Published : 25 Feb 2020 11:37 AM
Last Updated : 25 Feb 2020 11:37 AM
வெலிங்டன் டெஸ்ட் போட்டியில் இந்தியப் பந்து வீச்சின் பலவீனங்களை அம்பலப்படுத்திய நியூஸிலாந்து அணியின நம்பர் 1 அணியின் பேட்டிங்கின் காலங்காலமான போதாமைகளையும் வெளிக்கொணர்ந்தனர்.
சவுத்தி, போல்ட், புதுமுக உயர மனிதர் கைல் ஜேமிசன் இவர்கள் போதாதென்று ‘டைட்’ ஆக நீண்ட ஸ்பெல்களை வீசும் கொலின் டி கிராண்ட் ஹோம் ஆகியோருடன் தற்போது இடது கை வேகப்பந்து வீச்சாளரும் பவுன்சர் ஸ்பெஷலிஸ்டுமான நீல் வாக்னர் 2வது டெஸ்ட் போட்டியில் ஆடுகிறார்.
நியூஸிலாந்து பிட்ச்களில் ஒரு பெரிய ஆயுதமாக திகழ்பவர் நீல் வாக்னர். வெலிங்டன் டெஸ்ட்டில் இடது கை ஸ்பின்னர் அஜாஜ் படேல் 6 ஓவர்களை மட்டுமே வீசினார், ஆகவே அவரது இடத்துக்கு நீல் வாக்னர் வருகிறார் என்றால் கிறைஸ்ட் சர்ச் பிட்சும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நியூஸிலாந்தில் இந்திய பேட்ஸ்மென்களின் பெரிய பிரச்சினை ‘பேக் லிப்ட்’தான். இந்திய பிட்ச்களில் மட்டையை ஸ்டம்ப் உயரத்துக்குத் தூக்கி ஆடினாலே போதும் ஆனால் நியூஸிலாந்து பிட்ச்களில் மட்டையை இன்னும் கொஞ்சம் உயரத்திலிருந்து இறக்க வேண்டும், நியூசிலாந்தில் பிட்ச்களில் வேகம் இருப்பதால் உயரமாக மட்டையை வைத்துக் கொண்டு ஆடும்போது ஃபுல் லெந்த் ஸ்விங் பந்துகளுக்கு ஏற்ப மட்டையை வேகமாக இறக்குவதில் இந்திய பேட்ஸ்மென்களுக்குச் சிக்கல் இருந்து வருகிறது. சரி மட்டையை ஸ்டம்ப் உயரத்திற்கு வைத்துக் கொண்டு ஆடும்போது ஷார்ட் பிட்ச் பந்துகளை எதிர்கொள்வதில் சிக்கல் ஏற்படுகிறது. இதற்குரிய தீர்வை இந்திய அணியினர் விரைவில் கண்டுபிடித்துக் கொள்வது அவசியமாகும்.
முன் காலை நீட்டி ஆடுவது, அதுவும் உடலுக்குத் தள்ளி மட்டையைக் கொண்டு சென்று பந்துகளைச் சந்திப்பது ஆகியவைதான் இந்திய அணி டாப் ஆர்டர் வரிசையின் பிரச்சினையாக இருந்து வருகிறது. இந்நிலையில் ஒரு முனையில் சவுத்தி, போல்ட் ஃபுல் லெந்தில் வீச, நீல் வாக்னர் ஷார்ட் பிட்ச்களை வீச இந்திய பேட்ஸ்மென்களுக்கு மேலும் சிக்கல்தான் காத்திருக்கிறது என்று தெரிகிறது. அல்லது ஒரு ஸ்பெல்லில் போல்ட் ஷார்ட் பிட்ச் வீச நீல் வாக்னர் இரண்டையும் கலந்து வீசினாலும் சிக்கல்தான்.
விராட் கோலி அன்று வெலிங்டன் தோல்விக்குப் பிறகு கூறும்போது, ‘உத்தி ரீதியாக பெரிய பிரச்சினையெல்லாம் இல்லை’ என்றார், எல்லாம் மனநிலைதான் காரணம் என்றார். ஆனால் உத்தியும் மனநிலையும் சேர வேண்டும், பாசிட்டிவ் மனநிலைக்கு வலுவான தைரியமான உத்தியும் அவசியம்.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் என்பதால் அனைத்து அணிகளும் தங்கள் வலுவுக்குப் பிட்ச்களை அமைக்கின்றன, எனவே பிட்சையோ, டாஸையோ குறைகூறிப் பயனில்லை. வெலிங்டனில் இந்தியா டாஸ் வென்று முதலில் பீல்டிங் செய்திருந்தாலும் முடிவில் மாற்றமிருக்குமா என்பது ஐயமே.
இந்நிலையில் நீல் வாக்னர் வருகை நியூஸிலாந்து முகாமில் பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT