் முதலில் கொல்கத்தா ஈடன் கார்டனில் நடத்தப்படுவதாக இருந்தது, ஆனால், சில காரணங்களால் திடீரென பெங்களூரு சின்னசாமி மைதானத்துக்கு மாற்றப்பட்டது.

பேட்ஸ்மேன்களுக்கு சொர்க்கபுரியாகத் திகழும் சின்னசாமி அரங்கில் சச்சின், சேவாக்கின் ஆட்டத்தைப் பார்க்க ரசிகர்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அதுபோலத்தான் ஆட்டமும் ரசிகர்களின் கண்களுக்கும், மனதுக்கும் விருந்தாக அமைந்தது

சச்சினின் 47-வது சதம் இங்குதான் அடிக்கப்பட்டது. சேவாக் விரைவாக ஆட்டமிழந்தாலும், சச்சின் நிதானமாக ஆடி தனக்கே உரிய ஸ்டைலில் சதம் அடித்தார். சச்சினுக்கு துணையாக ஆடிய யுவராஜ் சிங், கம்பீர், தோனி ஆகியோரின் ஆட்டம் மிகப்பெரிய ரன் குவிப்புக்கு காரணமாக இருந்தது.

இந்திய அணி 338 ரன்கள் எனும் மிகப்பெரிய இலக்காக நிர்ணயித்தது. ஆனால் அதையும் அடையும் நோக்கில் இங்கிலாந்து அணியும் விடாமல் துரத்தியது. ஒருகட்டத்தில் ஆட்டம் இங்கிலாந்து அணியின் பக்கம் திரும்பியது. கேப்டன் ஸ்ட்ராஸ், இயான் பெல் இருவரும் வெற்றியை ஏறக்குறைய இந்தியாவிடம் இருந்து பறித்துவிட்டனர் என்ற அப்போது போட்டியைப் பார்த்தவர்கள் நினைத்தார்கள்.

ஆனால், ஜாகீர்கான் வீசிய 43-வது ஓவரில் அடுத்தடுத்து, ஸ்ட்ராஸ், இயான் பெல் விக்கெட் வீழ்ந்தபின் ரசிகர்கள் மனதிலும் இந்திய அணி வீரர்கள் மனதிலும் புதிய தெம்பும், உற்சாகமும் வந்தது. ஆட்டத்தை இந்தியாவின் பக்கம் மாற்றியதே ஜாகீர்கானின் இந்த இரு விக்கெட்தான் என்றால் மிகையாது. இந்த ஆட்டத்தைப் பார்த்த ரசிர்களுக்கு நிச்சயம் இது புரியும்.

இப்போடி ஒவ்வொரு வீரர்களின் பங்களிப்பு பற்றி இந்த ஆட்டத்தில் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு முத்தாய்ப்பாக இருந்தது.

டாஸ் வென்ற தோனி தலைமையிலான இந்திய அணி பேட்டிங் செய்தது. எத்திரணிகளுக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும், பந்துவீச்சாளர்களுக்குக் கிலி ஏற்படுத்தும் சச்சின், சேவாக் கூட்டணி ஆட்டத்தைத் தொடங்கியது.

சேவாக் இந்தப் போட்டியில் 35 ரன்கள்தான் எடுத்தார் என்றபோதிலும் அதில் அற்புதமான 6 பவுண்டரிகள் விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். சச்சினைப் பொறுத்தவரை 6 ஓவர்கள் வரை அவர் பவுண்டரி அடிக்கவே இல்லை. பிரஸ்னன் பந்துவீச்சில் முதல் பவுண்டரியை சச்சின் அடித்தவுடன் ரசிகர்கள் கரகோஷம் காதைக் கிழித்தது.

சேவாக் 35 ரன்னில் பிர்ஸ்னன் பந்துவீச்சில் வெளியேறினார். 2-வது விக்கெட்டுக்குவந்த கம்பீர், சச்சினுடன் சேர்ந்தார். மிகவும் ஸ்டைலிஷ் ப்ளேயரான கம்பீர், சச்சினும் சேர்ந்தபின் ஆட்டம் இன்னும் அனல் பறக்கத் தொடங்கியது. சச்சின் நிதானமாக ஆட கம்பீர் அவ்வப்போது பவுண்டரிகளை விளாசினார்.

சுழற்பந்துவீச்சாளர் ஸ்வான் பந்துவீச்சில் சச்சின் சிக்ஸர் அடித்து ரசிர்களை உற்சாகப்படுத்தினார். அதன்பின் ஸ்கோர் வேகமெடுத்தது. சச்சின் 66 பந்துகளிலும், கம்பிர் 59 பந்துகளிலும் அரைசதம் அடித்தனர். கம்பீர் 51 ரன்னில் ஸ்வான் பந்துவீச்சில் போல்டானார். இருவரும் 2-வது விக்கெட்டுக்கு 146 ரன்கள் சேர்த்தனர்.

அடுத்து வந்த யுவராஜ்சிங், சச்சினுடன் இணைந்தார். இருவரும் சேர்ந்து இங்கிலாந்து பந்துவீச்சை நொறுக்கித் தள்ளினர். சச்சின் சிக்ஸர்களாக விளாசி ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்தார். யுவராஜ் சிங்கும் தனது பங்கிற்கு பவுண்டரிகளை விளாசினார். அதிரடியாக விளையாடிய சச்சின் 103 பந்துகளில் தனது 47-வது சதத்தை நிறைவு செய்தார்

ஆன்டர்ஸன் பந்துவீச்சில் 120 ரன்களில்(5 சிக்ஸர், 10 பவுண்டரி) சச்சின் ஆட்டமிழந்தார். யுவராஜ் சிங் 46 பந்துகளி்ல் அரைசதம் அடித்து 58 ரன்னில் வெளியேறினார். யுவராஜ் சிங் ஆட்டமிழந்தபோது, இந்திய அணி 4விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் சேர்த்திருந்தது. ஆனால் அடுத்த 33 ரன்கள் சேர்ப்பதற்கு 6 விக்கெட்டுகளை மளமளவென இழந்தது. கடைசி வரிசை வீரர்கள் யாரும் நிலைக்கவில்லை.

அதன்பின் வந்த தோனி அதிரடியாக சிக்ஸர், பவுண்டரி அடித்து 31 ரன்களில் ஆட்டமிழந்தார். யூசுப் பதான்(14), கோலி(8), ஹர்பஜன் (0),ஜாகீர்கான்(4), பியூஷ் சாவ்லா(2) என வெளியேறினார்கள்.

இதில் முக்கியமான விஷயம் தற்போதைய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இந்த ஆட்டத்தில் 7-வது வீரராக களமிறங்கி 8 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 49.5 ஓவர்களில் 338 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இங்கிலாந்து தரப்பில் டிம் பிரஸ்னன் 5விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

339 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. பீட்டர்ஸனும், ஸ்ட்ராஸும் அருமையான தொடக்கத்தை அளித்தனர். முதல்விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்து முனாப் படேல் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து 31 ரன்னில் வெளியேறினார். அடுத்துவந்த டிராட் 11 ரன்னில் சாவ்லா பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார்.

3-வது விக்கெட்டுக்கு ஸ்ட்ராஸ், இயான் பெல் கூட்டணி ஆட்டத்தை வெற்றியை நோக்கி நகர்த்தினர். இருவரும் 170 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். இருவரையும் பிரிக்க தோனி பலபந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும் முடியவில்லை.

ஆன்ட்ரூ ஸ்ட்ராஸ் 99 பந்துகளில் சதத்தையும், 135 பந்துகளில் 150 ரன்களையும் எட்டினார். துணையாக ஆடிய இயான் பெல் 45 பந்துகளில் அரைசதம் அடித்தார். 42 ஓவர்கள்வரை இருவரின் ஆட்டத்தால் வெற்றி இந்திய அணியைவிட்டு சென்றுவிட்டது என்றே ரசிகர்கள் நம்பினர்.

ஜாகீர்கான் வீசிய 43-வது ஓவரில்தான் அந்த திருப்புமுனை நிகழ்ந்தது. அந்த ஓவரில் அடுத்தடுத்து, ஸ்ட்ராஸ் 158 ரன்னிலும், இயால் பெல் 69 ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர். இருவரும் வெளியேறிபி்ன்புதான் இந்திய அணிக்கு நம்பி்க்கை பிறந்தது.

அடுத்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காலிங்வுட்(1), மாட் பிரியர்(4) ரன்னில் ஜாகீர்கான், படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். யார்டி 13 ரன்னிலும், பிரஸ்னன் 14 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர்.கடைசி ஓவர்களில் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது.

களத்தில் ஸ்வான், ஷேசாத் இருந்தார்கள். முனாப் படேல் கடைசி ஓவரை வீசினார். முதல் பந்தில் ஸ்வான் 2 ரன்னும், அடுத்த பந்தில்ஒருரன்னும் எடுத்தார், 3-வது பந்தை சந்தித்த ஷேசாத் சி்க்ஸர் விளாச ஆட்டம் இங்கிலாந்து பக்கம் சென்றது. ரசிகர்கள் தலையிலும், வாயிலும் கை வைத்து அமர்ந்தனர்.

4-வதுபந்தில் ஷேசாத் ஒரு ரன்னும், 5-வது பந்தில் ஸ்வான் 2 ரன்னும் எடுத்தனர். கடைசி பந்தில் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்டது. முனாப் படேல் சரியாக லென்தில் வீச ஸ்வான் ஒரு ரன் மட்டுமே எடுத்தார். ஆட்டம் சமனில் முடிந்தது. இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புககு 338 ரன்கள் சேர்த்தது.

இந்திய வீரர்கள் தோல்வியிலிருந்து தப்பிவிட்ட மகிழ்ச்சியில் குதிக்க, வெற்றியை விட்டுவிட்டோமே என இங்கிலாந்து வீரர்கள் மவுனமாகினர். இந்திய அணி தரப்பில் ஜாகீர்கான் 3 விக்கெட்டுகளும், பியூஷ் சாவ்லா, முனாப் படேல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆட்டநாயகனாக ஸ்ட்ராஸ் தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x