Published : 27 Feb 2020 01:52 PM
Last Updated : 27 Feb 2020 01:52 PM
2020-ம் ஆண்டு 13-வது ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் அணிக்கு கேப்டனாக ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை சன் ரைசர்ஸ் அணி அறிவித்துள்ளது.
2018-ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் கேப்டனாக இருந்த டேவிட் வார்னர், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கி ஓராண்டு தடை பெற்றார். இதனால், சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டு, நியூஸிலாந்து வீரர் கானே வில்லியம்ஸனிடம் ஒப்படைக்கப்பட்டது. தடைக்காலம் முடிந்து கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடிய வார்னர், வில்லியம்ஸன் தலைமையின் கீழ் விளையாடினார்.
இந்நிலையில் வார்னரின் திறமையைப் பாராட்டிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும், எதிர்காலத்தில் வார்னரை அணியின் கேப்டனாக நியமிக்க பரிசீலிப்போம் என அறிவித்தது.
இந்த சூழலில் 2020-ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியில் சன் ரைசர்ஸ் அணிக்கு மீண்டும் கேப்டனாக டேவிட் வார்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து வார்னர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் " ஐபிஎல் 2020-ல் எனக்கு சன் ரைசர்ஸ் அணி மீண்டும் கேப்டன் பதவி வழங்கியது வியப்பாக இருக்கிறது. மீண்டும் அணியை வழிநடத்த எனக்குக் கிடைத்த வாய்ப்புக்கு நன்றி தெரிவிக்கிறேன். வில்லியம்ஸன், புவனேஷ்வர் குமார் ஆகியோர் கடந்த 2 ஆண்டுகளாக அணியை வழிநடத்தியவிதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர்கள் மிகவும் சிறப்பான பணியைச் செய்தார்கள். உங்களின் ஆதரவும், போட்டியில் ஆர்வமும் எனக்கு அவசியம் தேவை. எனக்கு மீண்டும் வாய்ப்பளித்த அணி நிர்வாகத்துக்கு மீண்டும் நன்றி தெரிவிக்கிறேன். ஐபிஎல் போட்டியில் இந்த ஆண்டு கோப்பையை வெல்ல என்னால் முடிந்தவரை உழைப்பேன்" எனத் தெரிவித்துள்ளார்.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக இதுவரை 4 சீசன்களில் விளையாடியுள்ள வார்னர், 562, 848, 642, 692 என 4 சீசன்களிலும் ரன்கள் குவித்துள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு ஆரஞ்சு தொப்பியையும், 2017, 2019, 2017ம் ஆண்டுகளில் வார்னர் வென்றுள்ளார். இதுவரை 126 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள வார்னர் 4,706 ரன்கள் குவித்துள்ளார்.
இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் வரும் ஏப்ரல் 1-ம் தேதி ராஜீவ் காந்தி மைதானத்ததில் நடக்கும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது சன் ரைசர்ஸ் அணி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT