Published : 26 Feb 2020 12:37 PM
Last Updated : 26 Feb 2020 12:37 PM
பந்துகள் ஸ்விங் ஆகும் போது நியூஸிலாந்தின் ஸ்விங் பவுலர்களான சவுத்தி, போல்ட் இருவரையும் ஆடுவது மிக மிகக் கடினம் என்று கூறும் இந்தியாவின் முன்னாள் பயிற்சியாளரும் முன்னாள் நியூஸி. கேப்டனுமான ஜான் ரைட் பும்ராவை ஒர்க் அவுட் செய்கின்றனர் என்று கூறியுள்ளார்.
பும்ரா சமீபமாக ஒருநாள் போட்டிகளில் நியூசிலாந்துக்கு எதிராக ஒரு விக்கெட்டைக் கூட வீழ்த்த முடியவில்லை, டெஸ்ட் போட்டிகளிலும் காயத்துக்கு அஞ்சி வேகத்தைக் குறைத்துள்ளார், ஓடி வரும் தூரமும் குறைந்துள்ளது, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்காவில் அவர் வீசியது போல் இங்கு வீசவில்லை என்பதன் காரணம் காயத்திலிருந்து மீண்டு வந்துள்ளார், மேலும் ஐபிஎல் வேறு இருக்கிறது. சீசன் பாழானால் வருமானம் பாதிக்கும். இத்தனை பிரச்சினைகள் இருக்கின்றன.
இந்நிலையில் பும்ராவின் பிரச்சினை குறித்து ஜான் ரைட் கூறும்போது, “பும்ரா காயத்திலிருந்து மீண்டு வந்துள்ளார், அவர் தன் ரிதத்தை மீண்டும் கண்டுபிடிக்கும் முயற்சியில் இருந்து வருகிறார். அனைவருக்கும் இது ஏற்படுவதுதான். உச்சமும் தாழ்வும் இயல்பே.
மேலும் பிரச்சினைகள் என்னவெனில் அவரது பந்து வீச்சு வீடியோக்களை நிறைய எதிரணிகள் பார்த்திருப்பார்கள். ஒரு பந்து வீச்சு வரிசையின் முக்கிய வீரராகும் போது எதிரணியினர் அவரைப் படம் பிடித்து முழுதும் படித்து விடுவார்கள், இது இயல்பானதே. வீடியோக்களைப் பார்த்து அவரை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டு விடுவார்கள்.
சில வேளைகளில் பும்ராவை எச்சரிக்கையாக ஆடி விக்கெட்டுகளைக் கொடுக்க மாட்டார்கள். பும்ரா புத்திசாலியானவர், விரைவில் இதற்கு அவர் வழி கண்டுபிடிப்பார். இத்தகையக் கடின காலக்கட்டங்களைக் கடந்து செல்ல வழிமுறைகளைக் கண்டுபிடிக்க வேண்டும்” என்றார் ஜான் ரைட்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT