Published : 25 Feb 2020 12:05 PM
Last Updated : 25 Feb 2020 12:05 PM
டாக்காவில் நடைபெற்று வரும் வங்கதேச-ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணி இன்னிங்ஸ் தோல்வியை எதிர்கொள்ளக் காரணமாக அமைந்தது வங்கதேச வீரர்கள் மொமினுல் ஹக் எடுத்த 132 ரன்களும் முஷ்பிகுர் ரஹிம் எடுத்த 203 நாட் அவுட் இன்னிங்ஸ்களுமாகும்.
இதில் வங்கதேசம் 560/6 என்று இருந்த நிலையில் கேப்டன் மொமினுல் ஹக் டிக்ளேர் செய்தார். காரணம் இன்றும், நாளையும் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டதே. ஆனால் முஷ்பிகுர் ரஹிம் கூறுகிறார் தொடர்ந்து ஆடியிருந்தால் தான் முச்சதம் எடுத்திருப்பேன் என்று. இது முஷ்பிகுர் ரஹீமின் 3வது டெஸ்ட் இரட்டைச் சதமாகும், இதில் 2 ஜிம்பாப்வேவுக்கு எதிராக எடுக்கப்பட்டதே.
318 பந்துகள் ஆடிய முஷ்பிகுர் ரஹிம் 28 பவுண்டரிகளுடன் 203 நாட் அவுட் என்று இருந்த போது 560/6 என்று டிக்ளேர் செய்யப்பட்டது.
இது குறித்து முஷ்பிகுர் ரஹிம் கூறும்போது, “டிக்ளேர் செய்வார்கள் என்று என்னிடம் தெரிவிக்கவில்லை. இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில் இன்னும் கொஞ்சம் பேட்டிங் செய்தால் பிட்ச் மேலும் உடைந்திருக்கும். தேநீர் இடைவேளையின் போது கூட டிக்ளேர் பற்றி எதுவும் விவாதிக்கவில்லை.
பேட்டிங்கைத் தொடர்ந்திருந்தால் எனக்கு முச்சதம் (300) அடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கும். லிட்டன் தாஸும் சதம் எடுத்திருப்பார். நான் முச்சதம் எட்டியிருப்பேன்.
இந்த இரட்டைச் சதம் என் மற்ற இரட்டைச் சதங்களை விட எளிதாக அமைந்தது, பிட்சில் ஒன்றுமில்லை. பந்துகள் கண்டபடி திரும்பும் பிட்ச்களில் ஆடுவது கடினம், நான் நினைக்கிறேன் வங்கதேச அணிக்கு எதிராகத்தான் வெளிநாடுகளில் கடினமான பிட்ச்களை அமைக்கிறார்கள். உள்நாட்டில் ஆடினாலும் பந்துகள் கண்டபடி திரும்பும் பிட்ச்களை அமைக்கிறார்கள், இதனால் பெரிய ஸ்கோர்களை எடுக்க முடிவதில்லை.
இந்த முறைதான் அமைந்தது, அதையும் டிக்ளேர் செய்து கெடுத்து விட்டார்கள். ஒரு பேட்ஸ்மெனாக எனக்கு இத்தகைய பிட்ச்கள்தான் பிடித்திருக்கிறது” என்று வேதனை தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT