Published : 25 Feb 2020 12:38 PM
Last Updated : 25 Feb 2020 12:38 PM
2வது டெஸ்ட் போட்டியில் வென்று தொடரை சமன் செய்ய வேண்டுமெனில் ஓவர் எச்சரிக்கையுடன் தடுப்பாட்டம் ஆடுவது அயல்நாடுகலில் நிச்சயம் பயன் தராது, எனவே ஸ்கோரிங் வாய்ப்புகள் வரும் போது பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என்று புஜாரா பெயரைக் குறிப்பிடாமல் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
புஜாரா வெலிங்டன் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 43 பந்துகளில் 11 ரன்களையும் 2வது இன்னிங்சில் 81 பந்துகளில் 11 ரன்களையும் எடுத்து சொதப்பி கடைசியில் ஆட்டமிழந்ததோடு எதிர்முனை பேட்ஸ்மென் மீது சுமையை ஏற்றினார்.
இந்நிலையில் விராட் கோலி கூறியதாவது:
“ஒரு பேட்டிங் யூனிட்டாக நாம் என்ன யோசிக்கிறோம் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். எச்சரிக்கையாக ஆடுவதோ, அச்சத்துடன் ஆடுவதோ நிச்சயம் நமக்கு ஒரு போதும் பயனளித்ததில்லை, பயனளிக்கவும் செய்யாது. ஏனெனில் இந்த மனநிலையில் ஷாட்களை ஆடுவதை நிறுத்தி விடுவோம்.
சிங்கிள்கள் கூட எடுக்காமல் ஆடினால் என்ன செய்ய வேண்டும் என்ற சந்தேகமே உங்களுக்கு ஏற்படும். இப்படி ஆடினால் என்ன ஆகும் நிச்சயம் ஒரு நல்ல பந்து உங்களை கபளீகரம் செய்து விடும். ஆட்டமிழந்து வெளியேற வேண்டியதுதான்.
நல்ல பந்தில் ஆட்டமிழந்தோம் என்பதை ஏற்கலம். ஆனால் நான் அந்தமாதிரி யோசிப்பவன் அல்ல.
நான் ஒரு சூழ்நிலையில் இறங்குகிறேன் மேலும் பசுந்தரை பிட்ச் என்றால் நான் எதிர்த்தாக்குதல் இன்னிங்ஸைத்தான் ஆடுவேன். அப்போதுதான் அணியை முன்னோக்கி இட்டுச் செல்ல முடியும்.
இதில் வெற்றி பெறவில்லையென்றாலும் உங்கள் யோசனை சரிதான் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் அடித்து ஆட முயன்றேன் ஆனால் அது பலனளிக்கவில்லை என்றால் பரவாயில்லை நியாயமானதுதான், இதை ஏற்றுக் கொள்வதில் எந்த பிரச்சினையும் இல்லை.
ஆனால் ஓவர் எச்சரிக்கையுடன் ஆடுவது ஒரு போதும் பயனளிக்காது என்றே நான் நம்புகிறேன். குறிப்பாக வெளிநாடுகளில்.
பிட்ச், காற்று, ஸ்விங் என்று சூழ்நிலை குறித்தே நாம் அதிகம் சிந்தித்து சுமையை ஏற்றிக் கொண்டால், நிச்சயம் பேட்டிங்கில் கவனம் செலுத்துவது கடினம். உள்நாட்டில் ஆடாத போது ஆட்டம் மனநிலை பற்றியதாகிறது.
சில வேளைகளில் நாம் உத்தி ரீதியான விஷயங்களை அதிகம் பேசுகிறோம், விவாதிக்கிறோம், ஆனால் மனம் தெளிவாக இருந்தால், எந்த நிலைமையிலும் பேட்டிங் எளிதாக அமையும்.
மனநிலை பாசிட்டிவாக இருந்தால் பந்து அதிகம் ஏதோ செய்கிறது, பவுலிங் கடினமாக இருக்கிறது என்ற சிந்தனை எழாது. நாம் எப்போதும் களத்தில் பாசிட்டிவ் மனநிலையில் இறங்குவோம்.
இந்தப் போட்டியில் இதனைச் சரியாகச் செய்ய முடியவில்லை, ஆனால் அப்படிச் செய்தால் நாம் சாதிக்க முடியும்” என்று புஜாரா பெயரைக் குறிப்பிடாமல் அவருக்கான மெசேஜாக இதனை தெரிவித்தார் விராட் கோலி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT